வெள்ளி, 13 நவம்பர், 2015

தமிழ் சாகாதாம்......

கொஞ்சம் எதிர்பார்ப்புடன் தான் இருந்திருப்பாய்.உனக்கு மட்டுமென நான் எழுதத்துணிந்தாலும் இது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதே என் ஆவல்.
உன்னைச் சாக்கிட்டே எழுதுகிறேன்.இது முதல் என்பதால் ஒருவரை உனக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

மிகச்சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன்.அரசின் ஆட்சிப்பணியில் இருப்போரும்,பேராசிரியர்களும் அமர்ந்திருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த மேடை அது.

எல்லோரும் அமர்ந்தபின்னே ஒரு எளிய மனிதர்  ,வயது அறுபது தாண்டியிருக்கும் வெள்ளை வேட்டி,சட்டை ,குளிர்க்கண்ணாடியுடன் வந்தமர்ந்தார்.
கோட்டும் சூட்டும்,மற்றும் நாகரீக உடுப்புகள் நிறைந்த மேடையில் அவர் விதிவிலக்காய் இருந்தார்.
சொல்லொண்ணா கூச்சத்தில் அவர் இருப்பதாய் நான் உணர்ந்தேன்.அடிக்கடி குனிந்துகொண்டார்.

கூட்டத்தலைவர் பேசினார்.
அமைப்பாளர் பேசினார்.
ஆட்சிப்பணியாளர் பாடினார்,பேசினார்.
பேராசிரியர்கள் பேசினார்கள்.
ஒருவித சோம்பலில் நானிருந்தேன்.
இறுதியாக இவர் பேச வந்தார்.

பொதுவாக பாண்டிச்சேரி என்றதும் குடியும்,ஆசிரமும் தானே நினைவில் வரும் எனக்கு ஆனந்தரங்கம் பிள்ளையும்,பாரதியும் வருவார்கள்..ஆனால் சக்தி! இனி உனக்கு தமிழும்,தமிழறி்ஞர்களும் நினைவுக்கு வர வேண்டும்.

என்னுடைய வயதுக்கு இப்படி ஒரு தமிழைக் கேட்டதில்லை.
மனிதனின் உணர்வுகள் முப்பத்திரண்டையும் அவர் ஒரு குளிகையாக்கி சொன்ன விதம்..
பல நாட்டு மொழிகளிலே ஆழங்கால்பட்ட ஞானம்.
தொல்காப்பியம் தொடர்ந்து முத்தமிடும் உதடுகள்.
தமிழ் எந்த நாட்டின் மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கும் என்ற வரலாறு..
தமிழின் சில சொற்களே மருவிய கோலம்..
உலகின் எத்தனை மொழிகளில் தமிழ் உயிராயிருக்கிறது...பேசும் தமிழில் எதுவெல்லாம் தமிழில்லை...
தமிழின் வரலாறு..செய்யவேண்டியது என்ன?செய்தது என்ன?

ஒரு தமிழனாய் அன்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் மொழி ஆராய்ச்சி அந்த மனிதரை புடம் போட்டிருக்கிறது.
அந்த அமுதக்குடத்தின் சில துளிகள் ருசித்த நான் இன்னும் ஆனந்த மயக்கத்திலிருக்கிறேன்.

நாசமாய்ப்போன இந்த சமூகம் என்ன செய்துகொண்டிருக்கிறது?
எங்கும் தமிழ்..எதிலும் தமிழ்...தமிழ் வாழ்க! என்னும் வரிகளோடு முடிந்து போவதோ மொழிப்பற்று..?

தனியொரு மனிதனாய் எத்தனை முயன்றிருக்கிறார்?
ஞானச்சுடராய் அவரின் வெளிச்சத்தை அறிந்திருக்க வேண்டாமா இந்த இருட்டு உலகம்?

அத்தனை இருக்கிறது இந்த அறிஞரிடம்.
இந்த அரசும்,சமூகமும் அவரைக்கொண்டாட வேண்டாம்..அவரின் அறிவை,மொழிபற்றிய தெளிவை அள்ளிக்கொள்ளவேணும் வேண்டாமா?

முன்னர் எனக்கு பயமாய் இருந்தது சக்தி..
தமிழ் குறித்து.

ஆனால் நம் தமிழுக்கு எந்த நாளும் அழிவு வாராது..எத்தனை வந்தாலும் தமிழ் வாழும் என்ற மந்திரவாரத்தைகள் அவரிடம் கேட்டபிறகு அந்த பயம் போய்விட்டது.

ஏறக்குறைய ஒருமணி நேரம் அந்த தமிழ் மழையில் நனைந்திருந்தேன்.

தமிழுக்காய் வாழும் அந்த மனிதரை உலகிற்கே அறிமுகப்படுத்தவேண்டும்.
அதுவும் அவருக்காக அல்ல..தமிழுக்காக.

இனி நீ தமிழ் பற்றிய எந்த வினாவிற்கும் அவரைத்தேடலாம்.வாய்ப்பு கிடைத்தால் அவர் பேசக்கேள்.
நீ கேட்ட பல தமிழ் உரைகள் குறைகுடங்களின் தழும்பல் என்பதை உணர்வாய்..

இவ்வளவும் எனக்கருளிய மனிதர் யாரென அறிவாயா சக்தி...
அவர்
ப.அருளி.

அன்புடன்.
செல்வக்குமார்.

17 கருத்துகள்:

 1. பொக்கிசங்களை கண்டெடுத்து இருக்கிறீர்கள் பாதுகாப்பதைவிட பயன்படுத்துவோம் தமிழைப்பண்படுத்துவோம்

  பதிலளிநீக்கு
 2. தமிழ் சாவதில்லை தமிழால் வாழ்பவர்களைவிட, தமிழுக்காக வாழ்பவர்கள் இருக்கும்வரை!

  பதிலளிநீக்கு
 3. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  மங்காத தமிழென்று சங்கநாதம் முழுங்கும்
  தமிழன்பர்கள் இருக்கும்வரை
  தமிழ் வாழும்
  அருளியின உரை கேட்கவேண்டுமே என்ற
  ஆவல் எழுகிறது
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி இருக்கும் எனத்தெரியாது நண்பரே...நானும் அவர் உரை வேறு எங்கும் கிடைக்குமோ எனத்தேடுகிறேன்...

   நீக்கு
 4. பா.அருளுக்கு என்று வலைத்தளம் அல்லது பேஸ்புக் முகவரி இருந்தால் பகிரவும்

  பதிலளிநீக்கு
 5. அருமை..அருமை...அவர் தமிழ் சொற்கள் எவை எனவும், பிற மொழி சொற்கள் எவை என்றும் பிரித்துக் கூறுவார் என்று கேள்விப்பட்டேன். ஆனால், கண்டதில்லை, கேட்டதில்லை. நல்ல தமிழ் பேசுவோர்களையும், செய்ல்படுவோர்களையும் வெளிக் கொண்ர வேண்டும். இனி இது காலத்தின் கட்டாயம்

  பதிலளிநீக்கு
 6. ப.அருளி ஐயா அவர்கள் தமிழார்வமிக்கவர்களிடையில் ஓரளவு அறியப்பட்டவர்தாம். ஆனால், பெரும்பான்மைத் தமிழ்க் குமுகம் இப்படிப்பட்டவர்களை இன்னும் அறியாமல்தான் இருக்கிறது என்கிற உங்கள் ஆற்றாமை முற்றிலும் சரியானதே!

  அண்மைக்காலமாகத் தமிழ் உணர்வும் தமிழ் மொழி மீதான அக்கறையும் தமிழர்களிடத்தில் பரவி வருகிறது. ஈழத்தில் நூற்றைம்பதாயிரம் தமிழ் மக்கள் தம் இன்னுயிரை ஈந்து ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் இது. ஆனால், மக்களிடையில் ஏற்பட்டிருக்கும் இந்த வரலாறு காணாத எழுச்சியைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் குணமுள்ள தலைவர்கள் நம்மிடம் இல்லை. குணமுள்ள தலைவர்கள் ஒரு சிலரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்களாக இல்லை. ஆனால், இதுவரை இல்லாத அளவில் புதிதாகக் கிளர்ந்தெழுந்திருக்கும் இம்மாற்றம், ஏதாவது ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தாமல் அடங்காது என்றே தோன்றுகிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்!

  முழுக்க முழுக்க உணர்வு ததும்பும் உங்களது இப்பதிவைப் படிக்க நேர்ந்தது குறித்து மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா...தங்கள் வருகைக்கு...ஒரு மகிழ்வின் உச்சத்திலும், ஆற்றாமையாலுமே எழுதினேன்...உங்களோடு நானும் காத்திருக்கிறேன்..ஒரு புரட்சிக்கு..

   நீக்கு
 7. அவர் உரையிலிருந்து சில பகுதிகளையாவது வெளியிடுங்களேன்!

  பதிலளிநீக்கு
 8. அருள் ஐயா பற்றிய கருத்துக்கள் அருமை. எனக்கு அவர் பேச்சுக்கள் கேட்க வேண்டுமெ... என் வலை பக்கத்திலும் கடவுளைக் கண்டேன் எழுதியுள்ளேன்..( கில்லர்ஜி அங்கிள் )

  பதிலளிநீக்கு
 9. பா அருளி ஐயா பற்றி அறியத்தந்தைமைக்கு மிக்க நன்றி. தமிழ் புகழ் பாடி அதில் நனைவோரை விட, தமிழுக்காக வாழ்வோ இருக்கும் வரை தமிழ் சாகாது!

  கீதா: பா அருளி ஐயா பற்றி ஓரளவு தெரியும். புதுச்சேரியில் இருந்த 5 வருடங்களில் இறுதி வருடத்தின் அதுவும் அங்கிருந்து மீண்டும் சென்னை வருவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் தெரியும். நேரில் கண்டதில்லை. அவர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவருக்கென்று தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுப் பணியாற்றியவர். இவரைப் பற்றி எல்லோரும் அறிவதில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில் பரவலாக அறியப்படுபவர். நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு சில உள்ளன. தமிழ பண்பாடு குறித்து பார்த்த போது அறிந்தது. இங்கு அவரைப் பற்றிச் சொல்லியமை அருமை செல்வா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு அணிலாய்த்தான் நான் செய்திருக்கிறேன்...உங்களைப்போன்றோர்களால் தான் அதைத்திறம்பட செய்யமுடியும்....நீங்கள் செய்யுங்களென்...

   நீக்கு
 10. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF
  ப. அருளி பற்றி எழுதிய நூல்கள் வாழ்வு கலைப்பணி பற்றி உண்டு....
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு