வியாழன், 12 ஜனவரி, 2017

கார்ப்பரேட் மூளைகளின் ...விளையாட்டு

அன்பின் சக்திக்கு..

ஜல்லிக்கட்டுக்கென கல்லூரி மாணவர் கூட்டமும்,முகநூல்களில் போடும் நிலைத்தகவல்களும் இந்த பண்டிகை காலக்குளிரை கொஞ்சம் விரட்டியிருப்பது உண்மை தான்...

சக்தி..
ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதில் என் கருத்து வேண்டாம் என்பதாய்த்தான் இருக்கும்...

என் சிறு பருவத்தில் மொட்டை மாடிகளிலும்..மரக்கிளைகளின் மீதும் அமர்ந்து பார்த்த ஜல்லிக்கட்டுகளின் பளபளக்கும்,பயமுறுத்தும் அரிவாள்களும்,
குடல் சரிய தூக்கிக்கொண்டோடும் அழுகைகளுமே மிஞ்சின...
கலவரங்கள் நிகழாத ஜல்லிக்கட்டு நான் பார்த்ததில்லை..
அதுவே தமிழனின் பாரம்பரிய விளையாட்டென்றால் அது எனக்கு சரிப்படாது தான்..

ஆனால் இப்போது அது பிரச்சனை அல்ல..
ஜல்லிக்கட்டு என்ற போர்வையில் தமிழகம் ஒதுக்கப்படும் அல்லது வஞ்சிக்கப்படும் நிலையை எதிர்க்கும் மக்களின் மனோ நிலையாகவே இதனைப் பார்க்கிறேன்..

சுதந்திர இந்தியாவில் ரூபாய்களில் ஐந்தாம் இடத்தில் இருந்த தமிழ் இப்போது இருக்குமிடம் நீ அறிவாய்.

காஷ்மீரின் ஒரு அங்கிலத்தையும் இழக்க விரும்பாத மத்திய அரசு நம் கச்சத்தீவை தாரை வார்த்தது..

ஆஸ்திரேலியாவில் சீக்கியருக்கு பிரச்சனை என்றால் அது இந்தியனுக்கான பிரச்சனை..
இலங்கைப்படையிடம் மாட்டுபவன் மட்டும் தமிழக மீனவனாகி விடுவான்.

எல்லா மாநிலமும் ஒதுக்கிய அணுமின் நிலையம் தமிழகத்திற்கு...
நியூட்ரினோ கூடம் தமிழகத்திற்கு..

விவசாய நிலத்தை ஊடுருவிச்செல்லும் குழாய்த்திட்டம் தமிழகத்தில்..

எனக்குத்தெரிந்து சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலமும் இத்தனை கேவலப்பட்டதில்லை..

கடைசியாய் பொங்கலுக்கு விடுப்பில்லை என்றார்கள்..

ரூபாய் நோட்டுப் பிரச்சனையில் எல்லாமாநிலமும் கடந்து அநேகமாய் இன்னும் எல்லா தமிழக ஊர்களுக்கும் 500 ரூபாய் வந்து சேரவில்லை..

ஜல்லிக்கட்டு என்பது கூட கார்ப்பரேட் மூளைகளின் தந்திரமாய் பார்க்கிறேன் சக்தி..

பணம் பற்றிய பற்றி எரியும் ஒரு பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க இவர்கள் கிளப்பிவிடும் மாற்றே ஜல்லிக்கட்டாய் இருக்கலாம்..

மக்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்படும் ஒரு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் மற்ற பிரச்சனைகளை மழுங்க வைக்கக்கூடும்.

தினம் செத்து மடியும் விவசாயிகளின் மரணம் மற்றும்
பணப்பிரச்சனையை கையில் எடுத்து இளைஞர் கூட்டம் போராட ஆரம்பித்து விடக்கூடாது என்பதற்காக ...
அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக கார்ப்பரேட் மூளைகள் ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கலாம்.

ஜல்லிக்கட்டுக்கான தடை...
பார்வைப்படுத்தப்படும் விலங்கு,
புண்ணாக்கு...
என்பதெல்லாம் மிக எளிதாக சரிசெய்ய முடியாதவை அல்ல..
அவர்கள் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் செய்துவிட முடியும்...

ஆனால் அவர்கள் மக்களை எளிதாக மூச்சுவிட வைக்க மாட்டார்கள்.

போன வருட பெருமழைக்காலத்தில் மற்றொரு கொடுமையாய் பீப் பாடல் மூலம் சரிந்த பெருமையை இந்த வருடம் மீட்க ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கலாம்.

மாணவர்கள் போராடுவதும்..மிதிபடுவதும் புதிதல்ல..
என்னவோ தமிழுக்காகவே பண்பாட்டோடு வாழ்பதாகவே வழிய வந்து கொம்புதீட்டும் சேதிகள் எரியும் கொள்ளியில் கொஞ்சம் நல்ல கொள்ளி என்னும்  சந்தேகத்துக்குரியனவே.

முன்னம் காலத்தில் மாணவர் கூட்டம் இல்லையெனில் திராவிட ஆட்சிகள் இத்தனை நாள் இங்கே ஜீவிதம் செய்திருக்க முடியாது..
அப்போதைய தலைவர்கள் மிகத்தெளிவாக திட்டமிட்டு கல்லூரிகளை தங்கள் களமாக்கி வென்றார்கள்..

இன்றைய பொழுதுகள் துரதிர்ஷ்டமானவை..
முகநூல்களாலும்,
வலைத்தளங்கள் மூலமாகவும் தாங்களே முடிவெடுத்து சாலைக்கு வந்து போராடவேண்டிய நிலையில் உள்ளார்கள்..

இவர்களின் அபரிதமான சக்தியை வழிநடத்த, எந்தப்பிரச்சனைகள் இன்றைய தேவை..
எதற்காக நீண்ட போராட்டம் தேவை என சொல்லிக்கொடுக்க நல்ல     வழிகாட்டிகளைத்தான் தேடவேண்டி இருக்கிறது..

ஜல்லிக்கட்டு மட்டுமல்ல..
தாய்த்தமிழ் நாட்டில் செல்லரித்துக்கிடக்கும் எல்லா நிலைகளையும் இந்த மாணவக்கூட்டம் ஒன்றால் மட்டுமே மாற்ற முடியும்..
அதற்கான அவசரத்தேவையெல்லாம்
எல்லாவற்றையும் சீர்தூக்கி,
செய்திகளில் மயங்கிவிடாத எது தேவையோ அதற்காக போராட..
சுயநலம் பாராத நல்ல வழிநடத்துபவர்கள் மட்டுமே...

நான் காத்துருக்கிறேன் சக்தி அப்படி ஒரு தலைவருக்காகவும் நாளுக்காகவும்.    

அன்புடன்.
மீரா செல்வக்குமார்

6 கருத்துகள்:

 1. இந்த நல்ல சிந்தனைகள் எல்லாம் கனவாகி போய் விடுமோ...?

  பதிலளிநீக்கு
 2. உங்களின் சிந்தனையும் எனது சிந்தனையும் இதில் அதிகம் ஒத்துப் போகின்றன

  பதிலளிநீக்கு
 3. உண்மை தான் செல்வா சார். எது அவசியம் என தமக்காக சிந்திக்க தெரியாத தமிழராக இருக்கின்றோம்.
  இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் விவசாயம், நீர் மேலான்மை இயற்கைப்பாதுகாப்பு என முன் நின்று போராடும் ஆர்வலர்களும் தம் மன உணர்வுகள் திசை திருப்பப்படுதல் புரியாமலே இழுபட்டு செல்வது தான் கவலைக்குரியதாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 4. தமிழகத்திற்கு நல்ல தலைவர் வழிநடத்தும், நல்ல பாதை அமைக்கும் ஒரு நல்ல தலைவர் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. நாம் எல்லோரும் விரும்புவதும் ஒரு நல்ல தலைவரையே! பாஸ் அல்ல!! காத்திருக்கிறோம்

  கீதா

  பதிலளிநீக்கு
 5. // ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதில் என் கருத்து வேண்டாம் என்பதாய்த்தான் இருக்கும்.//

  என் கருத்தும் இதுவேதான் கவிஞரே. இப்போது, ஜல்லிக்கட்டை வைத்து, மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை மடை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு தலைவர் வரவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது..... நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு