செவ்வாய், 31 ஜனவரி, 2017

பூவே...

பரிசு பெறாத ஒரு கவிதை
ஒரு ரோஜாக்குவியலாய்
தாதி தந்த நொடிகள்
தேவ கணம்..

மடக்கியிருந்த
சிறுவிரல் நீவி
சுண்டுவிரல் கொடுக்க
பற்றிக்கொண்ட
பரவசம்
மோன நிலை..

சிறுதண்டை சிணுங்க
புரண்ட நாள்களில்
நான்
கந்தர்வனாய்
விழித்திருந்தேன்.

தலைநின்று,
தவழ்ந்து,
சிறுநடை பழகி,
"ங்க்கா"
அப்பாவான போது
நான்
தேவதையோடிருந்தேன்.
நிர்வாண அழகில்
நீர்த்திவலைகள்
தெறித்த
குளியல் தொட்டியில்
நுரைகளாலானேன்.

நடைவண்டி,
சிறு மிதிவண்டி,
மரக்குதிரை,
யானைமேல் அம்பாரி...

கன்னங்கள் இட்ட
கருப்புப்பொட்டினால்
கூடுதல் அழகானாள்.

வண்டிகளில்
தொடையிடுக்கில்
சிறுபயண தூரங்களில்
நான்
பட்டாம்பூச்சியாய்
பறந்து திரிந்தேன்.

முதல் பள்ளி,
முதல் பாட்டு,
முதல் எழுத்து...
முதல் காதலாய்
எப்போதும் இதயத்தில்..

சிறு ரோமம்
படர்ந்த முகம் தடவி
சுழித்து
வாய்குவித்த
முத்த வாசம்
பிறவிகள் யாவும்...

கல்லூரி செல்கிறாள்..
கவனம் என்கிறேன்..

கன்னம் தட்டிப்போகிறாள்..
நான்
குழந்தையாகிறேன்.

9 கருத்துகள்:

 1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. பரிசு பெறாத கவிதை ரசிக்கும்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. என் மகளும் வளர்கிறாள்; உன் கவிதை போல!

  பதிலளிநீக்கு
 3. என் மகளும் வளர்கிறாள்; உன் கவிதை போல!

  பதிலளிநீக்கு
 4. அருமை....மகள் எனும் பொக்கிஷப் பரிசு இருக்கும் போது வேறென்ன பரிசு வேண்டும்....

  பதிலளிநீக்கு