வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஆதியில் ஒரு காதலி..

(ஒன்னுமில்லங்க...
நமக்கே கொஞ்சம் சூடாயிருச்சு மூளை.
எப்பப்பார்த்தாலும் முரட்டுத்தனமா சீரியஸாவே எழுதிட்டு இருந்தா?
கொஞ்சம் வேற எழுதேன்..அப்படின்னு
ஒரு குரூப்பாவே பல்ப் எரிய ஆரம்பிச்சுடுச்சு..
சரி வா..எதாச்சும் கதை சொல்லிட்டுப்போகலாம்னு எழுத ஆரம்பிச்சேன்...
ஆனால் ஒன்று..இதைப்படிச்சுட்டு நீங்க சீரியஸான என்ன செய்யுறதுன்னு தான் இப்ப என் சீரியஸான கவலை)

கல்தோன்றி முன்தோன்றாக் காலமெல்லாம் இல்லை. இந்தாத்திரும்பிப்பார்த்திங்கண்ணா கிட்டத்துலதான் இருக்கும்...

பள்ளிக்கூடம் படிச்சுட்டு இருந்தேன்...எந்த வகுப்புன்னெல்லாம் தேடாதீங்க..
நான் படிச்சேன் அவ்ளோ தான்.
பிடிக்காத வார்த்தையெல்லாம் கெட்டவார்த்தை,
பிடிக்காத பழக்கமெல்லாம் கெட்டபழக்கம் அப்படி ரெண்டே கேட்டகிரிதான் அகராதில...
இதுல கெட்ட வார்த்தை,பழக்கம்ங்க்கிறது யாருக்குண்ணும் கேட்காதீங்க...

ஒரு ஜவுளிக்கடை பைதான் புத்தகப்பை..
நாலஞ்சு நோட்டிருக்கும்.
வாரம் ஒருமுறை மாற்றும் டிரவுசர்..
கசங்கிய சட்டை...

ஒரு டீச்சரும் அதற்காக அடிச்சதில்லை.
நான் நல்லா படிக்கிற பையனா.. படிக்காத பையனா..
(இந்த இடத்துல நீங்க என்னை நாயகன் கமல் மாதிரி நினைச்சீங்கன்னா ...
சரி..சரி படிங்க)
நான் இடையிலதான் இருப்பேன்..

ஆனா ரொம்ப டக்குன்னு கத்துக்குவேன்.
டீச்சரும் ,சாரும் பேசிட்டு இருக்கும்போது சுனாமியே வந்தாலும் குறுக்கிடக்கூடாதென்பதை மட்டும் ஒரு அறையிலேயே கத்துக்கிட்டேன்னா பாருங்க.

ரொம்ப முன்னாடி வரிசைலதான் உட்கார்ந்திருந்தேன்,.
எதுக்கெடுத்தாலும் அடிச்சா எப்படி உட்கார முடியும்?
நடுவுல உட்கார ஆரம்பிச்சுட்டேன்.

குடிமாற்றி வந்த ஒரு செவத்தப் பிள்ளைய அவங்க அப்பா, ஹெட்மாஸ்டரோட வந்து எங்க கிளாஸ்ல விட்டுட்டு போனாங்க...அந்த பொண்ணும் டக்குன்னு முதல் வரிசைல உட்காந்துடுச்சு..
மறுபடியும் முதல்வரிசைக்கும் போகமுடியாம,அந்த பிள்ளையும் பார்க்கமுடியாம..ச்சேய் என்ன கெரகம் நம்மல இப்படி சோதிக்குதே...

வாத்தியாரெல்லாம் வந்தா அந்தப் பிள்ளைய பக்கத்துல கூப்பிட்டு கன்னத்துல தட்டி விசாரிப்பாக...
நம்மலத்தான் ஏதும் கேட்டா..வேகமா கன்னத்துல தட்டுவாங்க..
அறிவியல் டீச்சர் வட்டவட்டமா கோடுபோட்டு சூரியக்குடும்பம் நடத்துவாங்க..அந்தப் புள்ளதான் சூரியன்..
நமக்கு புளூட்டோ...
மூஞ்சியக்கூட பார்க்காமத்தான் சுத்திச்சுத்தி வரனும்...

நாடகம் போட்டா..அந்தப்புள்ள கட்டபொம்மனா கத்தும்..நம்ம கம்ப கைலபுடிச்சுட்டு பார்த்துட்டு நிக்கனும்..
பிரேயர்ல நமக்கு நேர்நில் ,அகட்டிநில்லுன்னா..அந்தப்பிள்ளைய  திருக்குறள் சொல்ல சொல்லுவாங்க..

அப்பல்லாம் கனவு வந்தா நமக்கு அதிகபட்ச ஆசையே டீச்சர் நம்ம கன்னத்தை தடவுறதா தான் இருக்கும்..வாத்தியார்ன்னா அதுவுமில்லை..
டவுசர் போடுறது கூச்சமா உணருற கட்டத்துல எல்லாப்பயலுக்கும் சோடி தேடுற அவசியம் வந்துடுச்சு..
எல்லாப்பயலும் அந்தப்புள்ளய சோடிபோட்டா அது என்ன செய்யும் பாவம்..
நம்ம செட்டுன்னா கூட பரவாயில்ல.. அண்ணன் செட்டெல்லாம் சுத்துறாய்ங்க..
நாமெல்லாம் களத்துல இருக்கோம்னு தெரிஞ்சாலே கிட்டிக்கம்பாலயே போட்ருவாய்ங்க..
கூழுக்கும் ஆச, ஆளுக்கும் ஆசை...
வேற என்னத்தச் சொல்ல?
கனவுல வந்த டீச்சரெல்லாம் கால்ல விழுந்து காலிபண்ணிட்டு அந்த பிள்ளைய குடிவச்சுட்டேன்...

அப்பறம் தினம் கொண்டாட்டம் ..
அண்ணன்கள் அந்தப்பிள்ளையப்பற்றி பேசும்போதெல்லாம் அப்பிராணியாய் இருந்துவிட்டு அந்தப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கவனமாய் இருக்கச்சொல்வேன்..
எல்லாம் கனவுலதான்.

இடையில என்னவெல்லாமோ நடந்துருச்சு..
அந்தப்பிள்ளையும் நல்லா வளர்ந்துருச்சு..
கல்யாணமெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னாங்க..

எப்ப மனசு சரியில்லன்னாலும் நெனைச்சுக்குறதுதான்.
கனவுல இப்ப பிள்ளையெல்லாம் பிறந்தாச்சு..

எப்படியாச்சும் சொல்லிடலாமான்னு எழுத ஆரம்பிச்சதுதான் கவிதையெல்லாம்..
சொன்னதே இல்லை.

காலமெல்லாம் அப்படி ஒண்ணும் வேகமாவும் போகல...
முட்டிமோதி தடுமாறும் போதெல்லாம் பழைய பள்ளிநண்பர்கள் எவரேனும் பேசக் கிடைத்துவிடுவார்கள்.
இவ்வளவு நாளாகியும் தைரியமா அந்தப்புள்ளைய பற்றி விசாரித்ததில்லை..
பேச்சுவாக்குல அப்டியே கேட்டு தெரிஞ்சுக்குறது தான்...
கல்யாணமெல்லாம் ஆயிடுச்சாம்...ஏதோ சொந்தக்காரப்பையனுக்கு கட்டிவச்சாங்களாம்..

போன வருசத்துல ஒரு நாள் கோயில்திருவிழாவுக்கு போக வேண்டியிருந்ததால..
பள்ளிக்கூடத்தை தாண்டித்தான் போக வேண்டியிருந்தது.
அந்த ஊருல ஒரு வசதி பள்ளிக்கூடத்துக்கும்,கோயிலுக்கும்,
சுடுகாட்டுக்கும் ஒரே பாதைதான்.
பள்ளிக்கூடத்தைத்தாண்டித்தான் எல்லாத்தையும் தாண்டனும்..
கோயில்ல போய் சாமியக்கும்பிட்டுட்டு
பள்ளிக்கூடத்துல போய் படிச்சுட்டு அப்படியே சுடுகாட்டுக்கு போயிடவேண்டியது தான்..ஆஹா வாழ்க்கையைத்தான் எவ்வளவு எளிதாய் வடிவமைக்கத்தெரிந்தவர்களுக்கு
இன்னும் அந்த ரோட்டைமட்டும் வடிவமைகத்தெரியாமலே இருக்கிறார்கள்.

பள்ளிக்கூட வாசலில எப்பவும் ஒரு சின்ன பாயம்மா கடைதான் இருக்கும்...
விளக்கமாற்துக்குச்சியில  ஒரு மிட்டாய் மேக் இன் பாயம்மா வீடு வச்சிருக்கும்..ஈ சரியா அந்த பிராந்தியத்துக்கே வராது..
டார்க் பிங்க் வண்ணத்துல ஒரு ஜவ்வுமிட்டாய் வாங்கி வாயில போட்டா..இப்பல்லாம் என்னா லிப்ஸ்டிக்...
உதடு..நாக்கு..அதையும் தாண்டி அடிவயிறு வரை சிவக்கும்..
அதெப்படி அடிவயிறு சிவந்தது உனக்குத்தெரியும்னு கேட்டீங்கன்னா அப்புறம் என் கதை அவசரத்துக்கும்,ஆத்திரத்துக்கு மட்டுமல்லாமல்....த்திரத்துக்கும் ஒதுங்கியது வரை சொல்லவேண்டிவரும்...
ஜாக்கிரதை...(நான் என்னைச் சொன்னேன்.)
விடுங்க...
இப்ப புதுசா ஒரு கடை வந்துருக்கு..
கொஞ்சம் பெருசா..நோட்டு ,பேனா,சாக்லேட்டுன்னு இருந்துச்சு...
ஸ்டூல் போட்டு ஒரு பெண் அமர்ந்திருந்தாள்..
கடந்துவிட்ட சில நொடிகளில் டக்கென நினைவில் வந்தது..
அட
அந்தப் புள்ள...


திரும்பும் போதெல்லாம் ஒரே கவலை..

ஒரு நாளில் பார்த்துவிட்டு வந்த எனக்கே இப்படி இருக்கிறதே...

அந்த அண்ணன்கள் மனசு எப்படியிருக்கும்.?

ரொம்ப முக்கியமான விசயம்..
தயவுசெய்து அந்தப்பெண்ணைப் பார்த்தீங்கண்ணா இதைச்சொல்லிடாதீங்க..
எனக்கு இன்னும் தைரியம் வரல்ல..
இது நமக்குள்ளயே இருக்கட்டும்..
















7 கருத்துகள்:

  1. அருமை நண்பரே.. ஒரே ஓர் பாதையை சொல்லி என்னையும் அங்கே கூட்டிக்கொண்டு போனீர்கள். மிகவும் அருமை.

    பாவம் அந்த அண்ணன்களின் நிலைமை.

    நீங்கள் தொடர்ந்து இம்மாதிரியான சிறுகதை எழுத வேண்டும் என்பது அடியேனின் அன்பு கட்டளை.

    பதிலளிநீக்கு
  2. அட அட அட.. செல்வா! இப்படி எழுத மாட்டீங்களான்னுதான் தவம் கிடந்தேன்... வந்துட்டீங்கள் ல? வந்துட்டீங்கய்யா! வெளுத்து வாங்குங்க..விழுந்து விழுந்து சிரிச்சதுல என் மக என்னப்பா னு ஓடி வந்துட்டா (அவகிட்ட சொல்ல முடியுமா, செல்வா நம்ம கதைய அழகா எழுதிப்புட்டாருன்னு..?) தொடரட்டும் இந்த பாணித் தொடர்கள் (பாணி தான்..பழங்கதையே இல்ல)

    பதிலளிநீக்கு
  3. இது வரை உங்கள் தளத்தில் மனதை குத்தும் முள் போன்ற பதிவுகளை படித்து வந்த எனக்கு இந்த தளம் முள்செடி அல்ல இது ரோஜா மலர் செடி என்று புரிந்து கொண்டேன் முள் செடியில் ரோஜா மலர் இருப்பது போல இன்றை பதிவு இருக்கிறது

    பாராட்டுக்கள் உங்களின் தனித்தன்மை இந்த பதிவிலும் ஜொலிக்கிறது

    பதிலளிநீக்கு