திங்கள், 19 பிப்ரவரி, 2018

மூக்குத்தி காசி-(மனிதம்)

அந்த மீசைக்காரரை பார்க்கும்போதெல்லாம் நான் பின்வாங்கிவிடுவேன்..
அது அச்சமோ அல்லது கூச்சமோ காரணமாய் இருக்கலாம்..
ஸ்வர்ணலதாவின் மரணத்திற்காய் அழுத கதையை ஸ்டாலின் சரவணன் வழி கேள்விப்பட்டபோது மனசு கொஞ்சம் இளக்கமானது..

தன் படைப்பொன்றிற்காய் சொந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்து  வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் சோகம் இத்தனை வலியானதாய் இருக்குமென்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன்...

மூக்குத்தி காசி(முப்பாலி) என்னும் இந்த நூலையும் அவரிடம் கடனுக்காய் நேற்று முன்னிரவில் பெற்றதில் இருந்து பேருந்திலும் இதோ வாசித்து முடித்த இந்த நிமிடம் வரை என்னை ஆட்டுவிக்கும் வார்த்தைகளை நான் இப்படி இறக்கிவைக்கவில்லை எனில் ஒருவேளை எனக்கும் பால் கட்டிப்போகும் அவஸ்தை நேரிடலாம்...

சின்ன சின்ன கதைகளா?
நாவலா?
இல்லை.. முருகேசன் அவரின் கனவின் அவாக்களை எழுத்தின் வழி சூடாற்றுகிறாரா?
56" இஞ்ச் அகலங்களால் படும் அவலங்களை ...டயர் நக்கி மங்குனிகளை கிழித்தெறிந்து விடத்துடிக்கும் சாதாரண இயலாத ஒரு மனிதனின் மனக்குமுறல்களை மனம்கடத்தி இருக்கிறாரா?
எல்லாக்கேள்விகளுக்கும் பதிலாய் ஆம் எனில்..இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...

ஆதவன் தீட்சண்யாவின் அட்டகாசமான முன்னுரை..
நூலின் பிரதான வாசலாய் முருகேசனின் தன்னுரை..
புலம்பெயர் மனிதனின்- மீன்முள் மாட்டிய தொண்டையாய் நினைவு இடறல்கள்....

பாத்திரங்களின் பெயர்கள் அத்தனைப் பொருத்தமெனில்...
வார்த்திருக்கும் வேலை தேனீர்க்கடை!!..உங்களுக்கு தேனீர்க்கடைகள் அவ்வளவாய் மறக்கவியலா நாள்களில் அதனையே எடுத்திருப்பதில் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை..எல்லாம் முகத்துக்கு நேரான வெளிக்குத்துகள் தான்...

நிந்தையூரின் தேனீர்க்கடையில் எச்சில் கிளாஸ் கழுவியும் , டீ போட்டும் வாழும் எளிய மனிதன் சின்னதாய் ஒரு கூலி உயர்வுக்காய் அவமானப்படுவதும்,தன் அறச்சீற்றத்தை கற்களாய் மாற்றி எறிவதும்..சாதியம் தலைவிரித்தாடும் இயல்பான கிராமங்களின் தோற்றத்தை அப்படியே வரைந்து காட்டியிருப்பதும்..

கரகமாட வந்த திலகவதி தெய்வமாய் தெரிவதாய் முடியும் முதல் அத்தியாயம்..
காசி என்னும் நாயகனின் பார்வையை நமக்குள்ளும் நகர்த்தும் லாவகம்..

பக்கங்கள் நகர்வது தெரியாத அழகில் நவீனக்கவிஞனொருவனிடம் நாயகன் படும் அவஸ்தைகள் அத்தனை பகடி..
வளர்ப்பு நாயின் உணவுக்காய் வங்கிக்கணக்கு என்னோடு இணையத்தில் பிச்சை எடுத்த எவனோ ஒருவனின் முகம் எனக்கு வந்தது...நீங்கள் வாசிப்பீர்களெனில் உங்களுக்கும் வரலாம்...

எளிய வாசகனின் அன்பை ஆராதிக்கத்தெரியாத மூடன் எப்படி எழுத்தாளனாய் மிளிரக்கூடும்?

ஒருநாள் முதல்வன் போல்..
காசி, ஒருநாள் நீதிபதியாகி பகைமுடிக்கும் பகுதியில் ஓடிப்போய் அணைத்துக்கொள்ளத்தூண்டும் அன்பு..

இரந்து குடிக்கும் நாய்கள் இரண்டு..அன்பில் சுரக்கும் முலைக்காம்போடு கசக்கி தொடைகளில் உதிரம் வழிய நீதி கேட்டு போகுமிடங்களில் எல்லாம் மிதி வாங்குகையில் வாசிக்கும் எல்லோரும் வலிதான்....

மூக்குத்திக்காசி யாரென நீங்கள் அலைந்து தேடவேண்டிய அவசியமிருக்காது..
கேள்வி கேட்கத்தெரிந்த,
கொஞ்சமாய் ,
சுயமாய் சிந்திக்கத்தெரிந்த,
உள்ளொன்று வைக்கத்தெரியாமல் முகத்துக்கு நேரே துப்பி விடுகின்ற ஆண்மையுள்ள எல்லோரும் மூக்குத்திக்காசிதான்..

தாயே தாயே என அழுது பாடிய பட்டினத்தார்...
பெண்ணையும்,அவள் அவயங்களை புண்ணையும் விட விடக் கேவலமாய்ப் பாடியதை வார்த்தைச்சவுக்குகளால் வீசும்போது கழன்று விழுகிறது பட்டினத்தானின் ஒட்டுக்கோவணமும்..ஒட்டிக்கொண்டிருந்த அவர்மீதான  அனுதாபமும்..
பட்டினத்தார் மட்டுமல்ல நண்பர்களே!
விவேகானந்தரையும் விட்டுவைக்கவில்லை..
மூக்குத்திக்காசி அதனை நியாயப்படுத்தி இருப்பதை என்னால் மறுக்கவும் முடியவில்லை...

இந்நூலுக்காய் எடுத்துக்கொண்டிருக்கும் தரவுகள் ,சம்பவங்கள்,
சாட்சிகளின் வலிகள்,உழைப்பின் தீவிரம் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது.

முகநூலில் வழியும் சாதியச்சாக்கடையின் முடைநாற்றம் அயலக கணினிப்பொறியாளனுக்குள்ளும் ஓடும் அவலம்...
அவலம் தான்...

ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பை மூச்சுக்காற்றின் வழி சொல்லியிருப்பது விந்தை...
ஆயினும் அதில் அண்ணார் ஒருவரின் "கோட்" வரை நுழைந்திருக்கும் முருகேசனின் பேனா..அருமை...

ஹிட்லருக்கும் தனக்கும் ஒற்றுமை இருப்பதாய் பிதற்றும் ஒருவனின் கற்பனையில் கடைசி வரியில் தெறிக்கிறது..
ரகசியம்...

என்.ஜி.ஓக்களின் தந்திரங்கள்,பின்னிருக்கும் மந்திரங்கள்..இனிப்பு தடவி வரும் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் ஆலகாலங்கள் என ஏகப்பட்ட இருட்டுகளை வெளிச்சப்பொட்டிட்டு இருக்கும் பகுதிகள்...

ரயிலின் சங்கிலி பிடித்திழுத்து பாலூட்டும் ஒரு பெண்ணின் தாய்மைக்கு தரும் மனிதம்..போபாலின் கோர முகத்தை சொல்லும் வேளையில் மூச்சுமுட்டுகிறது..
சின்ன குழந்தை அக்பருக்கு பாலூட்டும் தாய்மையில் வீசும் வாசம்....ஆசம்...

நறுக்கி எறிய எத்தனை முயற்சிகள்..
ஆயத்தங்களுடனும் ,
ஆயுதங்களுடனும் காசி அறுத்த ஆண்குறி குப்பைக்குள் போவதை அத்தனை மகிழ்ச்சியுடன் வாசிக்கிறேன்..

நிந்தையூரில் தொடங்கி அந்த ஊரிலேயே ஆற்றின் மணல்வெளில் முடியும் நூலில் நான் மௌனமாய் வெளியேறுகிறேன்..

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவுகள் உண்டு.
ஒரு சாமான்யனாய் எனக்குள்ளும் இந்த சமூக அவலங்களை, சாதிய,அரசியல் கொள்ளைகளைக்காணும் போதெல்லாம் உறக்கம் வராமல் புரளும் வேளைகளில் எண்ணெய்ச்சட்டிகளில் புரட்டி எடுப்பதுண்டு..
ஆயினும் அவைகளை அப்படியே எழுதும் துணிச்சல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை..
புலியூர் முருகேசனுக்கு அது இயல்பாகவே வாய்த்திருக்கிறது...

மடங்கள் செய்யும் மடத்தனத்திற்கு அதன் முதலாளிகள் ஒரு காரணமெனில் ஆட்டுமந்தைகளாய் கைகளில் பட்டைகட்டிக்கொண்டு உண்டியலில் காசைப்போடும் நாமும் ஒரு காரணம் தான் என்பதை யார் மறுக்கக்கூடும்..

எழுத்தாளன் கிடைக்கும் "சைக்கிள் கேப்" களிலெல்லாம் அடித்து துவைத்திருப்பதன் கோபம் புரிகிறது..
ஆயினும் பல இடங்களில் ஏதோ ஒரு பிரச்சார நெடி இருப்பது சிறிய உறுத்தலாகவே எனக்குப் படுகிறது..

இவை கதைகளா? சம்பவங்களின் நீட்சியா என்ற எந்த ஒரு வாய்ப்பும் கொடுத்தாத எழுத்தாளனின் தப்பிக்கும் மனோபாவம்
நினைத்ததை எல்லாம் எழுதிவிடத்துடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறது..

மெல்லிய நகைச்சுவை உணர்வைத்தூண்டும் பல சொல்லாடல்கள்...

வரும் காலங்களில் ஸ்வைப்பிங் மிஷினாய் புழங்கப்போகிற இடம்,
நிந்தையூரின் டூரிங் திரையரங்கில் காட்டப்படும் பிட் காட்சிக்காய் அமைதியாய் இருக்கும் ரசிகர்கூட்டம்,
டாஸ்மாக் கடைகளின் சரக்கு வகைகள்,..இன்னபிறவென பல சொல்லாடல்கள் நேர்த்தியும்...இயல்புமாய்...

மொத்தத்தில் இந்த நூலை வாசித்து முடித்தவுடன் நான் பெருமூச்சுடன் இருக்கிறேன்...

இந்துக்கள் பொதுவாய் வாழ்வின் ஒருமுறை காசிக்குப்போவதை பெருமையும் கடைமையும் என்பார்கள்...
புலியூர் முருகேசன் தெரிந்தோ தெரியாமலோ நமக்குள்ளே இருக்கும் காசியே புனிதமும் ,மனிதமுமானதாய் நிறுவியிருக்கிற வகையில் வென்றிருக்கிறார்..
வாழ்த்துகள் தோழர்...









5 கருத்துகள்: