வெள்ளி, 29 ஜனவரி, 2016

இதனால்...நான்

பூக்களைப்பறிப்போர்
புல்மீது நடப்போர்.

கிறுக்கலில்லா
வெள்ளைச்சுவர்.
நுனி கடிக்கா
வெல்லக்கட்டி.

மழலைக்கு
ஊசியிடும்
மருத்துவன்..

டயப்பர்
வைத்த
சிறுகுண்டி.
பிள்ளை வைத்துத்
தள்ளும் வண்டி.

புடலைக்கு
கல் கட்டாத
புறத்தோட்டம்.

குளம்
நனைக்கா
குதிக்கால்கள்.

கேள்வி கேட்கும்
பள்ளிக்கூடம்.

புகையில்லா
புகைவண்டி..
புரியாத
கவிதை சொல்லி..

சிரிக்காத
அறிவாளி..
சிந்திக்கா
முழு மூடன்..

தோல்வியில்லா
ஓர்
வெற்றி..

இருக்கையில்லாப்
பேருந்து..
இருகை கொண்டு
வாங்கும்
பிச்சை.

ஆடறுக்கும்
கத்தி..
ஆலை கொண்டு
போகும்
கரும்பு..

மாடேற்றிச்செல்லும்
லாரி..
சூடின்றிப்போன
தேனீர்.

மேட்டுப்பாதை
சைக்கிள் பயணம்.

பன்னீர்ப்பூ
மரமில்லா
தெருவின் சாலை..

நீர் தெளித்துக்
கோலமிடா
சிறுவாசல்..

திண்ணையில்லா
பெரியவீடு..
எண்ணையில்லா
ஒர் விளக்கு.

நாயொன்று
துரத்தாத
நள்ளிரவுத்தேடல்.

விலக்கமுடியா
ஓர் பார்வை..
விடியலில்
விலகும்
போர்வை.

கனவினிலும்
வந்து கொல்லும்
ஒரு வார்த்தை..

அழுது முடியா
சோகம்..
எழுதி முடியா
கவிதை.

பட்டாம் பூச்சி
துரத்தா
விழிகள்..

பொன்வண்டு
சிறைசெய்யும்
தீப்பெட்டி..

நிலவில்லா வானம்..
நிலையில்லா
குடிகாரன்..

கவிதை சொல்லா
காதல்..

காதலில்லா
பருவம்.

காதோடு
பேசாத
ரகசியங்கள்.
கண்பார்த்துச்
சொல்லாத
வார்த்தை.

இளைத்ததாய்
சொல்லாத
அம்மா...

பிழையொன்றும்
பொறுக்காத
நட்பு..

நினைவிலுண்டு,
வரியில்லை..
இன்னுமுண்டு
எதிரிகள்.

உண்மையிது..

எப்போதும்
இவைகளுடன்..

ஒட்டுமில்லை.
உறவுமில்லை..

13 கருத்துகள்:

 1. யதார்த்தமான கவிதை ....சாதாரணமாக நடப்பதை கவிதை உருவில் கொண்டு வருவது இயலாத காரியம் .... உண்மையில் ரொம்ப அருமை செல்வகுமார்

  பானுஷபானா


  பதிலளிநீக்கு
 2. ஆஹா...
  அருமை அண்ணா...
  எல்லாம் யதார்த்தம்...

  பதிலளிநீக்கு
 3. கண்ணைக் கட்டிக் கோபம் கடவுளைக்கட்டிக் கோபம் என்பது போல உள்ளது சகோதரா வரிகள் .
  நானும் உங்களிடம் வரவில்லை தாங்களும் வரக் கூடாதா?
  கோயிலைக் கட்டிக் கோபம் குளத்தைச் சுற்றிக் கோபம்.
  வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள்...அம்மா...
   கோபமெல்லாம் இல்லை..பணிச்சுமை மற்றும் இணையத்தின் இயலாமை தான்...இனி வருகிறேன்..

   நீக்கு
 4. கிறுக்கலில்லா
  வெள்ளைச்சுவர்.
  நுனி கடிக்கா
  வெல்லக்கட்டி.// இது நடக்குமா...டயப்பர்
  வைத்த
  சிறுகுண்டி.// இந்த வரிகளுக்கானவர் வீட்டில் இருந்தால்...அழகுதான் இல்லையா கிறுக்கல்களுடனான வெள்ளைச் சுவர்!!!???

  எல்லா வரிகளும் அருமை செல்வா...ரசித்தோம்....

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு வரியும் ரசிக்கத் தக்கவை.... பாராட்டுகள் செல்வா.

  பதிலளிநீக்கு
 6. அசந்து போயிட்டேன் ஐயா.அழகான காட்சிகள் என் கண்முன் நிழலாடியது ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய்..வைஷாலி..
   உங்கள் கல்லூரி விழாவில் உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி...நீயும் எழுதலாம்..எழுது...சித்திரமும் கைப்பழக்கம்...செந்தமிழும் வலைப்பழக்கம்....

   நீக்கு