திங்கள், 1 ஜனவரி, 2018

நீங்க வாங்க ரஜினி...!

எல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்...

நீங்கள் வாருங்கள் ரஜினி.


ஒற்றைவேட்டி காயவைத்து அணிந்து கொண்டு சமூகசேவை செய்த பைத்தியக்காரர்களையும்,
அந்திம காலத்தில் அரசுமருத்துவமனையில் கிடந்த பிழைக்கத்தெரியாதவர்களையும் எத்தனை நாள்தான் பேசிக்கொண்டிருப்பது ..
நீங்கள் வாருங்கள் ரஜினி.

மொழிகளின் திணிப்பை மூர்க்கமாய் எதிர்த்து எரிந்துபோனவர்கள் பெயர்களாய் மட்டுமிருக்க  தலைமைகள் பிழைத்ததையும் பார்த்துவிட்டோம்..

மூத்திரப்பையை சுமந்துகொண்டு 94 வயதுவரை இருட்டிருக்கும் சந்துபொந்தெல்லாம் விரட்டிக்கொண்டிருந்த தாடிக்கிழவனை ஈ.வே.ரா என்று தெலுங்கனென்றும் விமர்சிக்கும் அவலங்களும் பழக்கமாகிவிட்டது...

கருப்பு காந்தியையும் மண்ணைக்கவ்வ வைத்த தேர்தல் ..குக்கராய் விசிலடித்தையும் பார்த்தோமே...

விடுதலைப்போரின் நாளில் தொடங்கி இற்றைவரை
தேசத்திற்காய்   நடந்து கொண்டிருக்கும் நல்லகண்ணுக்கு உங்களைப்போல் வேகமாய் பேசவே முடியவில்லையே...

சிஸ்டமே கெட்டுப்போயிருக்கும் உங்கள் தீர்க்கதரிசன வேளைகளில் ...கோஷம் போட்டு...போராடி...சிறை சென்று வருவதெல்லாம் என்ன டிசைன்?

வந்தோரை வாழவைக்கும் எங்கள் தேசம் தான்...
இன்னும் எத்தனை பேரையும் தாங்கும்?

அதிகார ஆசையே இல்லாமல் அரசியலுக்கு வருவதாய் சொல்லும் உங்கள் வழி தனிவழியாய் இருந்தாலும் பரவாயில்லை..
புதுவழி...ஆஹா...அபாரம்..

சித்தர்கள் ,ஞானிகள்...யோகிகள் பிறந்த மண்..  உலகினுக்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்ததை கீழடி சொல்லும் மேலோர் வாழ்ந்த பூமி.

மீத்தேனுக்கும்,அணு உலைக்கும்,ஜல்லிக்கட்டுக்கும் நாங்கள் போராடிக்கொள்கிறோம்..
நீங்கள் ஆன்மீக அரசியலை வளர்த்தெடுங்கள்..

அன்பின் ரஜினி..
நீங்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு எந்த நெருடலும் இல்லையென்று பொய் சொல்ல முடியாவிட்டாலும்...நாட்டின் அரசியலமைப்புச்சட்டம் தந்திருக்கும் உரிமை உங்களைப்பொன்றோர்க்கும் உண்டென்பதையும் மறுக்கமுடியாது..

தமிழகத்தின் கெட்ட நேரத்திலும் ஒரு நன்மையாய்..உங்களை வார்த்தெடுத்திருக்கும் பட்டறையின் வாசம் ஊருக்கும் தெரிந்திருக்கிறது.

இங்கே ஓட்டுக்கு எத்தனை கொடுத்தாலும் மக்களின் மனங்கள் ஒவ்வொன்றும் விக்கிரமாதித்தனின் நீதி மேடைகள் தான்...

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழகத்தை நம்பியிருந்தால் நீங்கள் தனியாகவே வந்திருக்கலாம் ரஜினி..

உங்கள் ஆலய பிரவேசங்கிடையே ஓகிப் புயலடித்த குமரிக்கரைப்பக்கமும் இருந்திருக்கலாம்..

நதிகளை இணைக்க குரல் கொடுத்த நீங்கள் காடுகளை அழித்ததையும் சொல்லியிருக்கலாம்...

சொல்ல இன்னும் எத்தனையோ இருக்கிறது..

திராவிடம் வேரோடிப்போன எங்கள் பூமியில் ஆன்மீகமும் பாதயாத்திரைகளும் இருக்கும் தான்..

நீங்கள் வேர்களை வெட்டிவிட்டு பூக்களை காதில் வைக்கப்பார்க்கின்றீர்கள்..

இனத்தை...மதத்தை..மாநிலத்தை..
எந்த மக்கள் போராட்டம் குறித்தும்,மொழியை தாண்டி நீங்களும் இந்த மாநிலத்தை ஆளலாம் என்ற உங்கள் நம்பிக்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் தானே..?

நீங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும்,யாருக்கோ விளம்பர தூதுவராக முன்னெடுக்கும் இந்த நேரத்திலேனும் தூங்கிக்கிடக்கும் தமிழகம் கொஞ்சம் கண்விழிக்கலாம்...
அதற்காகக்கூட நீங்கள் வரவேண்டும் ரஜினி...
வாழ்த்துகள்...9 கருத்துகள்:

 1. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க செல்வா

  பதிலளிநீக்கு
 2. உறங்கிக் கிடக்கும் தமிழகத்திற்கு விழிப்பு வேண்டும் தானே. தேவன் வருவாரா?

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரவேற்பு
  நல்ல கருத்து - ஆனால்
  மக்கள் சிந்திக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு