ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இறையனார் கேட்ட வரம்...

கடவுள்
என் வீட்டுக்கு
காலையிலேயே
வந்துவிட்டார்..
இன்று முழுவதும்
உன்னோடிருக்கிறேன்
சரியா?  என்றார்..

உனக்கென
அறையேதும்
இல்லாவீட்டில்
புத்தக அறைதான்
பொறுத்துக்கொள்வாயா என்றேன்..

காலை உணவு
நான் கொள்வதில்லை
உனக்குமில்லை
வா நடக்கலாமென்றேன்..

"ஏனெல்லாரும்
காலையில்
நடக்கின்றீர்கள்?"

"நீ
அரிசியில்
எங்கள் பெயரை
சர்க்கரைத்தண்ணீரில்
எழுதிய வினை.."

பூங்காவின்
நீள நாற்காலியொன்றில்
சாய்ந்திருந்த
முதியவரிடம்
போய் விசாரித்தான்.
திரும்பிவந்தவன்
முகம் சரியில்லை..
நான் காதுகளில்
சொருகி
பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

தேனீர்க்கடையில்
புதிய முகமாயிருப்பதால்
சர்க்கரை அளவுக்காய்
தயங்கிய மாஸ்டருக்கு
திருநீறு வழங்கினான்..
நானதை டிவீட் செய்தேன்..

குளிப்பதுண்டா
என துண்டை நீட்டினேன்..
கவிச்சியடித்த
தோலாடை கழட்டி
உள்ளே நுழைந்தவன்
நுரைகளோடே
வந்துவிட்டான்
பனியின் ஞாபகத்தில்..

நான் முகநூலில்
கடவுள் வந்த
சேதியை
பதிவிட்டுக்கொண்டிருந்தேன்..

வேலையிருக்கிறது
போகிறேனென்றேன்
நானும் என்றவன்
வண்டியில்
அமர்ந்து கொண்டான்..

காதுகளில்
ஒலிப்பான் சொருகிய
வண்டியோட்டிகளைக்
காட்டி
என்னவென்றான்...
ஒட்டிக்கொண்ட
காதுக்குண்டலமென்றேன்..
தலைக்கவசம்
ஏனென்றான்.
அரசு
மக்கள் மேல்கொண்ட
அக்கரையென்றேன்..

ஆயிரம் சந்தேகங்கள்
கேட்டிருப்பான்
கூகுளில்
பாதியும்
படித்ததில்
பாதியும் தெரிந்ததைச் சொன்னேன்.

"துணிக்கடைகளில்
ஏனித்தனை கூட்டம்..?"
"அம்மணம்
மறைக்க.."

"வெடிகள் வெடிப்பது
அத்தனை அவசியமா?"
"எமனின் வேலையை
கொஞ்சம் குறைக்க.."

"பேருந்தில்
ஏனடா
இத்தனை கூட்டம்?"
"நாட்டில்
நதிகள் மட்டும்தான்
ஓடாது.."

மனிதனைத்தானே
படைத்தேன்..
இவையெல்லாம்
யாராலென்றான்...
இறைவா
உன்னையே
நாங்கள் தானென்றேன்.

நாள்
முடியப்போகிறது
வேறென்ன
வேண்டுமென்றேன்.

எதற்குமிருக்கட்டுமென
கடவுளுடன்
செல்பி
எடுத்து வைத்துக் கொண்டேன்.

முழுவதுமாய்
உன்னோடிருந்திருக்கிறேன்..
வரமொன்று
தா என்றான்..

கேள் என்றேன்..
அலைபேசி
வேண்டுகிறான்.

அவனை
வெறுங்கையோடே
அனுப்பிவிட்டேன்..


8 கருத்துகள்:

 1. தாங்கள் அலைபேசியைக்
  கொடுத்திருந்தால்
  அவனும் முக நூலில் கணக்குத் தொடங்கி
  முடங்கிப் போயிருப்பான்

  பதிலளிநீக்கு
 2. // இறைவா
  உன்னையே
  நாங்கள் தானென்றேன் //

  நன்று !

  பதிலளிநீக்கு
 3. சிந்தனைக்கு விருந்தான
  சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
 4. நல்ல வேளை,இல்லாத கடவுளிடம் ஏமாறாமல் போனீர்களே :)

  பதிலளிநீக்கு
 5. நமக்கு வேண்டியவர்களை, நல்லவர்களை சீக்கிரம் அழைத்து செல்லும் அவன் என்னிடம் கேட்டிருந்தால் அவனுக்கு நான் சாம்சங் போனை கொடுத்திருப்பேன் போகிற வழியில் அவனும் அந்த போன் வெடித்து செத்து இருப்பான்

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான கவிதை. வெடிக்கும் அலைபேசியைக் கொடுத்திருக்கலாம்.....

  பதிலளிநீக்கு
 7. Ahaa!! Avan keatta kelvigaluku ungal arasiyal kalandha badhil vayadaithu poga vaithirukkum. Naruk, naruk endra varthaigal andha Andavanukku uraithadhalo ennavo, thannai update seidhu kolla ungalidam mobile varam ketuvittan. Nallavelai tharavillai neengal, illaiyendral mobile parthey kaalathai veenadithu iruppan. Naatu nadappugaluku avan Karuthu solli...arrest, court endru illamal pavam andavan appadiye irukatum. Arpudhamana varthai vilaiyaatu ungal kavidhaiyil. Vazhga.

  பதிலளிநீக்கு