திங்கள், 13 பிப்ரவரி, 2017

நந்தவன நாள்கள்..

ஒரு காதல் கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்ற
பேராவலில் தான்
எத்தனிக்கிறேன்..
காதல் பற்றிய
நினைவுகளில்
மெல்லிய
புகையென
படிந்திருக்கும்
கால நெசவுகள் நீக்கியும்
மங்கலடித்திருக்கிறது
காதல்..

பருவத்தின்
தினவுகளில்
பட்டாம்பூச்சி
பாடித்திரிந்த காதல்
கள்ளப்பருந்துக்கு
பயந்த கோழிக்குஞ்சென
காலடிக்குள்
பதுங்கும் பாவம்..

எழுதித்தள்ளிய
கவிதைச்சுருள்கள்
அலங்கார கண்ணாடித்திரை
நீங்கி
பழைய துணி
சுருட்டிக் கிடக்கும்
பீரோவின் உள்ளறையில்
தவமிருக்க
திறக்கும் போதெல்லாம்
சிரிக்கிறது..

காதல் கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கும்
நண்பர்களை
உதட்டில் மட்டுமான
புன்னகையில்
உற்சாமூட்டுகிறேன்..

வெட்கமின்றி
இதையும்
சொல்லித்தானாக
வேண்டியிருக்கிறது..

காதல் பற்றி
எப்படி எழுதினாலும்
காதலிக்கத்தான்
தோன்றுகிறது
6 கருத்துகள்:

 1. காதல் பற்றி கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா என்ன! நன்றாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. காதல் பற்றி
  எப்படி எழுதினாலும்
  காதலிக்கத்தான் தோன்றுகிறது
  என்றால்
  உணர்வோடு எழுதிறியள் என்று பொருள்!

  பதிலளிநீக்கு