வெள்ளி, 20 ஜூலை, 2018

நந்தலாலா-நந்தன் ஸ்ரீதரன்

மறைந்த கவிஞர் வைகறை புதுகைக்கு வந்த புதிதில்
கவிஞர்களுக்கான சந்திப்பொன்றை நகர்மன்றத்தில் நடத்தினார்.
அந்த கூட்டத்தில் தான் முதன்முதலாக ஸ்ரீயை சந்தித்தேன்.
அந்த கூட்டத்தில் நான் பேசவுமில்லை.ஏனெனில் அந்த கூட்டம் நிகழ்ந்த பொழுதுகளில் நான் சின்னதாக ஒரு படைப்பையும் எழுதியிருக்கவில்லை.

கவிஞர்களின் கூடல் அத்தனை கிளர்ச்சியாக இருந்தது.

அதன் பின் நந்தன் ஸ்ரீதரனை நான் மிக இயல்பாக ஸ்ரீ என்றே முகநூலில் அழைக்கத்தொடங்கினேன்.

அத்தி பூத்தாற்போல் நிகழும் சில உரையாடல்களைத்தவிர ஸ்ரீயுடன் நான் அதிகம் நெருங்கியதில்லை.

கடந்த வருட இறுதியில் ஸ்ரீயின் சிறுகதைத்தொகுப்பு சென்னையில் வெளியான போது நியாயமாய் நான் சென்றிருக்கவேண்டியது.
வழக்கம் போல் இயலவில்லை.

வாசகசாலையின் சந்திப்பொன்றில் அடுத்தமுறை ஸ்ரீயின் நந்தலாலா குறித்த கலந்துரையாடல் என்றவுடன், குற்ற உணர்வுடனே ஸ்ரீயை தொடர்பு கொண்டு,
சுஜாதா மேடம் மூலம் வந்து சேர்ந்த "நந்தலாலா" வை இன்று முழுவதும் வாசித்திருக்கிறேன்.

யாவரும் பதிப்பகத்தின் வழியே வெளியாகியிருக்கும் ஸ்ரீயின் இந்த தொகுப்பை இத்தனைநாள் தவற விட்டமைக்கு என் மன்னிப்பைக்கோருவதோடு
ஒரு மகத்தான மனிதனின் நட்பில் இருப்பதற்காய் பெருமையும் கொள்கிறேன்.
நிற்க.

வெளிர்நீல அட்டையில் பொதிந்திருக்கும் புத்தகம் மிக எளிமையான வடிவமைப்பு.

ஸ்ரீயின் இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த விசயம்,
தொகுப்பு போடுறதுன்னு ஆகிப்போச்சு எழுதுன எல்லாத்தையும் அடைச்சுடலாம்னு இல்லாம ஒன்பதே ஒன்பது கதைகள்..
இவற்றை நவரத்தினம் போல என்று நான் சொல்வேனெனில் பின்நவீனத்துவ அறிவுஜீவிகள் ஏளனமாக பார்க்கக்கூடும்...
ஆனாலும் நான் இந்த ஒன்பது கதைகளையும் வேறெதற்கும் ஒப்பிடப்போவதில்லை.

தான் பிறந்த மண்ணையும்,பிழைப்புதேடி அலைந்த மண்ணையும் மனதுக்குள் சுமந்துகொண்டு இரட்டைக்குதிரை சவாரி செய்திருக்கும் ஸ்ரீ...எழுத்தின் தன்மையில் இரண்டுக்கும் சரியான இடத்தை கொடுத்திருக்கிறார்.

முன்னுரையில் தனக்கான வாழ்க்கையை துள்ளலும் நகையுமாய் சொல்லியிருக்கும் ஸ்ரீ
இப்படித்தான் கதைகளையும் கொண்டுபோயிருப்பாரா என்ற எண்ணத்தை விதைத்து விடுவதில் ஆரம்பிக்கிறது புத்தகம்.

போனதலைமுறை அப்பன் ஒருத்தனுக்கும் இந்த தலைமுறை பிள்ளைகளின் அப்பனுக்கும் நடக்கும் மனவெளியுத்தங்களை காட்சிப்படுத்தியிருக்கும் "உள்ளே இருந்து கொதிக்கும் சொற்கள்"..

கண்டிப்பான அப்பாவுக்கு பிறந்து கனிவான இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாயிருக்கும் கோவிந்தசாமி..

உடம்புக்குள் புற்று வந்தும் அறியாத பெரியவர் இன்னும் தன் அதிகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் அறியாமை.
இது என் அதிகாரத்துக்குட்பட்ட எல்லை இங்கு நானே ராஜா என்ற இறுமாப்பில் விழும் பேரிடி..

இடைப்பட்ட சென்னை தங்கும் நாள்களில் வீட்டுக்குள் நிகழும் பருவநிலை மாற்றம்...
அழும் கருவாயனின் சின்ன குரலையும் மனசுக்குள் கடத்திவிடும் லாவகம்.
நோயாளியான அப்பாவின் நிலையை பிள்ளைகளுக்கு ரகசியமாய் சொல்லி தன்னை நியாயப்படுத்திக்கொள்வதோடு..
அந்த முதியவரின் பால் பிள்ளைகளின் வெறுப்பு வளர்ந்துவிடக்கூடாதே என்ற பரிதவிப்பு..

காட்சிப்படுத்துதல் ஒரு கதையில் மிக எளிது.ஒரு வீட்டையோ,வீதியையோ அப்படியே சொல்லிவிடலாம்..
ஆனால் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஜீவனின் மனோநிலையையும்,
அவர்களின் மனசுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடிகளின் காட்சியை எழுத ஒரு தேர்ந்த எழுத்தாளன் தான் வேண்டும்.

ஒரு நல்ல படைப்பின் எல்லா காட்சிகளும் உட்சபட்ச உணர்வை ஊட்டவேண்டியதில்லை.
ஒற்றை கண்ணசைவு மட்டுமே சில இடங்களில் போதுமானதாய் இருக்கும்.

பாரதிராஜா இயக்கிய கிழக்குச்சீமையிலே என்றொரு திரைப்படத்தில் ராதிகாவின் வீட்டில் இலையில் உண்ணும் அண்ணன் மைத்துனரின் வார்த்தைகளுக்காய் இலையை எதிர்ப்புறமாய் மூடும்போது "அண்ணே..." என கதறும் ராதிகாவின் அழுகை என்னை பலநாட்கள் தூங்க விடவில்லை..

ஆம் ஸ்ரீ...
கோபத்தில் கிளம்பும் மாமனாரின் காலில் பொத்தென விழும் வெள்ளையம்மாளும் இன்றென்னை தூங்கவிட மறுக்கிறாள்.

ஸ்ரீ யின் எழுத்துகளில் தவிர்க்கவே முடியாதவை மண்ணின் நினைவுகளும் ,
பசியின் வார்த்தைகளும்..
அது வயிற்றுப்பசியோ,உடலின் பசியோ உள்ளதை உள்ளபடி சொல்லும் கதைகள்.

பிறந்த சின்னமனூரின் மண்ணின் மணத்தை தேக்கிவைத்திருந்து தன்னையறியாமல் ஒவ்வொரு கதைக்குள்ளும் தூவியிருப்பதை காண ஞானக்கண்ணெல்லாம் தேவையில்லை தான்.

ரத்தமும் சதையுமாய் கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருப்பதும் கதையாக்கியிருப்பதும் அற்புதம் ஸ்ரீ.

எழுத்தை விற்று சோறு தின்னும் அவலத்தில் சம்பளம் குறைவாக வழங்கப்படும் நேரத்தில் வந்துவிடுகிறது கெட்டவார்த்தைகள் உடும்பென..ஆயினும் கொட்டிவிட மனமின்றி கடக்கிறது எங்கள் புலிகளும்.

அப்பனுக்கு திவசம் செய்ய ஹாப் பாட்டில் லஞ்சம் வாங்கும் மகனை சுருளியில் அடுத்தமுறை பார்த்தே ஆக வேண்டும்.

ஒண்டுக்குடித்தன மறைவு வாழ்க்கையில் டக்கென மின்னல் போல் நிகழும் மாற்றங்களாகவே..
மண் போன்றிருக்கும் மனிதர்கள் மலையாவதும்,சாக்கடைகள் கங்கையாய் மாறிப்போவதும்..

சாவதொன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் ஈஸ்வரனின் அறிமுகம் அத்தனை பகடியென்றால் அவனின் நிகழ்கால அறிமுகம் எத்தனை திருப்பம்...

தொகுப்பின் என்னைக்கவர்ந்த கதையாக "தேவமலர் அக்காவும் பெர்ட்ரண்ட் ரசல் அண்ணனும்" என்னும் கதை அத்தனை உணர்ச்சிகளை கொண்டதாய் இருக்கிறது.
எளிமையான அம்மா உருவில்.இருக்கும் அக்காவை,அக்காவின் காதலை சாட்சியாயிருந்து பார்க்கும் இவன் கடைசியில் அம்மாவாய் மனசுக்குள் ஏற்றும் அக்காவென சொல்லும் போது...ஓ கதையை இப்படித்தான் முடித்தாகவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இருக்கிறதா ஸ்ரீ.

தோற்றவளின் கடைசிச்சொற்கள்
எத்தனை பரிதாபமாயிருக்கிறது.
மாற்றுத்திறன் கொண்ட சிறுமியை இந்த சமூகம் என்னவெல்லாம் செய்கிறது என்ற செய்தியை சமீபத்தில் வாசித்து முடித்த ஈரம் காயும்முன் படித்த இந்த கதையில் தோற்றது அவளா இந்த பாழாய்ப்போன சமூகமா என்ற கேள்வி வந்து நிற்கிறது.

மந்திரக்கோல் சுழற்றிக்கொண்டிருக்கும் அகல்யா..
மருந்துவிற்பவனின் மற்றொரு  வாழ்க்கை...

ஒவ்வொரு கதையையும் முடித்தபின் வரமறுக்கும் பார்வையை கட்டி இழுத்துப்போக வைத்திருக்கும் எதிர்பார்ப்பும் இயல்பான நடையும்,எளிமையான மனிதர்களை சொல்லியிருக்கும் விதமும்,சமரசமற்ற வார்த்தைகளும்
ஸ்ரீ உங்களின் கதைகள் வழக்கமாய் நான் வாசிக்கும் கதைகளிலிருந்து மாறுபட்ட நல்ல சுவையாகத்தான் இருக்கின்றன.
உங்கள் வார்த்தைகள் போலவே கதைகளும் நேர்மையாய் இருப்பதை உணர்கிறேன்.
பதினாங்கு முத்தங்களின் வனராணியை தந்த வாய்ப்பை தள்ளிவிட்டது போல் இல்லாமல் என் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

அது சரி ஸ்ரீ...
ஏன் கதைகள் முழுவதுமே பசி பசி யென ஆலாய்ப்பறக்கிறது. உங்களின் கதைகள் முழுமைக்குமே ஒரு துன்பியல் சாயை...
அச்சமூட்டுகிறது ஸ்ரீ.

ஒரு சோகக்காட்சிக்கு முன்னே நிகழும் சந்தோசக்காட்சி வரும் சினிமா போலவே...
நீங்கள் பகடியாய் ஏதேனும் எழுதியிருப்பதை வாசிக்கும் போதே பயம் வந்துவிடுகிறது.
சின்னத்திரையின் தொடர்களுக்கான திரைக்கதை எழுதி எழுதி இப்படியாகி விட்டதா என்ன?

இந்த அங்கலாய்ப்புகளுமே ஸ்ரீ..எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தானே தவிர.வேறொன்றுமில்லை.

ஸ்ரீ ,
எப்போதோ ஒரு பத்தாம் வகுப்பு விடுமுறையில் நான் பார்த்த சின்னமனூர்..நேருசிலை,புகழகிரி தியேட்டர்,குச்சனூர் குளம்,பச்சைக்குமாச்சி ரோடு,திராட்சைத்தோட்ட அதிசயங்கள்,சைக்கிளில் சென்ற சுருளி,என அதிசயித்த அந்த ஊர் எனக்கே அப்படியென்றால்...
பிறந்து வளர்ந்த நீங்கள் எப்படியெல்லாம் உணர வாய்ப்பிருக்கிறது..

இந்த கதைகளை எழுதப்போகும் அத்தனை கதைகளுக்குமான டீசராகவே பார்க்கிறேன்..

எழுதுங்கள் ஸ்ரீ..




































5 கருத்துகள்:

  1. நவரத்தினம் என்பதை உங்கள் விமர்சனம் நிரூபிக்கும்...

    பதிலளிநீக்கு
  2. நவரத்தினக் கதைகள்....

    நல்லதோர் அறிமுகம் செல்வா. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லதோர் அறிமுகம் தோழர். வாழ்த்துக்கள் இருவருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான அறிமுகம் , தொடரட்டும் நண்பரே...!

    பதிலளிநீக்கு
  5. நவரத்தினக் கதைகள் பற்றி நல்ல அறிமுகம்.

    பதிலளிநீக்கு