வெள்ளி, 7 அக்டோபர், 2016

தோள் தொட்டில்...

அன்பின் சக்திக்கு,
இன்று உன்னிடம் ஒரு சம்பவத்தை சொல்லிவிடப்போகிறேன்.




பொதுவாய் நான் பயணங்களின் காதலன்.வாசிப்பைக்காட்டிலும் ஒரு மனிதனுக்கு பயணங்கள் கற்றுத்தருபவை ஏராளம்.

ஜோர்டான் நாட்டின் அம்மான் என்னும் மலை நகர் பற்றி அத்தனை படித்தாலும் ஏற்கனவே பார்த்திருந்த மலைகள் பற்றிய கற்பனையே இருந்தது..
ஆனால் அந்த நகரை பகலிலும்,இரவின் வெளிச்சத்திலும் பார்த்த போதுதான் செய்திருந்த கற்பனைகள் காணாமல் போனது...
இருக்கட்டும்..

பயணங்களில் எதிர்ப்படும் விபத்துகள்,கவிழ்ந்துகிடக்கும் வாகனங்கள், குடல் நசுங்கிய நாய்கள், என யாவையும் மிக எளிதாய் கடக்கும் போதே மறந்துவிடுவேன்...

சக்தி..

நேற்றைய நிகழ்வொன்றை முடித்துவிட்டு இரவு 12 மணியிருக்கும் நான் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது..
புதுக்கோட்டைக்கான பேருந்தே வந்ததில் மகிழ்ச்சி...
நடத்துனர் இருக்கையின் பின்னிருக்கை முழுவதும் காலியாயிருந்ததால் அமர்ந்துகொண்டேன்.

பேருந்து கிளம்பும் நேரத்தில் உன்னை விட சின்னதாய் ஒரு சிறுமிக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட வயதில் பேருந்தில் ஏறினாள்..
லெக்கின்ஸ் ,மற்றும் டி சர்ட் .அணிந்து முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்தாள். கருப்பு நிறம்..

என் அருகில் வந்தவள் நகருங்கள் நான் ஜன்னலோரம் உட்கார்கிறேன் என்றாள்.
ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் நகர்கிறேன்..

மட்டமான முகப்பவுடர்,உறுத்தும் ஒப்பனை..
முகத்தில் கட்டிய கைக்குட்டை அவிழ்க்காமல் உட்கார்ந்திருந்தாள்.

சீட்டு தரவந்த நடத்துனர் என் ஊருக்கு பக்கத்து கிராமத்து மனிதர்...மிக நன்றாக தெரிந்தவர் கூட...
சீட்டுகளை கொடுத்தபின் என்னிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

உங்களைப்பற்றியெல்லாம் விசாரித்த போது ஆர்வத்தில் அலைபேசியில் இருந்த படங்களை காட்டினேன்.

சிறு உறக்கத்துக்குப் போயிருந்த பெண் கைக்குட்டையை அவிழ்க்கிறாள்.
கட்டை விரலை உயர்த்தி சூப்பர் என்கிறாள்.
கோபம் அருவருப்புடன் பார்க்கிறேன்...
அமைதியாய் என்னை நோக்கியவள்
"எனக்கு அப்பா இல்லை "

அமைதி...

"அதனால் தான் இப்படி அலைகிறேன்"

என் கோபமும் அருவருப்பும் பச்சாதாபமாகிறது...
காதறுகில் வருகிறாள்..
நான் தூங்குறேன்..ஊர் வந்ததும் எழுப்புங்கப்பா என்கிறாள்..
சரி தூங்கு என்கிறேன்..
இருக்கையில் தூங்க ஆரம்பித்தவள் தலையை தோளில் சாய்க்கிறாள்.கால்களை குறுக்கி கைகளை இடையில் வைத்திருந்தவள் ஒரு கை எடுத்து என் முழங்கை ஊடே திணித்து இயல்பாக பற்றிக்கொள்கிறாள்.

கடந்துபோகிறது தூரமும் நேரமும்.நான் அசையாமல் அமர்ந்திருக்கிறேன். துரத்திப்போகும் வண்டிகளின் விர்ர் என்ற சத்தத்தில் இருகைகளிலும் இறுக்கிக்கொள்கிறாள்..

அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது.அசைகிறேன்..
நள்ளிரவு தூக்கத்தில் விழிக்கும்போது வரும் அசதி மற்றும் பயத்தில் டக் என விழித்து நகர்கிறாள்..
எழுந்து நின்று வழிவிடுகிறேன்.
தேங்க்ஸ் அப்பா என்கிறாள்..பிரிய மனமின்றி படிகளில் இறங்கும்போதும் பார்க்கிறாள்...
இறங்கியதும் கைகளை ஆட்டி டாட்டா என்கிறாள்..
பேருந்து நகரத்தொடங்குகிறது..
அவளைத்தேடி வந்தவன் அல்லது அவள்தேடி வந்தவன் அவள் அருகில் வருகிறான்...
இவள் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்...
பேருந்து வேகமெடுத்துவிட்டது...
அவள் அவனோடு அருகிருந்த சந்தில் மறைந்து புள்ளியாகிறாள்..

கையறு நிலையில் நான் பித்தம் பிடித்தவனாய் பேச்சின்றி இருக்கிறேன்.

அன்பின் சக்தி...
அவள் என்னை நம்பியதும்,உறங்கியதும் ,அப்பா என்றதும் உங்களால் விளைந்தது..

நன்றி சக்தி..

அன்புடன் .
செல்வக்குமார்.





9 கருத்துகள்:

  1. பெண்களைப் பெற்ற அப்பன்களுக்குதான் தெரியும் மகள்களின் அருமை.அப்படியே
    உருக வைக்கிற உருகி்வழிகிற அன்பின் வழியது
    உயிர்நிலை என்ற இந்த கட்டுரை ஆணவக்கொலை காதல்கொலை நடந்த
    நடக்குமிடங்களிலெல்லாம் ஒட்டபட வேண்டிய
    கட்டுரை இது்
    .மிக உன்னத பதிவு

    பதிலளிநீக்கு
  2. எல்லா அப்பன்களும் உங்களை போல நல்லவர் அல்ல. நீங்கள் ஒழுக்கமாக இருக்ககூடிய அப்பாவாக இருப்பதால்தான் கையறு நிலையில் நீங்கள் பித்தம் பிடித்தவராய் பேச்சின்றி இருந்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.


    உங்களிடம் இருந்து வரும் பதிவுகள் எல்லாம் மனதை தொடுகின்றன அல்லது அழவைக்கின்றன..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் யதேச்சையாகக் கூறிவிட்டீர்கள். படித்த எங்களுக்கு ஏனோ சுமை ஏறிவிட்டதைப் போலிருந்தது.

    பதிலளிநீக்கு
  4. உருக்கமான பகிர்வு அண்ணா...
    வாசித்ததும் சுமையை சுமக்கிறது மனசு...

    பதிலளிநீக்கு
  5. அய்யா நீர் புலவர் என்றுதான் நினைத்திருந்தேன். தவறு தவறு.
    நீர் மனிதரய்யா! மனிதர்! நல்லா இருக்கணும்!

    பதிலளிநீக்கு
  6. ஓர் வாழ்வின் சரித்திரத்தை ஒரே பக்கத்தில் கொடுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. Varthaigalal vilakka mudiya oviyam indha varthaigal. Kanneeraga pongum unarvugalai appadiye alli samarpikkiren Ayya.!!!

    பதிலளிநீக்கு