சனி, 20 ஜனவரி, 2018

அப்பாவின் விசில் இன்னும் ஒலிக்கிறது..

அன்பின் தோழன் நாணற்காடனின் "அப்பாவின் விசில் சத்தம்" வாசிக்க எடுத்துவிட்டு  அளவில் எடைகுறைந்த
அந்த புத்தகத்தின் கனம் தந்த சுமையால் எழுத யோசித்திருக்கிறேன்...

பேசிக்கொண்டே இருக்கும் தோழன் ஒரு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மிகக்குறைந்த நாளின் அவஸ்தையில் மரணித்துப்போன என் அப்பாவை சிதையில் அடுக்கிய ஒரு முன்னிரவில் கொள்ளிவைக்கும் முன் சில முடிகளை பிடுங்கி வைத்திருந்தேன்.. பல சங்கடங்களுக்கிடையே அப்பாவை மறந்தது போலவே அதனையும் தொலைத்துவிட்டேன்...
நாணலின் அப்பாவின் விசில் என் அப்பாவின் முடியை தேட வைத்திருக்கிறது..

நீளமில்லாத சின்னசின்ன கதைகள் வாழ்வின் ஆழத்தை அடையவைக்கின்றன..

நாணலின் இந்த தொகுப்பின் எல்லாக்கதைகளும் மரணத்தைப் பற்றிப்பேசும் பொதுமை இயல்பாய் இருக்கிறது..ஒவ்வொரு கதையிலும் யாரோ ஒருவர் அல்லது பலரின் மரணமும் ஒரு பாத்திரமாய் மாறியிருக்கிறது...

பிட்டுக்கு மண் சுமந்தவன் சிவன் எனில்,
கணவனின் மரணத்தின் பின்னே சித்தாளாகி மண் சுமக்கும் பார்வதி..
"சடங்குகளும்,சம்பிரதாயங்களும் சொல்லி,பூவையும் பொட்டையும் பறித்துக்கொண்ட உறவுசனங்கள் இந்த இரத்தப்பெருக்கை நிறுத்த வழி சொல்லாமல் போய்விட்டதே" என்னும் இறுக்கம் என்னும் கதையில் மரணத்தின் வலியை விட பெரும் அவஸ்தை..

எழுத்துகள் மாயமாகிவிடும் ஒரு கற்பனையின் கதையில் நாணல் விஷ்வரூபமெடுப்பதை நானும் சொல்லப்போவதில்லை.ஏனெனில் அவை மாயமாகிவிடும் கவலை எனக்குமிருக்கிறது..

நாய்கள் துரத்தும் பாலமுருகனாய்த்தான் நாமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்..முகங்கள் மாறியிருந்தாலும் நாய்கள் அப்படியேதான் துரத்துகின்றன..

கோழியின் அம்மா இறந்து போயிருந்த வீதியின் மரண வாசம் இயற்கையாயிருக்கிறது...கோழியாய் மாறியிருந்த ரஞ்சித்தின் பீறிடும் அழுகையின் ஓசை உங்களுக்கும் கேட்கலாம்..

"சொந்த உதடுகள் போல அந்நியம் எதுவும் இல்லை.கோடான கோடி முத்தங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு ஒற்றை முத்தமிட வழியற்றும்,ஒரேயொரு முத்ததை பெற்றுச் சிவக்க வக்கற்றும் சொந்த உடலுக்கே அந்நியமாய் ஆகிப்போன வரலாறு உதடுகளுக்கே உரியது"

இதைப்படிக்கும் உதடுகள் சுய இரக்கம் கொள்ளலாம்.

இன்னும் சில கதைகள்...

கதைகள் யாவும் நம் நெஞ்சுக்கு நெருக்கமாய் இருக்கும் நிகழ்வுகளாய் இருக்கின்றன..

அப்பாவின் படத்தை கூட எடுத்துச்செல்ல முடியாத பூரணி நெஞ்சில் சுமந்து கொள்கிறாள்..

நாணல்..நானும் உன் கதைகளோடு கரைந்து போயிருக்கிறேன் தோழா!

நூல் வடிவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்..
படிக்கப் படிக்க ஏடுகள் எடுத்துக்கொள்கின்றன..
உன் கதைகள் யாவும் என் நெஞ்சச்சுவரில் ஒட்டிக்கொண்டன என்பதற்காய் பக்கங்களை சரியாய் ஒட்டாமல்.விட்டிருப்பது அநியாயம்..

முத்தங்களை யாசிக்கும் என் தோழனே உனக்கு திகட்டும் வரை முத்தம் கொடுக்க ஆசைதான்...
நிக்கோடின் படிந்திருக்கும் வாடையடிக்கும் முத்தங்களா உனக்கு பிடிக்கப்போகிறது..

போ..போ...உனக்கென பூரணி காத்திருப்பாள்...
உன்னொரு கதையின் நாயகி சம்பியைப்போல் அவளும் சொல்ல வாழ்த்துகிறேன்...
"சண்டாளா..."
ஜன்னல் சிறிதாய் திறக்கட்டும்..






4 கருத்துகள்:

  1. உங்கள் வரிகளில் விமர்சனம் சிறப்பாய் அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் அருமை செல்வா....

    கீதா: ரசித்து வாசித்த விமர்சனம். எங்களிடமும் பல புத்தகங்கள் இருக்கின்றன நம் பதிவர் நண்பர்களின் புத்தகங்கள் உங்கள் புத்தகம் உட்பட...வாசித்தும் ஆயிற்று ஆனால் விமர்சனம் எப்படி எழுதுவது என்ற திகைப்பு...முன்பு ஓரிரு புத்தகங்களுக்கு எழுதியதுண்டு ஆனால் சிறப்பாக அமையவில்லை. பலரும் அழகாய் எழுதுவதைப் பார்த்த போது தயக்கம் வந்துவிட்டது. எங்கள் எழுத்துகளில் அந்த உயிர்ப்பு இல்லை...எழுதத் தெரியாத தள்ளாட்டம். பலரும் மிக அழகாக விமர்சனம் எழுதுகிறார்கள் உங்களைப் போன்று கவித்துவமாகவும்..அதை வாசிக்கும் போது ஆஹா வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஏனென்றால் புத்தகத்தை விட விமர்சனம் தான் பலரையும் ஈர்த்து தாங்க வைக்கும்...திரைப்படத்தைக் கூட விமர்சனம் பார்த்துச் செல்வோர் உண்டில்லையா...அப்படி... ஆனால்....

    புத்தகத்தின் சிறப்பை எங்கள் எழுத்துகள் சிதைத்துவிடக் கூடாதே என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பயத்தால் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் சிறப்பாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு