திங்கள், 11 ஜனவரி, 2016

நீங்கள் தான் சொல்லனும்...

காலுடைந்த
கட்டிலொன்று,
கையொன்றில்லா
நாற்காலி.

சிலந்திகள்
கட்டிய
நூலாடை..

ஒற்றையாணியில்
தொங்கும்
நாதாங்கி.

மண்சுவர்
விரிசலில்
மறையத்தொடங்கும்
செங்காவி.

கோழிகள்
கிளறிய
பஞ்சாரம்.

மாடுகட்டி
நின்ற தொழு..

ஆட்டுக்கு
இலையறுத்த
சிற்றரிவாள்.

குதிர் இருந்த
இடத்தில்
கரையான் வீடு.

வனமாய்த்
தெரியும்
குப்பைமேனிச்செடிகள்

யாரும்
வைக்கவில்லையாம்
வாசலில்
ஒரு
கருவேல மரம்.

குதிரையும்
இல்லை..
அரிவாளும்
தொலைந்த
கோபக்கார
குலசாமி.

என் உச்சி
தடவுகிறார்
உள்ளூரின்
வயதான
பங்காளி.

என் தாத்தாவின்
அப்பாக்கள்
வாழ்ந்த
இடமிதுவே..

தரை விழுந்து
வீடுவந்தேன்...

புலம்பெயர்
அகதியென்றால்.
யாரென்கிறாள்
சின்னவள்.

யாரைச்சொல்ல.?
8 கருத்துகள்:

  1. சிவனேஷப்பிள்ளையின் அப்பாவைப் பற்றிச் சொல்லேன்!

    பதிலளிநீக்கு
  2. நாம் எல்லோருமே ஒருவகையில் புலம்பெயர் அகதிகள்தானோ?!!!

    பதிலளிநீக்கு
  3. படிக்கும்போதே கண்முன்னே காட்சிகள்.

    பதிலளிநீக்கு