வியாழன், 19 ஜனவரி, 2017

இடையில ரெண்டு கதை..

1.ரொம்ப முன்னாடி..

முன்னாடி ஒரு காலத்துல..
ஆகா..ஆரம்பிச்சுட்டாண்டான்னு கிளம்பிறாதீக...நமக்கு ராசா கத சொல்ல வராது.
தவிர நம்ம கதையே ஏகப்பட்டது இருக்கும் போது?

சட்டில இருக்கத ஆப்பைல எடுப்போம்.

 பிரிண்டிங்ல வேலை பார்த்தப்போ சம்பளமும் கம்மி..
வேலையும் நிமுத்திடுவாங்க..
ஒரு கம்பெனி முதலாளி அடிக்கடி அங்க வருவாரு.
அன்பா சிரிச்சு சிரிச்சு பேசுவாரு.
"என்னடா சம்பளம் வாங்குற?"
" வாரம் அம்பது ரூவாண்ணே"
" அடப்பாவமே..நீ கிளம்பி வாடா என் கம்பெனிக்கு..இந்த சீமை ஓட்டுக்குளிர்ல வேண்டாம்...கம்பெனி ரூம்லயே தங்கிக்க..சம்பளம் 75 ரூவா நீயே எடுத்துக்க..அப்படி இப்படின்னு கூட்டிட்டே போய்ட்டார்.

தெய்வமே....

நாலுவருசம் தூங்குறது,குளிக்குறது.வேலைபார்க்குறது எல்லாம் அங்கனதான்..

ராத்திரி தூங்குறப்ப கல்யாணம் பண்ற மாதிரி கனவு வந்தாக்கூட அண்ணன் தான் தாலி எடுத்துக் கொடுப்பார்.
எப்பவும் சாவி என்கிட்டத்தான் இருக்கும்.

வேலை முடிஞ்சு தூங்கிப்போகும் விடியக்காலை மூணு மணிக்கு வாசல்ல ஒரு லோடு லாரி  வரும்.
வந்ததெல்லாம் இறக்கி வச்சு சரிபார்த்து அவர்களின் டெலிவரி சலான்ல கையெழுத்து போடும்போது அவ்வளவு கலக்கத்துலயும் கிட்டத்தட்ட ஜனாதிபதி கையெழுத்து போடுறமாதிரி இருக்கும்.

இப்படியே போய்ட்டு இருந்தப்ப ஒருநாள்... 
அவர் அண்ணன்கிட்ட இருந்து போன்..
அவர் கம்பெனிக்கு ஒரு நைட் வாட்ச்மேன் வேணும்னு கேட்ருக்கார்...
இவர் பதில் சொல்றார்..
"நீ என்ன லூசா? உனக்கெதுக்கு நைட் வாட்ச்மேன்.ஒரு பயல புடிச்சு போடு..பகலுக்கு கம்பெனி வேலை..நைட்ல லோடுவந்தா இறக்க,ஜெனரேட்டரை பார்த்துக்கவும் ஆச்சு...வாட்ச்மேன் சம்பளத்துல பாதிகூட வராது"

இதுவரை கூட சரிதான்.
கடைசியா சொன்னதுதான் காதுக்குள்ளயே நிற்குது.
"நான் அப்படித்தான் ஒரு பயல வேலைக்கு போட்ருக்கேன்"

அடப்பாவி..
ஆனாலும் இந்த கதைக்கு ஒரு முடிவிருக்கு..கடைசியா சொல்றேன்.

2.இப்பதான் கொஞ்ச நாளா...

ரொம்ப தூரத்து சொந்தத்துல,
ரொம்ப பக்கத்து ஊர்ல ஒரு அண்ணன் இருக்காரு..
நேர்ல பார்த்தா ரெண்டு மணி நேரம் தான் பேசுவாரு. அறிவுரை தாண்டி எதுவும் இருக்காது. லேண்ட் போன்ல பேசுனார்னா போனை சார்ஜர்ல போட்டுட்டு பேசுவேன்.
அய்யோ அண்ணன் நமக்காக இவ்ளோ நேரம் பேசுறாரேன்னு அழுகை அழுகையா வரும்.
இரண்டு வாரம் முந்தி BSNL ஆபீஸ்க்கு வேற சோலியா போயிருந்தேன்.அவ ங்க பிளான் எல்லாம் எழுதிப்போட்ருந்தாங்க.
249 ரூபாய்க்கு ராவுலயும்,ஞாயிற்றுக்கிழமையும் எல்லா காலும் இலவசம்...1199 ரூபாய்க்கு எப்பவுமே எல்லா காலும் இலவசம்னு...
அடுத்த நாள் அண்ணன்கிட்ட பேசும்போது..மன்னிக்கவும் அண்ணன் என்னிடம் பேசும்போது
"அண்ணே..நீ என்ன பிளான் வச்சுருக்கீங்க?"
"1199"


இப்ப ரெண்டு கதைக்கும் முடிவு சொல்லியாகனும்..

கொஞ்சம் பொறுங்களேன் பிளீஸ்...
இந்த கதைய சொல்லவந்த நோக்கத்தை சொல்லிடுறேன்.

தமிழ் பேசும் மக்களிடம்..குறிப்பாக மாணவர்களிடமும்,இளைஞர்களிடமும் கொழுந்துவிட்டெரியும் ஜல்லிக்கட்டுக்கான ஒற்றுமை அறப்போர்..எம்மிடம் மிகுந்த வியப்பையும் உவப்பையும் அளிக்கிறது.

போராட்டத்தை ஆதரிக்காமல் எதிர்க்கும் சிலரைக்கூட நம்பலாம்.

ஆனால்...ஆதரிப்பது போலவே இருந்துகொண்டு...

அடுத்து...
"தனித்தமிழ்நாடு தான்"

"இந்த போராட்டமே என் மவன் சொல்லித்தான் ஆரம்பிச்சுச்சு"

"தம்பீ....உச்சி குளிருதுடா...எப்பவும் நான் உன் பக்கம்டா"

"ஏதென்சு நகரத்திலே..
மொகஞ்சதாராவிலே..."

"இந்தப் போராட்ட உணர்வைத்தான் மார்க்ஸ் சொன்னார்.."
"இப்படித்தான் 1965 ல நான் படிக்கிறப்போ"

இந்த மாதிரி பேசுறவங்ககிட்ட தான் ஜாக்கிரதையா இருக்கனும்.

மணிகளைக் கடந்து..நாள்களில் நடக்கும் இந்த போராட்டத்தை ஒரு துளி கலவரமின்றி..பெண்பிள்ளைகளை சிறு மாறுபட்ட கண்ணோட்டமுமின்றி கன்னியத்துடன்..
சாலைப் போகுவரத்துக்கு எந்த பாதகமும் இல்லாமல்..தாங்கள் போடும் குப்பைகளை தாங்களே சுத்தம் செய்து போராடும் பிள்ளைகளுக்கு தங்களுக்கான தலைவனை தாங்களே தயார் செய்து கொள்ளத்தெரியும்.
இத்தனை நாள் நாம் தயார்செய்து கிழித்த தலைவர்களைக் காட்டிலும் நல்ல தலைவர்களை அவர்கள் தயார்செய்து கொள்வார்கள்.
மற்றபடி வேடிக்கை மட்டும் பார்க்காமல் வீட்டுக்கு ஒருவர் ஒருநாள் முழுவதும் அவர்களோடு இருந்துவிட்டு வாருங்கள்.அது போதும்.

ஆகவே..
தானாக வரும் ஆதரவும்..இலவசமாய் வரும் ஆலோசனைகளும் இப்ப இனிக்கும்.எப்போதும் கசக்கும்...

இப்ப இரண்டு கதைகளின் முடிவை சொல்வதோடு பதிவை முடிக்கலாம்.

முதல் கதையில் வந்த அண்ணன் பின்னாளில் நான் நல்ல பதவியில் இருந்த ஒரு கம்பெனியில் செக்யூரிட்டி வேலை கேட்டு வந்தார்..

இரண்டாவது கதையில் வந்த அண்ணனுக்காக நானும் BSNL லில் 1199 ரூபாய் பிளான் வாங்கிட்டேன்..
இந்த பதிவை முடிச்சதும் அவர்கிட்டதான் பேசப்போறேன்...
காலையில் பேசும்போது கூட
காதுல ரொம்ப வலியா இருக்குன்னு சொன்னார்.


10 கருத்துகள்:

 1. ஹாஹா. இரவும் வரும் பகலும் வரும், உலகம் ஒன்றுதான். ஹாஹா வீரப்பா சிரிப்பு இது.

  பதிலளிநீக்கு
 2. நண்பரே
  முதல் கதையை நானே அனுபவித்திருக்கிறேன்
  சிறிது தாமதமாகத்தான் புத்தி வந்தது

  பதிலளிநீக்கு
 3. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  பதிலளிநீக்கு
 4. உண்மை.நல்ல தலைவரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.அந்த பயம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது.சி.த.இப்படியே மெய்ட்டைன் பண்ணு.

  பதிலளிநீக்கு
 5. இந்தப் போராட்டம் அறிவிப்பது என்னவென்றால்.... தலைவர்களுக்குச் சிறிது ஆட்டம் காண வைத்துள்ளது எனவே பயந்தேனும் நல்ல ஆட்சி தர முன்வருவார்கள்...இல்லையேல் நம் இளைய சமுதாய்மே இனி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுதுக் கொண்டுவிடும்....கதைகள் செம! முடிவும் அப்படியே!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நல்ல அனுபவங்கள்...

  இத்தகைய அனுபவங்களை அனுபவித்தது இல்லை ..ஆனாலும் இதுப்போல் வாசிக்கும் போது...இவைகளே உங்களை போன்ற கருத்தாளம் மிக்கவர்களை உருவாக்குகிறது என புரிகிறது...
  நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...

  வெல்லட்டும் உணர்வு போராட்டம்...

  பதிலளிநீக்கு