திங்கள், 21 மே, 2018

மதமெனும் அபின்

அரசென்பதும் சட்டமென்பதும் யாவர்க்கும் பொதுவே.
நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதனினும் அதிகமான உச்சத்தில் சட்டமிருக்கும்.


எத்தனை கோடி ஜனமிருப்பினும் முகம் ஒன்றாகவே இருக்கவேண்டியதன் அவசியம் நாட்டின் ஒற்றுமைக்கு எப்போதும் தேவை..

மத, இன மொழிகளின் அடிப்படையில் பிரிந்து கிடந்தாலும் பாரதத்தின் பிள்ளைகள் என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி..!

ஒன்றாகி அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவில் அத்தனை பெரிதாய் துன்பமில்லை.

நாடுகளாய்ப் பிரிந்தும் நாகரீகம் வளர்ந்ததாய் மார்தட்டிக்கொண்டுமிருக்கும் இந்த காலத்தில்தான் எத்தனை கலவரங்கள்?

மனிதகுலத்தின் அமைதிக்காகவே தோன்றின மதங்கள் என்றாலும் ,அதை பகுத்தறிவுக்கண்கள் நம்ப மறுக்கிறது..

ஒற்றுமைக்காகவே ஒரு மதம் தோன்றியதெனில் மற்ற மதங்கள் எப்படிப் பிறந்தன.

ஆழ்ந்த மதங்களின் மீதான வரலாற்றுப் பார்வையும்,தர்க்கங்களின் பால் ஈடுபாடுமில்லாத ஒரு சாமான்யனாய் தோன்றுவதெல்லாம் மதங்களின் தோற்றுவாயில் ஏதோ பிரச்சனை இருந்திருக்கவேண்டும்.

அழுந்திக்கிடக்கும் மனிதக்கூட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றை ஆதரித்து,பரிணாமத்தில் அவை மதங்களாகியிருக்கக்கூடும்..

ஆராய்ச்சியை அத்துடன் விட்டுவிட்டு..சமீபங்களின் சங்கதிகளை சற்று பார்க்கலாம்.

சாதிகளின் அடிப்படையில் தொடங்கும் குழுக்கள் ஆரம்பகட்ட அவஸ்தைகள் எனில் மதங்களின் பெயரால் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் பல கேள்விகளை எழுப்பிவிடுகின்றன.

மதங்களின் சார்பற்ற நாடு, எல்லா மதங்களையும் அரவணைத்துக்கொண்டு போகும் தேசம் எனினும் குறைகளும்,ஓரவஞ்சனைப்பார்வைகளும் எல்லா இடங்களைப் போலவும் இங்கும் இருக்கத்தான் செய்கிறது.

பேதங்களைத்தாண்டிய ஒற்றுமையும்,மதங்களில் குறுக்கீடு செய்யாத தன்மையும் ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள வரங்கள்.
ஒருவர் மதத்தைப்பற்றிய பெருமைகளை எடுத்துச்சொல்லும் உரிமை எப்படியோ அதைப் போலவே தர்க்கங்களுக்கானதும் இருக்கிறது.

கிறிஸ்துவ மதத்தின் எத்தனை பிரிவுகளிருந்தாலும் எனக்கு எல்லாரும் ஏசு சாமி கும்பிடுபவர்கள் தான்...
அவர்களின் பண்டிகை கால அலங்காரங்கள்..
வெள்ளையான நீண்ட உடைகள்,இரக்கம் சுரக்கும் கதைகள்...
பிள்ளைப்பருவங்களில் எனக்கு பைபிள்கள்,குறிப்புகள் என ஏராளம் கிடைத்தன. அவர்களைப் பற்றிய புரிதல் கிடைத்ததேயொழிய மதம் மாறுதல் போன்ற எண்ணங்கள் தோன்றவில்லை.
ஒரு வேளை மதம் மாறுவதற்காகவே அவர்கள் அவற்றை கொடுத்திருப்பார்களெனில் இன்று தேசமே கிறிஸ்துவமயப்பட்டிருக்கும்..

ஆனால் இன்று இணையங்களில் ,
துண்டுபிரசுரம் கொடுக்கும் பெண்களையும்,ஆராதனைக்கூட்டம் நடக்குமிடங்களில் செய்யும் கொடுமைகளும் மனசாட்சியுள்ள எவரையும் படுத்துகிறது..

அதனினும் அதிகமாய் இஸ்லாமியர்களின் பாடு இருக்கிறது.
ஒரு பயணத்தில் தொப்பியும் தாடியுமாய் உடன்வரும் அவர்களை தீவிரவாதிகளைப்போல் நடத்துவது எண்ணங்களின் வக்கிரமன்றி வேறென்ன?

இலைமறை காய்மறைவாக இருந்தவைகள் ஊடக,இணைய விபாதங்களில் காட்டுக்கூச்சலிடும் அளவுக்கு வளர்ந்திருப்பது நிச்சயம் வல்லரசுக்கனவுக்கு நல்லதல்ல.

எல்லாமதங்களைப் பின்பற்றுவோர்க்குள்ளும் தேசத்துக்கு ஆகாத சில இருக்கத்தான் செய்கிறது.
ஜனநாயகம் தந்த உரிமையில் அவற்றை கேலிக்கூத்தாக்க, பிரிவினை பேசுவதும்,மதத்துக்குள்ளே தீவிரத்தன்மை வளர்ப்பதும் எந்த மதமும் சொல்லவே இல்லை..

தேசத்தின் நலனே,மதங்களைக் காட்டிலும் முக்கியமென்பேன்..
மதங்களினின்றி தேசம் இயங்கும்...தேசங்களின்றி மதங்கள் இருக்க எப்படி இயலும்..

தன் மதச்சட்டங்களையே பின்பற்றுவோம்  நாட்டின் சட்டங்கள் தேவையில்லை என்பது அராஜகம்.
ஒரு அமைப்பின் தலைமை தன் மதத்தின் பெண்களோடு செய்த வல்லுறவுப்பேச்சுகள் முகம் சுழிக்க வைக்கின்றன யாரையும்..
அது உண்மையோ பொய்யோ நிரூபிக்கவேண்டிய இடத்தில் அரசும் இருக்கவேண்டும்..
அது அவர்களின் மதத்துக்குள்ளும் அமைப்புக்குள்ளும் என தள்ளிப்போனால் ..எல்லா அமைப்புகளின் செய்கையும் மாறத்தான் செய்யும்.
மிகக்கேவலமான அந்த செயல்களை அவர்களுக்குள்ளே விவாதிப்பதும்,
அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் எதுவுமே சம்பந்தமில்லாதது போலிருக்கிறது..
உரிமைகளைக்கொடுக்கும் அரசு உற்ற நேரத்தில் தலையிடவும் வேண்டும்.

உலகம் தேவையான அளவுக்கும் மீறி சுருங்கிவிட்ட நிலையில் மதங்களும் இனங்களும் உலகின் அளவு விரிந்துமுள்ளன.

பரந்த மனப்பாண்மை நமக்கு மட்டும் உரித்தானதல்ல..

ஜோர்டான் என்னும் இஸ்லாமிய நாட்டின் தலைநகரில் பிள்ளையார் கோவில் இல்லாமல் இல்லை.
அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நம்மூர் பட்டர்கள் டாலர்களில் தட்சணை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
மலேசிய பத்துமலைக்கோவிலில் பூசைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருக்கும் தேசத்தில் பின்விளைவுகளை யோசிக்காமல் அடாவடித்தனமும் அதிகாரமும் செலுத்துவது எல்லா தேசங்களிலும் தொடருமானால் இந்த பூமி சரியாக சுற்றாது..

மனிதனாய் பிறந்ததற்கு பெரிதாய் ஒன்றும் பிரதியுபகாரம் செய்துவிட வேண்டியதில்லை..
மற்றொரு மனிதனை அற்ப காரணங்களுக்காக எதிரியாக பார்க்காமலிருப்பதே போதும்.






















2 கருத்துகள்:

  1. அருமை...முதலை உருவானது கோழியா, முடைடயா? என்ற கேள்வி மாதிரி, முதல் தோன்றியது மனிதரா, மதமா..என்று யோசிக்க வேண்டியிருக்குது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், நலமா ?

    பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் வலைதளம் வர இயலாத சூழல்...

    அரிதாய் வந்த வேலையில் தங்கள் பதிவு தென்பட்டது... அவசியமான பதிவை பார்த்தும் படிக்காமல் கடக்க மனம் ஒப்பவில்லை...

    உள்ளதை உள்ளபடி சொன்ன, இதயத்தில் உதிரம் வடியவைக்கும் பதிவு இது.

    நான் பிறந்த மதம் ஒன்று... நான் படித்த பள்ளி நடத்தியது வேறுமதத்தின் அறக்கட்டளை... என் நண்பர்களோ மூன்றாவதான ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் ! வளரும்போதே உலகின் முப்பெரும் மூன்று மதங்களின் கோட்பாடுகளையும் கற்று வளருவது இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஆனால் இந்த வரம் இந்திய மத வியாபாரிகளால் சாபமாக மற்றப்பட்டுவிட்டது.

    தேசத்தின் கனவு என்னவோ வல்லரசாவது பற்றியதாகத்தான் இருக்கிறது... ஆனால் செயல்பாடுகள் கற்காலத்தை நோக்கி செல்கின்றன !

    " மிகக்கேவலமான அந்த செயல்களை அவர்களுக்குள்ளே விவாதிப்பதும்... அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் எதுவுமே சம்பந்தமில்லாதது போலிருக்கிறது..
    "

    உண்மை நண்பரே... இதே போன்ற ஒரு சம்பவம் பிரான்ஸில் சமீபத்தில் நிகழ்ந்தது. குற்றம்சாட்டப்பட்ட மத பிரமுகர் நீதிமன்ற உத்தரவால் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டார் ! இவ்வளவுக்கும் மத விசயங்களில் தலையிடாத நாடு அது. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவது என்பது மத கோட்பாடுகளை தாண்டிய, நாட்டின் குற்றவியல் தண்டனைக்குள் வரவேண்டிய செயல்.

    ... இப்போதெல்லாம் மதம் என்றாலே எனக்குள் ஒரு அயர்வுதான் தோன்றுகிறது... ஆனாலும் இத்தனைக்கு பிறகும் நடுநிலை பிழலாமல் இருக்கும் உங்களை போன்றவர்களை சந்திக்கும் போதும், உங்களின் பதிவுகளை படிக்கும்போதும் நம்பிக்கையும் துளிர்க்கிறது... உங்களை போன்றவர்கள்தான் இந்திய தேசத்தின் பலம்...

    பாழடைந்துக்கொண்டிருப்பது நம் முப்பாட்டன்கள் மதங்களை மறந்து மனிதத்தை மட்டுமே நம்பி கட்டுவித்த தேச ஆலயம்... தேவையெனில் மதசட்டைகளை கழற்றி தூசு தட்டி அச்சட்டைகளையே பொசுக்கி மனித தீபத்தை ஏற்றி பிடிப்போம்... நிச்சயமாய் நான்கு திக்கும் ஒளிபரவும்.

    சாமானியன்











    பதிலளிநீக்கு