வெள்ளி, 8 டிசம்பர், 2017

அப்படி ஒருநாள் வந்துபோனது...

டிசம்பர் ஆறுகள் தீயாய் ஓடிய 1990 களின் இறுதி நாள்கள்.

கல்யாணக்கனவுகள் சுமந்து திரிந்த கூட்டுப்புழுக்கள் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளாய் வரம்பெற்றன..
டிசம்பர் 4 கல்யாண நாளுங்க.

எதிர்காலம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்( இப்பவும் ஒன்னும் பெருசா இல்லைதான்) தாலி கட்னா போதும்னு பறந்து திரிந்து கட்டியாச்சு..
மறுவீடு,புதுவீடுன்னு பொசுக்குன்னு போன ஒருவருடத்தில் பெரியவள் மடிக்கு வந்துவிட்டாள்..

விடுப்பு,அவள் இடுப்பு,ஆர்வத்தில் கொஞ்ச நேரம் அடுப்பு, எல்லாம் முடிந்து கடுப்புகள் அவளிடம் ஆரம்பிக்கும் போது..
புலம்பெயர்ந்தேன்...

இந்த புலம் பெயர்தல் என்பது எனக்குத்தான்..ஏனெனில்...அது அவள் ஊர்...

ஒரு எல்.எம்.எல் வெஸ்பா ஸ்கூட்டரில் காலையில் ஆரம்பிக்கும் என் பழைய வேலை
அளவு நாடாவும் ..துணிகளில் ஓட்டை கண்டுபிடிப்பதுமாக கழிந்ததெனில்.
புது யுகத்தில் நகைக்கடைகளில் நாற்காலி தேய்ப்பதாயும்,கண்ணாடிகள் துடைப்பதாயும் வாய்த்தன...

2000 புத்தாயிரம் பிறந்ததோ இல்லையோ...2K பிரச்சனை என்றார்கள்..எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் 2 k
(அதான் k ந்னா குழந்தைங்கோவ்) பிறந்துவிட்டாள்...

தோளிலொன்றும் மார்பிலொன்றுமாய் தொத்திக்கொண்டு நகர்ந்த நாள்களில் பயம் வந்தது...
அவர்களை கீழே விழ வைத்துவிடக்கூடாது என்பதற்காக மட்டும் தான்...

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4 ...மிகச்சரியாக டிசம்பர் 4 லேயே வந்தது...
முகநூல் எழவெல்லாம் இல்லாத நாள்களில் அவள் இனிப்பு செய்து வைப்பாள்..
நான் சகித்துக்கொள்வேன்...

பரதேசம் போன சில வருடங்கள்..
அதற்கு முன்னே சில வருடங்கள் தவிர வந்த டிசம்பர் 4... எனக்கு டிசம்பர் 6
க்கு அண்ணனாகத்தான் இருந்தது.

திருமணம் நடந்த அந்த கல்யாண மண்டபம் இன்னும் இதே ஊரில்தான் இருக்கிறது..அந்த வழியே போகும்போதெல்லாம் இருட்டுச்சாலையில் செல்பவன் சாமிபாட்டை பாடிக்கொண்டே செல்வதுபோல் சில வார்த்தைகளை ரொம்ப ரகசியமாய் வைத்திருப்பேன்.

தவிர்க்கவே முடியாமல் சில தடவை அதற்குள் போயாகவேண்டிய கட்டாயங்களில் நான் மாப்பிள்ளை முகத்தைத் தவிர யார்முகத்தையும் பார்க்கவே மாட்டேன்.

இருக்கட்டும்..இருக்கட்டும்..

ஒற்றை வாயின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தடுமாறியவன்..
இப்போது மூன்று வாய்கள்...
மிகுந்த ஒற்றுமையாய் அவர்களின் கேள்வித்தாள் இருக்கிறது..நானும் எல்லாவற்றையும் ஒருமார்க் கேள்வியாகவே பாவித்து பதில் சொல்கிறேன்..
அவர்களும் இப்போதெல்லாம் முன்னேறி ஆன்லைன்லயே yes or No கேள்விகளுக்கு வந்துவிட்டார்கள்..

பகடிக்காய் இதை நான் எழுதுவதாய் நினைத்தாலும்..
குடும்பம் என்பது ஆகப்பெரிய மகிழ்ச்சியையும்  பல நேரங்களில் அயற்சியையும் தருவதாகத்தான் இருக்கிறது..

ஆணென்ற அகம்பாவத்தில் வைக்கும் சில அகலக்கால்கள் என்னை சாய்க்கும் போதெல்லாம் ஆறுதலாய் இருப்பது...
நம்ப மாட்டீர்கள்..
அவர்களின் ஆறுதலல்ல..திட்டுகளும் கேலிகளும் தான்...

ஆயிரம் கவிதைகள் எழுதி என்னை யார் பாராட்டினாலும்..ஒற்றை சிலுப்பலில் சில்லுச்சில்லாய் பறக்கவிடும் கலை வாய்க்கப்பெற்றது அவர்கள் திறன்..

ஒப்பீடுகள்...ஒப்பாரிகள்..
உதைத்துவிடலாமா என(அவர்களுக்கு என்னை) தோன்றும் நினைப்புகள்..
எல்லாம் தாண்டி வண்டி 20 வருடத்தை கடந்திருக்கிறது..

தோளுக்கு மேல் வளர்ந்து ஒருத்தி உலகக்கனவும்..
ஒருத்தி விமானக் கனவும் கொண்டு பறக்கிறார்கள்..

வழக்கமாய் அவளும்..

எந்த மாற்றமும் இல்லாமல் செவிகளைத்திறந்து நான்..
மல்லாந்திருக்கும் சில வேளைகளில் அவர்களின் முகங்கள் வந்து சொல்லும் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை தான்..
ஆயினும் என் கனவுகளில் அவர்களே இருப்பதை எப்படிச்சொல்ல..

காலம் எல்லாம் மாற்றும் என்ற நம்பிக்கையுடனே நகர்கிறது ஆயுள்..

ஏதோ எழுதுகிறேன்..
போட்டிகளைத்தாண்டி என் பெயரை எதில் பதிக்க..கவிதையா.கட்டுரையா..கடிதமா..கதையா?
வழக்கம் போல்
புரியவில்லைதான்.

சுயம்புவாய்..
படிப்பறிவில்லாத ஒரு பட்டினிக்குடும்பத்தின் விதையில் முளைத்தவன் நான்..
அடிகளையும் அவமானங்களையும் தாண்டித்தான் வந்தேன்.வலிகள் மரத்துப்போன காயங்கள் நிரம்பியதுதான் என் இதயம்..

எல்லாவற்றையும் மறந்துவிட்டு முகவரியில்லாத ஏதோ ஒரு மூலையில் தொலைந்து போகலாமா என்ற நேரங்களில் எல்லாம் என்னை தடுத்தாட்கொண்டிருப்பது எதுவோ..
அதற்காகத்தான் இருக்கிறேன்...

சமூக,நட்பு துரோகங்கள் என்னைச்சீண்டிப் பார்க்கும் போதெல்லாம் நான் சிலிர்க்கிறேன்..
வறுமையின் குழந்தையாய் அடித்தவரே சின்ன ரொட்டித்துண்டை நீட்டும் போது கையை நீட்டி விடுகிறேன்..

சுயத்தின் ஆழத்தில் மூச்சடக்கித்தேடும் போதெல்லாம் ஞானம் எனக்கு களிமண்ணாய்த்தான் கிடைக்கிறது..
பொம்மைகளாய் பிடிக்கிறேன்.

வரட்டும்..வரட்டும்.
இன்னும் என்னவெல்லாமோ.. என்னைத்தீண்ட ஆசைப்படும் எல்லாம் என்னைத்தீண்டட்டும்..

நான் எழுவேன்..
நிலைமாறி நான் விழநேர்ந்த வேளைகளில் எனக்கு விரல்கொடுத்த என் பிரியங்களுக்கும்.
சாகரங்களில் நான் மூழ்கிக்கிடக்கும் பொழுதுகளில் என் மூச்சின் நேரமறியும் மாய நூல்க்கயிற்றை பிடித்துக்கொண்டிருக்கும்
சம்பந்தப்பட்டவர்களுக்கும் நன்றி..

ஒரு திருமண நாள் சேதியைச்சொல்ல இப்படியெல்லாமா எழுதுவது...ச்சேய்...



























6 கருத்துகள்:

  1. முதலில் தாமதமான திருமண நாள் வாழ்த்துகள்! வாசித்து வரும்போது வாழ்த்தவா இல்லை அப்படியே கடந்து பதிவை மட்டும் சொல்லிவிட்டுப் போகலாமா என்றும் நினைக்கத் தோன்றியது. நீங்கள் இறுதி வரியில் சொன்னது போல்! ஏதோ ஒரு சோகம் அப்பியது போல் தோன்றுகிறது. இருந்தாலும் வாழ்த்துகளைப் பதியலாமே! நேர்மறை நல்லதே என்று பதிந்துவிட்டுச் செல்கிறேன்..செல்வா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மனதில் வெளிப்படுவதை இவ்வாறாகப் பதிவது மனதிற்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு மண நாள் வாழ்த்தைவிட மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்... கஷ்டமோ நஷ்டமோ குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதுதான் நல்லது. பணம் வரும் போகும் ஆனால் வாழ்க்கை???

    பதிலளிநீக்கு
  4. மதுரைத் தமிழனின் கருத்துரையினை வழிமொழிகின்றேன் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு