திங்கள், 7 மார்ச், 2016

குடங்களில் கொதித்த பால்...

கரும்புத்தொட்டிலில்
கதறும்
ஒரு குழந்தையை
கவனமாய்
தூக்கிப்போகிறார்கள்.

சின்ன சொம்பிலிருந்து
குடம்வரை
பால்.
ஸ்கூட்டிகள் தொடர
வழிந்து
செல்கிறது.

பெரும்பாலும்
சாலை அடைத்து நீள்கிறது
வாய்களில்
தைத்த வேல்கள்.

சர்க்கரைத்
தண்ணீருக்கும்
நீரான மோருக்கும்
நீளும் பிளாஸ்டிக் குவளைகள்.

வடித்துக்கிடக்கிறது
மலையென
அன்னம்..
அலறுகிறது மைக்..
வந்து
உண்ணச்சொல்லி..

வண்ணங்களில் வார்த்தெடுத்து
அடுக்கியிருக்கிறார்கள்
கண்கள்
மொய்க்கிறது
ஈக்கள் தொடும்
இனிப்புகளை.

வான்
சுற்றிவருகிறது
ராட்டினம்.
மயக்கத்தில் இறங்கிப்போகிறாள் ஒரு
புதுப்பெண்.

உண்டியல் கேட்டு
அழுகிறாள்
சிறுமி.

பெண்வேடமிட்ட ஆண்களும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

முண்டும் வரிசைகள்.

அபூர்வமாய் தாவணிகள்..

வெற்றுக்கால்கள் ..
நிழல் செருப்பு
தேடி அணிகின்றன.

விசில்கள்..
மேளமெனெ
வீசித்தெறிக்கிறது..

நாளைய
வெறுமை
ஞாபகம் வந்திருக்கலாம்
அம்மன் மட்டும்
அமைதியாய்
இருக்கிறாள்..

13 கருத்துகள்:


 1. பார்வையால் பாவை விழுங்கும் பருவக் குமரங்கள்
  பாவம் தீர்க்க தீமிதிக்கும் பகுத்தறியா பாமரர்கள்
  தேர் பார்ப்போரில் திருடும் தீமன ஆறளையோர்
  ஊர் போக்கில் ஊசலாடும் ஊனங்கள்தான் மாறிடுமோ?

  பதிலளிநீக்கு
 2. அருமை
  அருமை

  அம்மனுக்கு அமைதியாய்
  இருப்பதைத் தவிர வேறு வழியில்லை நண்பரே

  பதிலளிநீக்கு
 3. திருவிழாக் காட்சிகள்.. தீர்ந்த பின் நினைவின் நீட்சிகள்..

  பதிலளிநீக்கு
 4. கவிதையில் காட்சிகள் அருமை.

  கவிஞரே தாங்கள் கேட்டிருந்த தொடர் பதிவர்கள் எழுதி இருக்கின்றேன் எமது தளம் வருக...

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா.தங்களின் கவிதையை எதிர் பார்த்து இருந்த எனக்கு இன்று மகளிர் தினந்தன்று அருமையான கவிதைக்காட்சிகளில் மூழ்கினேன் ஐயா.நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அம்மன் அமைதியாய் இருக்கிறாரா..!!..இருக்க வைக்கப்பட்டு இருக்கிறாரா??

  பதிலளிநீக்கு
 7. அம்பாள் என்றைக்குப் பேசினாள்? அவளின் மௌனத்தைத்தானே இவர்கள் தமக்கான சம்மதமாக எடுத்துக்கொண்டு தொடர்கிறார்கள்! பேசியிருந்தால் இந்த (அப்)பாவிகள் இப்படித் தன்னைத்தானே வருத்திக்கொண்டு வரும் வழக்கத்தை அல்லவா மாற்றியிருப்பாள்? பிள்ளையார் சாப்பிட மாட்டார் என்றுதானே பெரும்விருந்து படைக்கப்படுகிறது! என்றாவது ஒரு நாள் “டேய் நிறுத்துடா! எனக்குப் படைச்சிட்டு நீங்களா திங்கிறீங்க, திருப்புடா இலையை என்பக்கம்” என்று பிள்ளையார் சொன்னால் என்னாகும்? அடுத்த நாளிலிருந்து பிள்ளையார் கண்ணில் படும்படிப் படையல் இருக்காது! சரியா?

  பதிலளிநீக்கு
 8. திருவப்பூரா, நார்த்தாமலையா?
  அப்படியே காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.அருமை நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. அட! அம்பாளின் மௌனமா!!! முதலில் நினைத்தது தேர்தலுக்காக சில நாட்களுக்கு முன் இப்படித்தான் காட்சிகள் எங்கள் பகுதியில் நடந்தது. அப்படித்தான் எல்லா பகுதிகளிலும் நடந்திருக்கும் என்று...நீர்ப்பந்தல், உணவுப்பந்தல் என்று. உண்டியலும் ஏந்தினார்கள்!!! இறுதியில் அம்மன்!! ம்ம்ம் சரிதான் அந்த "ன்" ஐ எடுத்துவிட்டு குறில் ம வை நெடிலாக்கி இட்டாலும் பொருந்துமோ....செல்வா!!!!

  கீதா

  பதிலளிநீக்கு