சனி, 7 நவம்பர், 2015

ஒரு இருமலில் உதித்த ஞானம்...

வெள்ளைதோல்காரி
அவள்
விளையாட்டாய்
ஒருநாள்
தொட்டேன்...
உடலோடு
ஒட்டிக்கொண்டாள்.

இல்லாள்
வந்த
நாளுக்கு
முன்னால்
வந்த
நல்லாள்..

விளையாட்டாய்
சண்டயில்லை
வீணான
தொல்லையில்லை.

விதியாய்
என் வழி
தொடர்வாள்.

வெட்கமில்லை
அவளுக்கு..
எப்போதும்
உதட்டுமுத்தம்
உவந்தளிப்பாள்.

விலைவாசி
ஏறும்போது
பிறந்தவீட்டில்
பதுங்கிக்கொள்வாள்.

சில நாள்தான்...!

சிரித்தபடி
வந்துநிற்பாள்.

மோகதவத்தில்
நான்
மூழ்கிக்கிடந்தாலும்
ஒரு
நாணப்புகைவீசி
ஞாபகங்கள்
கலைத்திடுவாள்.

சீமைக்குப்
போனாலும்
வந்துநின்று
வரவேற்பாள்.

உண்மைக்கு
சொல்லுகிறேன்
அவள்
என்
நெஞ்சத்துள்
குடிபுந்தாள்.

பொல்லாத
ரோசக்காரி,
மனையாளோ
விழியால்
சுடுவாள்.
மாயாவிப்
பெண்ணவளோ
மறந்துவிட்டால்
விரல் சுடுவாள்.

கட்டுப்படும்
வேளைகளில்
விட்டிடத்தான்
நினைத்திடுவேன்

சாகசக்காரியவள்
சத்தியங்கள்
தொலைக்க வைப்பாள்.

கண்டிப்பாய்
ஓர்நாள்
கொல்வாள்..

சந்தோசம்
என நினைத்த
சங்கதிகள்
சட்டென்று
விஷப்பாம்பாய்
கொட்டும்போது..

விஷமே
அவளென்ற
விவரம்
தெரிந்த்தனால்
விட்டுவிட்டேன்
விருப்பப்படி..

விடச்சொல்லி
வீடு கத்தும்..
சாட்சிசொல்லி
சுற்றம் குட்டும்.

இவளாலே
வளம்
இழந்தேன்
நலமிழந்தேன்
நல்லோர்கள்
உறவிழந்தேன்.

இவள்
சத்தமின்றி
ஊடுருவி
உயிர்
தின்றாள்..

பட்டினத்தாராய்
திடீரென
பற்ற்றுக்கத்தெரியாத
பாவியிவன்..
விட்டொழிக்க
முடியாமல்
வெந்து
தணிகிறேன்.

பீனிக்ஸ்
பறவை தான்
சாம்பல்
மிஞ்சுமா?
சத்தமின்றி
அழுகிறேன்.

ஒத்துவரா
மனையாளை
அத்துவிடும்
நீதியை..

கொள்ளிவைக்கும்
புகையிலையை
தள்ளிவைக்க
சொல்லுங்கள்.

கருத்துக்கே
தடைபோடும்
நல்லரசை

புகையிலைப்
பூவுக்கெல்லாம்
கருச்சிதைவு
செய்ய
சொல்லுங்கள்.

குழல்விற்ற
காசெல்லாம்
வரிக்கணக்கில்
சேர்க்காமல்
வாய்க்கரிசி
என
வகைப்படுத்த
செய்யுங்கள்.

கழிவறைத்துணையாய்
தொடங்கி
கல்லறை
தொடர்பவளை

விட்டுவிடுகிறேன்..
இருந்தால்....

11 கருத்துகள்:

  1. விட்டு விட்டு விடுவதை
    விட்டு விட்டால் நலமே...

    பதிலளிநீக்கு
  2. உயிர் கருகும் வாடையோடு
    ஒரு கவிதை..
    எழுதுகோலை இறுகப்பற்றும்
    விரலிடுக்கில்
    இனியும் வசிப்பாளோ அவள்.

    பதிலளிநீக்கு
  3. கவலைக்கு மருந்தென்றால்...அது ஆண்களுக்கு மட்டும் ஏன்...தீமை எனத்தெரிந்த பின்னும் விடாதது தவறல்லவா

    பதிலளிநீக்கு
  4. வெள்ளைப்பீடி கவிதை நன்று நண்பரே

    பதிலளிநீக்கு
  5. விரல்களுக்கிடையில்
    கொள்ளி?
    வைத்திடவும் சற்றே
    தள்ளி.

    பதிலளிநீக்கு
  6. நான் விட்டு விட்டேன்..5 வருடங்களாகிறது. எனவே முடியும் நீங்கள் நினைத்தால்...

    பதிலளிநீக்கு