வியாழன், 11 பிப்ரவரி, 2016

மறையாத சூரியன்..

அன்பின் சக்திக்கு .

நீண்ட காலத்துக்குப் பின் ஒரு புத்தகம் படித்தேன்..
படிப்பதற்கான புத்தகங்களின் அடுக்கைப் பார்த்து அலைபேசி தடவிய விரல்களுக்கும்  வெட்கம்  வந்துவிட்டது.

வாசிப்பு கொஞ்சம் குறைய ஆரம்பித்ததை ஒரு புத்தகம் மீட்டுத் தந்திருக்கிறது.

ஒரு சூரியனை உனக்கு அறிமுகப்படுத்த மெழுகுவர்த்தி ஏந்தி வந்துள்ளேன்.

உண்மை சக்தி..

அலைபேசியும் போதையாய்த் தான் மாறியிருக்கிறது. கிடைக்கும் சிறிய மணித்துளியிலும்  செல்போன் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்துவிடுறது குரங்கின்  விரல்களாய்..

வாசிப்பு இல்லாத எந்த வரியும் நேசிப்புக்கு  உகந்ததாய் இல்லை.

புத்தகத்தை அறிகப்படுத்துவதோடு உனக்கு அந்த மனிதனையும் சொல்ல வேண்டியிருக்கிறது .

ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் எல்லையான ட்ரியலில் 1818 மே 5 ஆம் தேதி பிறந்து உலகே பின்பற்ற வேண்டிய ஒப்பற்ற தத்துவத்தை தந்த கார்ல் மார்க்ஸ் என்னும் மனிதன் பற்றிய புத்தகம் .

1943ல் வெ.சாமிநாத
சர்மா  என்னும் அற்புத அறிஞரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் .

பொதுவாய் கம்யூனிஸம் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள்  வறட்டுத்தனமாகவும், வாசிப்பதற்கு  அலுப் பூட்டுவதுமாகவே இருப்பதாக சொல்வாய் .

ஆனால் இதன் ஆசிரியர் இந்த புத்தகத்தை வாசிப்புக்கு எடுத்த பின் கீழே வைக்க விடவில்லை

வரலாற்றோடு , தன் நெஞ்சில் தோன்றிய உணர்ச்சிகளையும், பச்சாதாபங்களையும், தகுந்த மற்றவர்களின் மேற்கோள்களோடு தந்திருக்கும் விதம் அலாதியானது .

காரல் மார்க்ஸ் என்னும் மாமேதையின் வாழ்வில் அவன் அடைந்த துன்பங்கள் எடுத்துக் கொண்ட பணிக்காக இழந்தவை .

எங்கிருந்தோ வந்தவனாய் வந்த ஏங்கல்ஸ் இறுதி வரை கட்டிக்காத்த தோழமை ...

காதல் ஒன்றை
மட்டுமே வைத்துக் கொண்டு விட்டு எல்லாவற்றையும் இழந்து நின்ற கோமான் வீட்டு செல்ல மகள் ஜென்னி .

வாசிக்க,வாசிக்க இன்றைய நம் அரசியல்வாதி எனும் கேவலமான பிறவிகள் மீது அப்படி ஒரு ஆதங்கம் வருகிறது.

1840 களில் அவன் தேடித் தேடி பெற்ற வாசிப்பு அனுபவங்கள் எல்லாவற்றையும் பின்தள்ளியிருக்கிறது.

24 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவன் ஒரு போதும் அதைப் பயன்படுத்தியதில்லை.
முப்பது வயதில்  நரைத்துப் போகும்  இளமையில் வறுமைக்குத் தின்னக் கொடுத்திருக்கிறார் குடும்பத்தை .

தன் விருப்பங்களை எழுத பத்திரிக்கை வேண்டுமென அழித்திருக்கிறார் அனைத்தையும் .
ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை தந்த இண்டு பவுனுக்காக காத்துக் கிடந்த்திருக்கிறார்.

தன் மேல் கோட்டை அடகுவைத்து விட்டு அடைந்து கிடந்திருக்கிறார் அந்த ஞானி வீட்டுக் கூட்டுக்குள் .

ஜென்னி மாதரசி எழுதுகிறாள்.. பாலில்லா மாரில்  பிள்ளை கடித்துத்  துளிர்த்த ரத்தமும்
பாலுமெனக் குடித்த கதை.

செத்துப் போன பிள்ளைக்காய் சவப்பெட்டி வாங்க முடியாமல் அழுதிருக்கிறது அந்த இரவு முழுதும் குடும்பம்.

எதையெல்லாம்  அடகு வைக்க .. பிள்ளைகளின் விளையாட்டு சாமான்கள், வீட்டின் பாத்திரங்கள். குழந்தையின்  காலணிகள் ..

முடியவில்லை சக்தி...

விஞ்ஞான வளர்ச்சி அவ்வளவாய் இல்லாத நாட்களில் படித்துத் தீர்த்திருக்கிறார் 40 ஆயிரம் புத்தகங்களுக்கும் அதிகமாய்.
தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை எண்ணாமல்
உலகத் தொழிலாளர்களை ஒன்று கூடச் சொல்லி அறைகூவல் விடுத்திருக்கிறார்.

எவ்வளவு மோசமான தலைவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தத் தலைவர்கள் அவரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.
அவர்கள்  மனிதர்களாய்ப்  பிறந்திருந்தால்  மாறுவார்கள்.

ஆனால் உன்  தலைமுறை வாசிக்க வேண்டும் சக்தி ..

அவரின் வாழ்க்கையில் சுவாரசியங்கள் கிடையாது. . நகைச்சுவைகள்  மிளிராது.
ஆனால்,  ரத்தமும், சதையுமாய் வாழ்ந்து விட்டுப் போன ஒரு சமூக ஞானியின் வரலாறு.

உன்னை நான் கம்யூனிஸ்ட்டாக மாறச் சொல்லவில்லை.

கொஞ்சமேனும்  சமூகத்தைப்  பற்றிய அக்கறை உங்களுக்கு வர வேண்டுமெனில் வாசித்துப் பாருங்கள்.

கொண்ட கொள்கைக்காய்  வாழ்ந்து போன  அந்தத்  தோழனின்  வரலாறு என்றென்றும் வாழும்.

வறுமையென்றும், பிரச்சனைகள் என்றும் ஒதுங்குவோர் ஒருமுறை  வாசியுங்கள். 
நான் ஆருடம்  செல்வதாகவே  இருக்கட்டும்... 

கொஞ்சம்  மாறுவீர்கள் ..

அன்புடன்,
செல்வக்குமார்.


புத்தகம் தந்த நா.முத்துநிலவன் ஐயாவிற்கு நன்றிகள்....

கார்ல் மார்க்ஸ்
வெ.சாமிநாத சர்மா
பாரதி புத்தகாலயம்
விலை:  80

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆம்,..புதுக்கோட்டையின் புகழ்மகுடங்களில் முதன்மையான அந்த “பிரபஞ்ச ஜோதி பிரசுராலய“ நிர்வாகியும், உலகத்து இலக்கிய, தத்துவ, அரசியல் புத்தகங்களையெல்லாம் தமிழ் காணத்தந்த அந்த சர்மாவே தான் (பிறகு சென்னைவாசி)

   நீக்கு
 2. கொஞ்சமேனும் சமூகத்தைப் பற்றிய அக்கறை உங்களுக்கு வர வேண்டுமெனில் வாசித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல அலசல் கவிஞரே வாசிப்பு மனிதனுக்கு சுவாசிப்பாக இருத்தலாக வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள்
  எனறனர் நம் முன்னோர்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 5. கர்நாடகா ஹுப்ளி ரயில் நிலையத்தில் ரயில் வரும் நேரத்தைவிட 4 மணி நேரம் முன் கூட்டியே வந்துவிட்டேன். நடைமேடையில் அமர்ந்திருக்கும் போது எனது மொபைலில் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த காரல் மார்க்ஸ் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். ரயில் 4 மணி நேரம் தாமதம் என்று அறிவித்தார்கள். மனம் எதிலும் லயிக்க வில்லை. அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை என்னை எங்கெங்கோ அழைத்தப் போனது. மாலை 6 மணிக்கு வர வேண்டிய ரயில் விடியற்காலை 4 மணிக்கு 10 மணி நேரம் தாமதமாக வந்தது. நான் புத்தகத்தை முடிக்கவும் சரியாக இருந்தது. என்னை அறியாமல் பல இடங்களில் கண்களில் நீர் குளம் கட்டி நின்றது. அதிலும் ஜென்னி..! சினிமாவில் இப்படியொரு கதாபத்திரத்தை உருவாக்கினால் கூட நம்ப முடியாது. நிஜத்தில் இப்படி ஒரு பெண்ணா..! வியந்து வியந்து தூக்கம் தொலைந்த வரலாறு...
  அந்த உணர்வை முழுமையாக எழுதினால் பல பதிவுகள் அளவுக்கு நீளும். அந்தளவுக்கு மனதை துளைத்த புத்தகம்.
  அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் எழுதும்போதே கண்ணீர் முட்டியது தெரிகிறது நண்பரே. அடுத்த தலைமுறைகள் அப்படிப்பட்ட தியாகத் தலைவர்களை அறியாமலே போய்விடுமோ என்று நான் அவ்வப்போது ஆற்றாமை கொள்வதுண்டு.. அன்பு கூர்ந்து உஙக்ள் அழகு நடையில் இதுபோல எழுதுங்கள் நன்றி.

   நீக்கு
 6. அடுத்தபடியாக நீங்கள் படிக்க வேண்டிய -குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய நூலை இந்த வாரமே தருகிறேன் செல்வா! நூலை இப்படிப் படித்து எழுதுவீர்கள் எனில் எத்தனை புத்தகமும் தரத் தயாராக இருக்கிறேன்...அதிலும் குழந்தைகள் அறியவேண்டிய தியாகம், சிந்தனை, உழைப்பு, ஈடுபாடு, பிடிவாதமான காதல் மற்றும் எங்கல்சுடனான நட்பு.. அனைத்தையும் உலகம் கற்க வேண்டும். நன்றி கவிஞரே!

  பதிலளிநீக்கு
 7. நானும் படித்து இருக்கிறேன் காரல் மார்க்ஸ் ஒரு தத்துவ ஞானி மட்டும் அல்ல ஒரு உழைப்பாளர்கள் என்றும் முதலாளித்துவத்திடம் அடிமையாக இருக்கக் கூடாது என்றும் எடுத்துரைத்தவர் அந்த மாமனிதர்.தனது மனைவி ஜெனியின் மரணத்தை எப்படி தாங்கினாரோ..!!

  நல்ல பதிவு ஐயா..

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான நூல் என்பதில் சந்தேகமேயில்லை...

  பதிலளிநீக்கு