வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

குலதெய்வம்..

சீமைக்கருவை சூழ
எப்போதோ இடி இறங்கி
பேருக்கு
சீரழிந்த புளியமரம்.

துடியான
மாயாண்டி
காலமெல்லாம் உறையுமிடம்..
கூப்பிடு தூரத்துல
தங்கச்சி உடையநாச்சி
காங்ரீட் மறைத்த ஒரு
கட்டடத்தில் குடியிருப்பாள்..

வளர்ந்த கருவை வெட்டி வாழ்ந்திருப்பான்
உள்ளூரின் பங்காளி..

சீரியல் விளக்கெரிய..
குழாய்வழிய இசை பெருக..
குலதெய்வ கூட்டமெல்லாம்
குதூகலிக்கும்
ஒற்றை நாளில்..

பங்காளிக்கூட்டத்தில்
இத்தனையா
புள்ளியென
எக்களிக்கும்
உள்மனசு..

மஞ்சள் துணி அவிழ்த்து
முடிந்துவைத்த
காணிக்கைகள்
மணக்க மணக்க
சந்தனத்தில்
புளியமரம் புனிதம் பெறும்..

எடுத்துக்கட்ட
கோவிலொன்று
இசைந்துவிட்ட
மாயாண்டி
இப்போதெல்லாம்
எலக்ட்ரிக் மணியோசையில் தான்
குளிக்கிறார்..
உச்சிவச்ச
விளக்கு வெளிச்சத்தில் தான்
குதிரையை கிளப்புகிறாராம்.

பிள்ளை ரிசல்ட்டுக்கும்..
பாம்பொன்று கனவில் வந்த காலையிலும்..
இன்ன
பிறவுக்குமென முடிந்துவைத்த சில்லறைகள்
சேர்ந்துவிட்டன...

எப்போதோ
அப்பா வைத்த
பங்காளிக்கடனொன்று
பாக்கி அடைத்தபின்

பார்க்கலாம்
மாயாண்டி....9 கருத்துகள்:

  1. சீக்கிரமே முடியட்டும். நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. குலதெய்வ கோயில்களில் பங்காளிகள் ஒன்று சேர்ந்து படையலிடும் காட்சி மனக்கண்ணில் விரிகிறது. குலதெய்வத்துக்கு எல்லா வீடுகளிலும் இன்று கடன், நாளை ரொக்கம் தானோ? கவிதையை ரசித்தேன். பாராட்டுகள். காங்ரீட், சீரியல் எலக்ட்ரிக், ரிசல்ட் என்ற ஆங்கிலச்சொற்களைத் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நவீன வசதிகளில் குளிக்கும் மாயாண்டி பற்றிய கவிதை அருமை.

    பதிலளிநீக்கு