திங்கள், 22 பிப்ரவரி, 2016

காந்தியின் காந்திகள்...1


அன்பின் சக்திக்கு, 

காந்தி என்னும் ஒற்றை மனிதன் இந்த தேசத்தின் அடையாளமாய் காணப்படுகிறார். 

அந்த அரையாடை மனிதரின் கொள்கைகளில் 

நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவரின் கொள்கைகளின்பால் அவர் கொண்ட உறுதி போற்றப்படவேண்டியது.. 

நான் காந்தியைப்பற்றி உனக்கு சொல்லப்போவதில்லை. 

அவரின் சாதனைத்தேருக்கு ஆரங்களாக. 

சரித்திர வெளிச்சம் சரிவர பாய்ச்சப்படாமல்.. 

தியாக வேள்விக்குள் மறைந்தே போன பலரும் குறிப்புகளாகவே வரலாற்றுக்குள் தங்கிப்போனார்கள் 

அபூர்வமாய் ஒரு நூல் 12 சீடர்களை சொல்கிறது... 

ஏசுவின் சீடர்களை விடவும் குறைந்தவர்களல்ல இவர்கள். 

சின்ன சின்ன செய்திகள்.. 

தேவைப்படுமாயின் சில தேதிகள். 

இந்த கடிதம் உன்னை இன்றைய பலரோடு ஒப்பிடவைத்து.உனக்குள் சிறு அதிர்வை ஏற்படுத்தினாலும் எனக்கு மகிழ்வே.. 

ஜே.சி.குமரப்பா 

1892 ஜனவரி 4 இல் தஞ்சையில் ஒரு கிருஸ்தவ குடும்பத்தில் பிறப்பு.. 

1913- லண்டனில் நிறுவனத்தணிக்கை படிப்பு. 

1924-மும்பையில் தனி நிறுவனம். 

பின் அமெரிக்காவில் வணிக நிர்வாகப்பட்டம். 

பிறந்தது முதலே நகர்மய வாழ்க்கை. 

தாய் எஸ்தர் தந்த அறம் சார்ந்த வாழ்க்கை. 

எந்தப்பணியை ஒருவன் செய்தாலும் தன்னுடைய செயலால் ஏற்படக்கூடிய சமூக விளைவை எண்ணிப்பார்க்க வேண்டும். 

இந்திய மண்ணில் ஆங்கிலேயச்சுரண்டலில் பதறும் மனம். 

நண்பர் ஒருவரின் தூண்டுதலால் காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்திக்கிறார். 

ஒரு மரத்தின் கீழ் நூற்றுக்கொண்டிருந்த ஞான ஒளியில் தன்னை இழக்கிறார். 

காந்தியும் சாதாரண ஆளில்லை..மனிதனின் திறன் அறிவதில் வல்லவர்.. 

பின்னொரு நாளில் எழுதுகிறார்"குமரப்பா பண்படுவதற்காக என்னிடம் வரவில்லை...பக்குவப்பட்ட பின் தான் என்னிடம் வந்திருக்கிறார்" 

யங் இந்தியாவில் பல கட்டுரைகளாய் விரிகிறது குமரப்பாவின் கனவுகள்.. 

1931- முதல் சிறைவாசம்.. 

கிராமங்களின் முன்னேற்றத்திற்காய் பல முன்னெடுப்புகள். 

தேவைப்படும் பல இடங்களுக்கும் செல்லும் உதவி.. 

கணக்குகளில் காட்டும் கண்டிப்பு..

1934-பீகார் பூகம்ப துயர்துடைப்புப்பணி. 

ஒரு பணியாளருக்கு நாளொன்றுக்கு மூன்று அணாக்கள். 

காந்தி பரிவாரத்துடன் வருகிறார்... 

அனுமதிக்கப்பட்ட தொகைக்குமேல் முடியாது. 

காந்தி அவர்களே  அவர்களின் காருக்கான பெட்ரோல் செலவை ஏற்க வேண்டும்.. 

ஏன் என்கிறார் காந்தி.. 

"இது துயர் துடைப்புக்கான மக்கள் பணம்" 

காந்தி சிரித்தபடி ஒத்துக்கொள்கிறார். 

மற்றொருநாள்.. 

கணக்கில் சில அணாக்கள் வித்தி்யாசம் வர அறையை சாத்திக்கொண்டு அலசிக்கொண்டிருக்கிறார். 

காந்தி வெளியே காத்துக்கொண்டிருக்கிறார். 

ராஜேந்திர பிரசாத் சொல்கிறார் 

" காந்திஜீ! குமரப்பா பணியி இருக்கும் போது சிங்கம் போலிருப்பார்..பார்க்கமாட்டார் யாரையும்.." 

இரவு தங்கி காலையில் காந்தி குமரப்பாவிடம் பேச வருகிறார். 

"ஆண்டுக்கூட்டதின் பணியில் இருப்பதால் பேசமுடியாது" 

"நான் வாரணாசியிலிருந்து வருகிறேன் ..இன்றிரவு சபர்மதி செல்ல வேண்டும்" 

"இப்போது முடியாது.." 

காந்திக்கு கோபம் வரவில்லை..காகிதங்களை மகாதேவதேசாய் மூலம் குமரப்பாவிடம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார் 

என்ன துணிவு சக்தி.. 

எப்படிப்பட்ட நேர்மை.. 

எத்தனை பொறுமையான தலைமை.. 

கிராம சேவைக்காக மந்திரிபதவியை வேண்டாம் என்றிருக்கிறார் 

தனக்கென வாழாமல் நாட்டுக்கென வாழ்ந்த தியாகம். 

1948-காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்த அதிர்ச்சியில் இரண்டுநாள்கள் பார்வை இழந்து மீண்டிருக்கிறார்.. 

காந்தி நிதி சேர்ப்புக்கு அவர் சொல்லியிருக்கும் வரிகள்.. 

அற்புதமானவை. 

நிதி என்பது பணமல்ல..ஆன்மாக்களை சேருங்களென. 

அந்திச்சூரியன் மதுரை காந்தி நிகேதனில் ஓய்வெடுக்கிறது.. 

குன்றிய உடல் நலம். 

1960 ஜனவரி 30 

காலையில் ஒரு பெண்.இன்று காந்தியின் நினைவுக்கூட்டம் என்கிறார்.. 

கட்டாயம் கலந்துகொள்வேன் என்கிறார். 

நடக்கமுடியாத இவரால் எப்படி? 

குழப்பத்தில் போகிறார் அந்தப்பெண்மணி.. 

ஆனால்.. 

இவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் 

காற்றோடும்..காந்தியோடும்.. 

இன்றைய தலைவர்கள் யாரோடேனும் ஒப்பிட முடிகிறதா சக்தி... 

இன்னும் சிலரை இனி பார்க்கலாம்.. 

அன்புடன் 

செல்வக்குமார். 

20 கருத்துகள்:

 1. குமரப்பாவைப் பற்றி அறிந்திருக்கின்றோம். உங்கள் வரிகளில் அவரைப் பற்றிய அருமையான தகவல்கள். இரத்தினச் சுருக்கமாக...அருமை.

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள பதிவு ஐயா.இன்று தான் நான் குமரப்பாவைப் பற்றி தெரிந்துக் கொண்டேன் ஐயா.நன்றி.முடிந்தால் எனக்கு சேக்குவார் பற்றி சுருக்கமாக சொல்லுகிறீரா ஐயா..??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வைசாலி..உன் பதிவுகளையும் கூர்ந்து படிக்கிறேன்..பங்குச்சந்தை பற்றிய உன் பதிவுகள் அருமை...
   சே குவேரா பர்றி விரைவில் எழுதுகிறேன்..உனக்காகவே...

   நீக்கு
 3. நெகிழ்ச்சியான தகவல்கள். இனி இப்படிக் காண முடியாத மனிதர்(கள்)
  தம +1

  பதிலளிநீக்கு
 4. குமரப்பா போற்றுதலுக்குஉரியவர்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 5. 'குமரன்' மற்றும் 'குமரப்பா'க்கள் செய்த தியாகத்தில் வந்தது சுதந்திரம் ,ஆனால் ,சரித்திரத்தில் காந்தி மட்டும் தான் முன்னிறுத்தப் படுகிறார் !இது ஒரு இருட்டடிப்பு தான் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் பல இருக்கிறது....வரலாறு என்பதே பொய்யோ எனப்படுகிறது...முடிந்த அளவு உண்மையை தேடுவோம்...

   நீக்கு
 6. ஜே.சி.குமரப்பா பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டது, கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்தான். அவர் வாழ்ந்த வீடு, அவர் உருவாக்கிய பள்ளி, அவர் உருவாக்கிய தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றை பார்த்து அதைப் பற்றி எழுதியும் இருக்கிறேன். இன்னமும் அவரின் வழிகாட்டுதலில் அந்த கல்விக் கூடங்கள் இயங்கி வருவது பெருமையான விஷயம்.
  த ம 8

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான அருமையான
  அவசியமான முயற்சி
  தேர்ந்தெடுத்துள்ள கவித்துவமான
  நடையும் அருமை
  பகிர்வுக்கும் தொடர்வும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு