வியாழன், 2 பிப்ரவரி, 2017

மனக்கடிகாரம்

இந்த செல்போன் எழவெல்லாம்

வராதப்போ கிட்டத்தட்ட எல்லாரும் கொஞ்சநாளாச்சும் கடிகாரம் கட்டிருப்போம்ல..

நானும் தான் கட்டிருக்கேன்..

முக்கித்தக்கி பத்தாப்பு பாஸ் பண்ணுன உடனே எங்கப்பா எனக்கொரு கடிகாரம் வாங்கித்தந்தார்..
ஆட்டோமேட்டிக் ஹெச்.எம்.டி கடிகாரம்..
நான் அந்த டயல் மணிக்கட்டுக்குள்ளாற இருக்கமாதிரிதான் கட்டுவேன்..
ஏன்னா எங்க வாத்தியார் ஒருத்தர் அப்படித்தான் கட்டுவாரு..
அந்த கடிகாரத்துக்கு எண்ணெய் தேச்சு சீயக்காய் போட்டு குளிப்பாடுவதைத்தவிர எல்லாம் செய்வேன்..

ரொம்ப நாள் வச்சுருந்தேன்...
எங்க போச்சுன்னே தெரியல...

அதுக்கும் முன்னாடியே எங்க சின்னப்பத்தா வீட்ல ஒரு சாவி கொடுக்குற சுவர்க்கடிகாரம் இருந்துச்சு..
இப்பவும் தான் இருக்கு..
அந்த வீட்டுக்கு அது அலாரம் அடிக்கிற நேரம் பார்த்து போய் சரியான எண்ணிக்கைல மணி அடிக்குதான்னு பல தடவை எண்ணிருக்கேன்.

கிட்டத்துல தோப்பில் முகமது மீரான் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு வாசிச்சேன்..
மனுஷன்..
வீடு..விட்டா அவர் ஊரு தவிர எதும் பெருசா எழுத மாட்டாரு..
ஆனா சின்னக்கதையா இருந்தாலும் நம்மையும் சிண்டைப்புடிச்சு இழுத்துத்துட்டுப்போய் கதைக்குள்ள உட்ருவாரு..

அதுல ஒரு கதை "கடிகாரம்" அப்படின்னு..

கடிகாரம்னா அந்தக்கதையில உயிருள்ள ஒரு மூத்தம்மா தான் கடிகாரம்..
வயசான காலமா இருந்தாலும் வீட்ல இருக்கவங்களை நேரத்துக்கு எழுப்புறதும்..
துல்லியமா கணக்கு வச்சுக்குறதுமா ஓடுது கதை..

சீக்கிரமா எழுப்புறதுக்காக பசங்க அந்த பாட்டிய திட்டுறதும் மருமக மூஞ்சிய தூக்கிகிறதும்..
காசு கொடுத்து வாங்குன கடிகாரமெல்லாம் ஏமாத்த அந்த ஒரு சீவன் காலம் சொல்லிச்சொல்லியே ஒரு நாள் மவுத் ஆறதோட கதை முடியுது...

அந்தக்கதை சின்னதா இருந்தாலும் பல நினைவுகளை தூண்டிருச்சு...

ஆமாங்க..
மனுஷப்பய உடம்பு இருக்கே..அது ரொம்பவே அருவுகமான சங்கதி..
நான் உள்பட ரொம்ப பேருக்கு அது புரியிறதே இல்லை.

கி.ரா ஒரு கதையில சொல்லுவாரு..
பிறந்த ஒருமணி நேரத்துல அது ஆட்டுக்குட்டியா இருந்தாலும் நாய்க்குட்டியா இருந்தாலும் தண்ணில தூக்கிப்போட்டா நீச்சல் அடிச்சு பொழச்சுக்கும்..
இந்த மனுசப்பய 60 வயசானாலும் தண்ணில மூச்சுமுட்டி செத்துப்போறானேன்னு...

இயல்பா உடம்புக்குள்ள இருக்க விசயத்துல பல சொல்லலாம்..

திடீர்ன்னு வாயெல்லாம் பரபரக்கும் கடைல போய் வெற்றிலை வாங்கி போடுவோம்..

கடலைமிட்டாய் மேல கொள்ளை ஆசை வரும்..

திட்டாதீக எனக்கெல்லாம் எங்கடா கருவாடு கிடைக்கும்னு தேடும்...
இதெல்லாம்

மனப்பிசாசு செய்யுற வேலை இல்ல..
உடம்பு அதோட தேவைய சொல்லாம சொல்ற சங்கதி..

நான் விவரந்தெரிஞ்சு அலாரம் வச்சு எந்திரிச்சதெல்லாம் கிடையாது..
ராத்திரி தூங்கப்போகும் போது மூணு மணிக்கு எந்திரிக்கனும்னு நினைச்சுட்டு படுத்தா 2.55 க்கு டக்குன்னு முழிப்பு தட்டிரும்..

இந்த கடிகாரத்துக்கு சாவியும் இல்லை பேட்ரியும் கிடையாது..

ஒரு தடவை வீட்டம்மா ரொம்ப எச்சரிச்சதால அலாரம் வச்சுட்டு படுத்து...
எல்லாரும் எழுந்து குளிச்சு கிளம்பி வண்டிய ஸ்டார்ட் பண்ணும்போது தான் அலாரம் அடிச்சுச்சு..

இந்த கடிகாரத்துக்கு ஒரு சிக்கல் இருக்கு..
உடம்பு நல்லா இருந்தாத்தான் வேலை செய்யும்...
கொஞ்சம் சரியில்லன்னா...
போடி மகனே.. நான் எழுப்பி நீ என்ன வேலை செஞ்சு கிழிக்கப்போறன்னு தூங்கவச்சு வேடிக்கை பார்த்துடும்..

ஜப்பான்காரன்  கண்டுபிடுச்ச கடிகாரம் நேரம் சொல்லி எழுப்புற வசதியெல்லாம் வந்தப்புறம் கூட இது பெயிலியரே ஆகாத மாடலா ஓடிட்டேதான் இருக்கும்.

நான் நெனச்சுக்குவேன் நம்ப நெஞ்சுல கைவச்சு பார்க்குறப்போ டக்கு டக்கு கேக்குற சத்தம் கூட இந்த கடிகாரச்சத்தமா இருக்குமோ என.

இத மாதிரி உடம்புல ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போல..
நம்ம அறிவுக்கு தெரியுறத சொல்லிக்கலாம்..
இதெல்லாம் விஞ்ஞானப்பூர்வமா யாரும் சொல்லிட்டாகளான்னு எனக்குத்தெரியாதுங்க.

ம்ம்...
சொல்ல மறந்துட்டேன்..
இந்த உயிர்க்கடிகாரம் ரொம்ப குசும்பும் கூடங்க...
நாளைக்கு விடிஞ்சா ஞாயிற்றுக்கிழமை தானேன்னு 2 மணி வரைக்கும் கண்ணு முழிச்சுட்டு காலைல பத்துமணிக்கு எழுந்திருக்கலாம்னு படுத்தா...
5 மணிக்கு எந்திரிடா நாயேன்னு எழுப்பிவிட்டு வேடிக்கையும் பார்க்கும்..
அலாரத்தை நிப்பாட்டிட்டு படுக்கலாம்னா விடாது...
பேட்டரிய பிடுங்கியா போட முடியும்...
இல்லை தூக்கிப்போட்டு உடைக்கவா முடியும்..
பாயையும் வாயையும் மூடிட்டு போயே ஆகனும்..

எல்லாம் சரி..
வேலை மெனக்கெட்டு இது ஒரு பதிவுன்னு ஏன் போடுறேன்னு கேட்குறீங்களா?

இன்னைக்கி ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு காலைல 4 மணிக்கு அலாரம் வச்சுட்டு படுத்துட்டேன்..

வேலைய காட்டிருச்சு..
ரொம்ப கோவமா என்ன இப்படிப் பண்ணிட்டயேன்னேன்.

ரெண்டு நாளா எதுவுமே எழுதலயேடா..

கல்யாணம் முக்கியமா..
பதிவு முக்கியமான்னு கேட்டுச்சு..

சொல்லுங்க எது முக்கியம்?13 கருத்துகள்:

 1. ஹஹஹஹ சூப்பர். அலாரம் ரொம்பவே ஏமாத்தும்...நினைவுகள் பல எழுந்தன. கீதா: கடிகாரம்ன உடனே எனக்கு நம் உடம்பில் உள்ள சர்க்கெடியன் ரிதம் கடிகாரம் பத்தி சொல்லணும்னு வந்தா நீங்க சொலிருக்கீங்க.. அந்த சர்க்கெடியன் ரிதம் பலருக்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதால் கெட்டுத் தொலைந்து பல உடல் நோவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்....அது நல்லாத்தான் வேலை செயுது....நாம்தான் குற்றவாளிகள். அருமை..பதிவு

  பதிலளிநீக்கு
 2. ஆகா இத்தனை நகைச்சுவையா எழுத முடியுமா.....கதையையும் வாழ்க்கையையும் இணைத்து கூறிய விதம் அருமை

  பதிலளிநீக்கு
 3. சின்ன பதிவாக இருந்தாலும் அதில் பல விஷயங்களை வெகு நேர்த்தியாக சொல்லி சென்ற விதம் மிக அருமை . உண்மையிலே சொல்லுகிறேன் உங்கள் பதிவுகள் ரசிச்சு படிக்கும்படி இருக்கின்றன

  பதிலளிநீக்கு
 4. காதலியையோ கல்யாணத்தையோ அல்லது மனைவியையோ மறந்துவிடலாம் ஆனால் பதிவுதான் முக்கியம் இப்படி நான் சொன்னதை மட்டும் என் மனைவியிடம் சொல்லிவிட வேண்டாம் அப்படி சொன்னால் வழக்கமாக கிடைக்கும் பூரிக்கட்டை அடிமட்டுமல்லாமல் போனஸாக கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
 5. நானும் உங்களை போலத்தான் அலாரம் வைத்து எந்தரிப்பதில்லை தானாகவே எழுந்துவிடுவேன் சரியான நேர்த்தில் ஆனால் இப்பொழுது டைம்பீஸை கண்ணுக்கு எதிரில் தெரியும் படி வைத்திருக்கிறேன் காரணம் இப்பொழுது எனது செல்லக் கூட்டியான சன்னி என்ற நாய்குட்டி இரவில் பல முறை என்னை எழுப்பிவிடுகிறான் காரணம் அவன் என் பெட்டில் என்னோடு படுத்து உறங்குவான் ஆனால் பல தடவை பெட்டில் இருந்து கிழே இறங்கி தரையில் சிறிது நேரம் படுத்து உறங்கிவிட்டு மீண்டும் பெட்டிற்கு வர முயல்வான் நார்மல் டயத்டில் அவனாக பெட்டிற்கு ஜம்பி ஏறிவிடுவான் ஆனால் நான் இருக்கும் சமயத்தில் அவனு நான் தான் தூக்கிவிடனும் இதனால் உறக்கம் கலைந்துவிடுகிறது... ஆனாலும் அவனை திட்ட மனமே வாராது

  பதிலளிநீக்கு
 6. நல்லா எழுதியிருக்கீங்க... உண்மைதான். அலாரம் வைக்காமல் நானும் பல சமயங்கள் எழவேண்டும் என்று நினைத்த நேரத்துக்கு எழுந்ததுண்டு. ஆச்சர்யமான மெக்கானிசம். என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு என் திருமணத்துக்கு முன் வாங்கித்தந்த சிட்டிசன் வாட்ச்சைத்தான் 26 வருடங்கள் கட்டியிருந்தேன். அதற்கப்புறம் அது இதற்குமேல் ஓடமாட்டேன் என்று சொல்லிவிட்டாலும், வேறு வாட்ச் வாங்கிவிட்டாலும், அது அவர் நினைவாக தூக்கிப்போடாமல் வைத்திருக்கிறேன். சென்ற வாரம் கூட அந்த நண்பரிடம் அதைச் சொன்னபோது ஒரு பெருமையான புன்னகை ஒன்றைப் புரிந்தார்!

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப ரசுச்சு எழுதியிருகீங்க..அருமை...


  ஸ்கூல் படிக்கிற போதே கைக்கடிகாரம் மீது ஒரு ஆவல்...மிஸ்ங்க கட்டுற விதம் எல்லாம் பார்ப்பேன்..அதிலும் எங்க drawing மிஸ் கட்டுறது ரொம்ப பிடிக்கும்..இன்னும் அது போலத்தான் நான் கட்டுறது...


  எங்க போனாலும் கைக்கடிகாரம் இல்லாம போறது இல்ல...

  ஆசிரியர் ஆக வேணும் கனவு இன்னும் நனவு ஆகல..ஆன கைக்கடிகாரம் கட்டினா டீச்சர் ங்கற feel வரும்...

  பதிலளிநீக்கு
 8. யதார்த்தம். தினமும் நண்பர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வினைப் பகிர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பகிர்வு. அலாரம் வைக்காமல் எழுந்திருப்பது எனக்கும் உண்டு. ஆனால் சில சமயங்களில் காலை வாரி விட்டுவிடும்!

  கடிகாரம் - பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.... கட்டிக் கொள்வதே இல்லை. அப்பாவுக்கு ரொம்ப பிடித்தது கடிகாரம்!

  பதிலளிநீக்கு