வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இவர்களா தீவிரவாதிகள்..?



"அவரை வாசு என்றே அழைக்கலாம்"
-சுப்ரன்ஷீசௌத்ரி


தமிழில்..வெ.ஜீவானந்தம்..
எதிர் வெளியீடு..


பொதுப்புத்தியில் ஏற்றிவைத்திருக்கிறோம், அங்கீகாரமில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்களெல்லாம் தீவிரவாதிகளென?

இல்லை என்று சம்மட்டி கொண்டு அடித்திருக்கிறது களத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அவர்களோடே பயணித்திருக்கும் ஒரு பேனாவின் குரல்..

நக்சல்பாரிகளெனும் ஒரு அமைப்பு தோன்றிய விதம்..
அதன் தீவிரமான கொள்கைகளுக்காக தன்னுயிரை ஈந்த முன்னோர்கள்...

அட்டைகளும்,விலங்குகளும் நிறைந்த சூரிய வெளிச்சமும் நிறைய புகாத ஒரு மலைவெளியில் அவர்களின் சமூக தவம் ..
சொகுசான நம் வாழ்க்கையை பல கேள்விகள் கேட்கின்றன...

சட்டீஸ்கரின் கோண்டு மொழி அதிகமாய் பேசும் பழங்குடியின மக்களின் சீரழிந்த வாழ்க்கை..

பொறுக்கமுடியாமல் அவர்கள் கிளம்பும் போது அவர்களை ஆற்றுப்படுத்தும் சமூகக்குழுவிற்கு சமூகமே வைத்த பெயர்தான் தீவிரவாதிகள்...

இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய இன ஒழிப்பு இலங்கையில் என்பதாய் மார்பில் அடித்துக்கொண்டு பொய் அழுகை செய்துகொண்டிருக்கிறோம்..
இல்லை நண்பர்களே!!
நம் தேசத்திலேயே கொள்ளை பகாசுரக்கம்பெனிகளுக்காக அரசாங்கம் செய்திருக்கும் வேலை இலங்கையின் கொடுமைக்கு கொஞ்சமும் குறைவில்லை..

ரயிலையே பார்த்தறியாத,
ரயிலேறுவதையே வாழ்வின் கனவாய்க்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டமே சுதந்திரம் வாங்கிக் கிழித்த ஒரு தேசத்தில் இன்னுமிருப்பது காரி உமிழத்தக்க அவமானமில்லையா?

இலங்கையின் நம் மகளிர் காமக்கொட்டங்களில் பழியானதை காணொளிகளில் கண்டு முகநூல்களில் பொங்கினோமே!

இந்திய சட்டீஸ்கர் மலைப் பெண்களை இழுத்துக்கொண்டு போய் கற்பழித்து மயிரை வெட்டி,தீவிரவாதியாய் ஆடைகள் மாற்றி எறிந்து போனால் புழுவுக்கும் வீரம் வருமே?
அவர்கள் மனிதர்கள் அல்லவா?

அவர்களின் நியாயமான வாழ்வுரிமைக்காக அவர்களோடே சேர்ந்து போராடும் தன்னலமற்ற மனிதர்களைய்த்தான் நமக்கு தீவிரவாதிகளாய் அடையாளம் காட்டுகிறார்கள்.
தவிர்க்க முடியாததாய் அவர்கள் சொல்லும் சில அழிப்புகள் ஊடகங்களில் வீங்கும் அளவுக்கு..
அமைதி திரும்புவதற்காக அரசு செய்யும் கொலைகள் எத்தனை வெளிவந்திருக்கிறது?

பி.பி.சி யின் கள நிருபராய் பணியாற்றிய நூலாசிரியர் பல்லாண்டுகளாய் நக்சல் குழுக்களுடன் கலந்து அவர்களின் குரலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்..

கண்முன்னே குடும்பம் சீரழிந்து அழிக்கப்பட்ட உடன் மாவோயிஸ்டுகளோடே தன்னிச்சையாய் சேரும் ஆண்களும் பெண்களும்..சோகமும் கோபமுமாய் அலையும் காடுகளில் எரிந்துகொண்டிருப்பது வனங்களில்லை...
அவர்களின் ஆன்மாக்கள்...

இந்திய கனிமவளங்களில் பெரும்பாண்மையை தனக்குள் வைத்திருக்கும் அவர்களின் பூமியை மோப்பமெடுத்த டாடா,எஸ்ஸார் போன்ற கொள்ளையர்கள் அந்த மண்ணின் மக்களை வெளியேற்ற அரசாங்கத்தின் துணை கொண்டு செய்யும் வேலைகளைத்தான் நியாயமாக தீவிரவாதம் எனச்சொல்லவேண்டும்.

கண்முன்னே தெளிந்து ஓடிக்கொண்டிருந்த அவர்களின் நதி இரும்புக்கசடுகளை சுமந்து கொண்டு ரத்தநிறத்தில் ஓடுவதை எப்படி அமைதியாய் தியானம் செய்து பார்ப்பார்கள்?

ஒரு நேர்மையான போராட்டக்குழுவை அதிகாரமே மாற்றுக்குழுவைக் கொண்டு சல்வா ஜுதும் எனப்பெயரிட்டு செய்யும் அழிப்பு வேலைகள்..

நாட்டின் பெரும்பாண்மை பேசும் கோண்டு எனும் அவர்களின் தாய்மொழியை அழித்து இந்தியை மட்டும் போதிக்கும் பள்ளிகள்,வானொலிகள்,
செய்தித்தாள்கள்,ரேசன் பொருட்களுக்காய் 40 கிலோமீட்டர் நடக்கவேண்டிய அவலம்...
இடையில் அவர்களை மடைமாற்றம் செய்யத்துடிக்கும் ஆசிரமங்கள்,
தேவாலயங்கள்.

இத்தனை கொடுமைகளையும் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்புதான் மாவோயிஸ்ட் என்பதாய் வரிக்குவரி ஆதாரங்களுடன் வந்திருக்கும் இந்த நூல்..
எனக்கு ஒரு வானத்தை திறந்துவைத்திருக்கிறது.

ஆக,
எந்த அரசும் மக்களுக்காக இல்லை.
பாலும் தேனும் ஒழுகும் இவர்களின் வார்த்தைகளின் பின்னே ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்காகவே இயங்குகிறது.

திட்டங்கள் எளிய மக்களுக்காக எனப் புழுகும் இவர்கள் அதனை செயல்படுத்தும் அதிகாரத்தை, சிறுபூசாரிகளின் கொள்ளைக்கே துணைபோவதை நூலாசிரியர் தெளிவாக்குகிறார்...

இந்த நூலை வாசிக்கும் வேளையில் மனம் பல கவலைகளில் தோய்ந்திருந்தது...
வாசித்து முடித்த பொழுது என் கவலைகள் ஒரு மலைக்கு முன்னே இருக்கும் மடுவாய் குறுகிப்போனது..

ஆசிரியரின் கடினமான உழைப்பும்...
கானக மக்களின்  சிரமான வாழ்க்கையும்...
அவர்களினூடே நம்பிக்கையையாய் விரியும் ஒரு போராட்டக்குழுவின் கட்டுப்பாடான நகரும் நாள்களும்..

அந்த மலையில் கொஞ்சமேனும் ஒட்டிக்கொண்டிருக்கும் பச்சைக்குப் பின்னே உரமாயிருக்கும் உதிரத்தின் வாடை உங்களுக்கும் அடிக்கலாம்...

வாசுவை நீங்களும் வாசிக்கலாம்..









9 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம். வாசிக்க முயல்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், நலமா ?

    ஜனநாயகம், மக்களின் ஆட்சி என்றெல்லாம் மார்த்தட்டும் தேசங்கள் அனைத்துமே இறையாண்மைக்கு ஆபத்து என்றால் சொந்த மக்களையும் கொன்றொழிக்க தயங்குவதில்லை !

    தங்களின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. இலங்கை தொடங்கி, வியட்நாம், சிரியா போன்ற நடுகளின் மனித உரிமை மீறல்களையெல்லாம் கண்டித்தோ அல்லது கண்டிப்பது போலவோ அறிக்கை விடும் இந்தியாவின் அடக்குமுறை முகமும் மிகவும் கோரமானதே !

    தேசம் உனக்கு என்ன செய்தது என கேட்காதே..., தெசப்பற்று, தேசிய பெருமை என்றெல்லாம் பாமரனிடம் பரப்பப்படும் பம்மாத்துகளுக்கு பின்னே நீங்கள் குறிப்பிட்ட அனைத்து அவலங்களும் ஒளிந்திருக்கின்றன !

    இதையெல்லாம் உரக்க சொன்னால் உங்களை " anti indian " என குற்றம்சாட்ட ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது !

    நன்றியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிக ஆழ்ந்த வாசிப்பும்...கருத்துக்களும்...

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம் / நூலறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கண்ணோட்டம்... நன்றிகள் பல ..

    பதிலளிநீக்கு