புதன், 11 அக்டோபர், 2017

கையில் வந்த சொர்க்கம்...


அதெப்படி கையில் வந்து விழிகளில் நுழைந்த சொர்க்கத்திற்கு "கை நழுவும் சொர்க்கம்" என பெயர் வைத்தார்கள் என்பதே

 இந்த நூலை படித்தவுடன் எனக்குள் எழுந்த முதற் கேள்வி..

நந்தவனம் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்த புத்தகம் பற்றி சொல்வதானால் குறிஞ்சி பூத்திருப்பது போலத்தான்...

சின்ன சின்ன சம்பவங்களை வைத்துக்கொண்டு வலிய கதைகளாக்கும் போக்கிற்கு மனசு இப்போதெல்லாம் ஒட்டுவதில்லை.. புதுமைப்பித்தன்,கு.பா.ரா, கல்கி என வாசித்த நெஞ்சம் எப்படி ஜி.நாகராஜனை வாசிக்கும் போது அதிர்ந்ததோ அதே உணர்வினை அண்மையில் தந்த தொகுப்பாக இந்த நூல் வந்திருக்கிறது...

என் வாசிப்பு மேசையில் கொஞ்சம் அதிக நாட்கள் இது தங்கி விட்டது ஊழ் அன்றி வேறில்லை..
வாசிக்க தந்துவிட்டு வாழ்த்திக்கூட இல்லை ஒரு வசவும் கூடவா வாராது என இதன் ஆசிரியர் என்னிடம் உண்மையாகவே சண்டையிட்டபோதெல்லாம் நான் மௌனியாய் இருந்திருக்கிறேன்...

என்னை அறிந்த தோழமை...
என் சோம்பலுக்கு திட்டினாலும் உறைக்காத எருமையின் தோலாய் இருந்தது மனசு...

வைராக்கியமாய் ஒரு முன்னிரவில் வாசிக்க எடுத்து அட்டையிலிருந்து அட்டை வரை முடிக்கையில் அதிகாலை விடிந்துவிட்டது.

பார்வைக்கு வந்த ஒருநூலை இத்தனை தாமதப்படுத்தியதற்கு நூலாசிரியரிடம் மன்னிப்பு கேட்கலாம்..ஆனால் அற்புதமான இந்த கதைகளிடம் எப்படி கேட்க...?

எழுத்தே பிழைப்பானவர்களின் உலகில் அரசுத்துறையின் உயர்பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி கதைகள் பற்றி சிந்திப்பார்?
கோப்புகளில் கையொப்பமிடவே விரல்வலிக்கும் நாட்களில் கதைகளை எப்படி தட்டச்சிடுவார்?
ஆணெனில் அமர பல இடங்கள் இருக்க..
இந்தப் பெண் எங்கே எடுக்கிறார் கதைக்கான விதைகளை?
எல்லாம் தாண்டி இயல்பான பெண்ணாய் நினைத்துப் பார்க்கும் இடங்களுக்கு எளிதில் செல்லமுடியாத "செல்வ சுந்தரி"யின் கதைகளில்,
அணிந்துரையில் எழுத்தாளர் மதுரா சொல்லியிருப்பது போலவே ஒவ்வொரு கதைகளிலும் ஒரு நாவலுக்கான கரு கனிந்து கிடக்கிறது..

ஆகாசப் பட்ஷி ஒன்று வாய்பிளந்து வான் நோக்கும் குஞ்சுகளுக்கு  ஆகாரமிடும் அட்டைப்படம் வாசக நெஞ்சங்களுக்கு கதைத்தீனி போடப்போவதன் அடையாளமே.

216 பக்கங்களில் உலகத்து மாந்தருக்கே பொருந்திப்போகும் 12 ராசிகளைப் போல் 12 கதைகளில் உலகத்தை அடைத்து தந்திருக்கிறார்...

சில தலைப்புகள் விரக்தியின் சோகத்தை சொல்லும் போதே சில தலைப்புகள் ஒற்றைவரி கவிதைகளாக மனசில் தங்கிக்கொள்கின்றன.

கறிச்சோறும்,வெள்ளை நிறத்திலொரு பூனை என்றும் தலைப்புகள் இருக்கும் போது தாண்டிப்போக யாராலும் முடிவதில்லை...

கதைகள் ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு பதிவின் அளவு நீண்டு எழுதும் அளவில் செய்திகள் கிடக்கின்றன...

வாசக உள்ளங்களுக்கு அந்த சஸ்பென்ஸ் இன்பத்தை அளிக்கும் பெருந்தன்மையில் மிக மேலோட்டமாகவே சிலவரிகளில் வெளிச்சமிட எத்தனிக்கிறேன்...

சராசரிக்குடும்பத்தலைவியின் கனவுகள் கானலாகும் அவலத்தை அடுக்கி அடுக்கி செய்திருக்கும் "அடுக்குமாலை" என்னும் கதைதான் நம்மை முதலில் வரவேற்கிறது..மிக எளிமையான வார்த்தைகள்...மனசுக்குள் நுழைந்து மாயம் செய்யும் கதைமாந்தர் பெயர்கள்..
நிறுத்தி நிதானமாய் ஒரு பெருமூச்சுடன் அடுத்த பக்கங்களுக்கு பயணிக்கலாம்.

சின்னவயதின் தேவதைகளாய் சிறகுவிரித்து நடந்த ஆசிரியைகளின் மறுபக்கம்...
பிள்ளைகள் அவர்களுக்கு பயந்தது மாறி பெண்பிள்ளை ஒருத்தியின் திமிரால் ஒரு பள்ளி ஆசிரியை படும் பாடுகளை பக்கத்திலேயே இருந்து பார்த்திருக்கிறார் உண்மையின் எல்லாப்பக்கமும் இப்படித்தானா என கேட்க வைக்கிறது"உண்மையின் மறுபக்கம்".

வானம் உரசும் கட்டடங்களும்,துடைத்து வைத்தாற்போன்ற சுத்தமும் தெரியும் வெளிநாட்டுக் காட்சிகள் நமக்கு..ஆனால் அதன் பின்னே இருக்கும் அயலக பணியாளர்களின் வியர்வை,தொலைந்து போயிருக்கும் அவர்களின் இளமை,காணாமல் போன கனவுகள்,  அம்மம்மா...ரவி என்ற அப்பாவி இளைஞன் ஆசைப்பட்டுப்போன துபாய் வாழ்க்கை..தோசையாய் அவனை புரட்டிப்புரட்டி எடுத்த சோகச்சூடு நம்மையும் தாக்கும் கதைதான்..
நூலின் தலைப்பை கொண்ட" கை நழுவும் சொர்க்கம்"..

ஆசிரியரின் அயலக வாழ்வை பற்றிய கேள்வி ஞானம் போற்ற்தலுக்குரியது என்றாலும் ..துபாயில் மெஸ் இருக்க வாய்ப்பில்லை என்பதும் தவறாய்த்தெரிவதில்லை.

பாருங்களேன்...
என்னையும் அறியாமல் எல்லாக்கதைகளையும் உங்களிடம் சொல்லிவிடப்பார்க்கிறேன்..ஆனால் அது ஒரு படைப்பாளருக்கும்,வாசிக்கப்போகும் உங்களுக்கும் செய்யக் கூடிய பாவம்...

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் என்றொரு கதை...
இதன் தலைப்பு தான் இயலாமை எட்டிப் பார்ப்பதாய் இருக்கிறது..

ஆசிரியருக்கு மீண்டுமொரு முறை வேண்டுதல் செய்யலாம்...
கம்பீரமான கதைகளுக்கு ஏன் கண்ணீர் வரும் தலைப்புகள்..?

வேகமாய் புல்லட் ரயில் போல் நகரும் சில கதைகள் ,அதிக சுமையுடன் நகரும் கூட்ஸ் ரயில் போல் வார்த்தைச்சுமைகளை அதிகம் கொண்டிருக்கும் சிலகதைகள்..
சில இடங்களில் ஆசிரியர் தன்னிலை மறந்து விவரிக்க ஆரம்பிப்பது புரிகிறது...

ஆக...
எழுத வருபவர்கள் மிக எளிதாக கவிதைகளின் பக்கம் விழுந்து கவிஞர் என்ற பட்டத்தை சுமந்து திரிவதை பெருமையாய்க் கொள்வதுபோலில்லாமல்..

சிரமமான கதைகளின் பக்கம் கவனமெடுத்து..
அதையும் காதலுடன் செய்து..வாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் நெருக்கமாகிவிடும் செல்வசுந்தரி..
இந்த தொகுப்பின் மூலம் எனக்கும் அண்மையாகி இருக்கிறார்..
தொடரப்போகும் அவரின் எல்லாப்படைப்புகளும் புகழின் உச்சி எய்தி வெளிச்சமும் விருதுகளும் பெற இந்த எளியவனின் ஆசையும்...அன்பும்...

அன்புடன்
மீரா செல்வக்குமார்








7 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்
    நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. எனது சகோதரியின் படைப்புக்கு கிடைத்த சிறந்த விருது நன்றி

    பதிலளிநீக்கு
  4. நூல் மதிப்புரை நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. கை நழுவும் சொர்க்கத்தை கையில் வந்த சொர்க்கமாக்கிய உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பானதொரு விமர்சனம். நூலாசிரியர் அவர்களுக்கும் அண்ணன் மீரா செல்வக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. மிகச் சிறப்பானதொரு விமர்சனம். நூலாசிரியர் அவர்களுக்கும் அண்ணன் மீரா செல்வக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு