சனி, 3 செப்டம்பர், 2016

ஹலோ...மழை வருது...படகு வருமா?

அன்பின் சக்திக்கு,

சிறியமழை ஆரம்பித்துவிட்டது..
சந்தோசப்படும் மனம் பயப்படவும் ஆரம்பிக்கிறது..

கடந்த வருட மழைக்காலங்கள் இன்னும் மறக்க முடியவில்லை.

காரொடும் வீதியெல்லாம் படகோட்டி பரிதவித்த படங்கள் இன்னும் மறையவில்லை.

அலைபேசிக்கோபுரங்கள் இயங்கவில்லை...
அடுத்த தெருவில் மிதந்தார்கள் பிணமாக..
பால்காரன் பணக்காரனானான்.
தண்ணீர் கேன் விற்றவன் வீடுகட்டிவிட்டான்.

எல்லாம் சரி...
இந்த வருடமும் மழைபெய்ய ஆரம்பித்துவிட்டதே..
என்ன செய்துகொண்டு இருக்கிறோம்.?

ஏரிகள் தூர்வாரினோமா?
ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோமா?

கடலூரின் உடைப்பெடுக்கும் ஏரியை என்ன செய்தோம்?

மழை தன் கடமையை சரியாக செய்கிறது..
மனுசப்பயல் தான்..

சின்ன பிள்ளைகள் சேர்த்துவைத்த காசெல்லாம் வாங்கி நிவாரணப்பொருட்களுக்காய் ஓடினோம்..

குரங்குகளாய் வழியில் பறிக்கக்கொடுத்துவிட்டு உயிருக்கு பயந்து திரும்பிய நிகழ்ச்சிகள் மறக்கக்கூடியதல்ல.

எத்தனை துயரங்கள்?
எத்தனை மறக்கடிக்கப்பட்ட மரணங்கள்?

மருத்துவமனைகளில் மிதந்த பிணங்கள்..

எல்லாம் மழை..எல்லாம் மழை என்றோம்..

மழைமுடிந்த நாட்களில் தண்ணீருக்காகவும் வரிசையில் நின்றோம்.

குடும்பங்களை விட்டுவிட்டு பேசவும் முடியாமல்...

சம்பாதிக்கப்போனவன்
இருக்கானாசெத்தானா?தெரியாமல்..

இயற்கை இதற்கு மேலுமா பாடமெடுக்கும் நமக்கு?

சரி சக்தி..
இந்த முறை எல்லாவற்றிற்கும் தயாராய் இருப்போம் நாமாகவே..

வீட்டுச்சாமான்களுடன்
உயிர்காக்கும் மிதவைகள் வாங்கிக்கொள்..

மெழுகுவர்த்தி..
பால் பவுடர்...

சில நாட்கள் பட்டினி இருந்தும் பழகிக்கொள்..

காலக்கடன்கள் கழிக்காமல்...
பற்கள் விளக்கவும் வழிகளில்லாமல் ரொட்டிகள் தின்றும் பழக்கம் கொள்..

கொஞ்சம் பெருமழை பெய்தால் மீண்டும் எல்லாம் நடக்கத்தான் செய்யும்...

எல்லாம் இழப்போம்..
உயிரைமட்டும் மிச்சம் வைப்போம்..

ஹெலிகாப்டர்கள் மீண்டும் நம் மாடிகள் உரசிப்பறந்து உணவுப்பொட்டலங்கள் போடும்..

கால்களில் ஈரம் படாமல் வெள்ளம் பார்க்க வருவார்கள்..

ஓலாக்காரர்கள் படகுவிடுவார்கள்.
அயலூர்க்காரர்கள் அலறி ஓடுவார்கள்..

நல்ல பணக்காரனும் மொட்டைமாடிகளில் கை ஏந்தி நிற்பார்கள்..

கடலூரின் குளங்களெல்லாம் நிரம்பி ஓடும்...

மீண்டும் முகநூலில் ஒன்றுதிரள்வோம்..

மழைக்காக மட்டுமே மசூதிகள் அனைவரையும் அனுமதிக்கும்,
ஆலயங்களில் மதங்களை வெளியேற்றி மனிதர்கள் இருப்பார்கள்..

தொப்பிகள் படகாக்கி கரைசேர்க்கும்..

மழை முடிந்ததும் மாமூலாகும்.

ஏன் சக்தி..?
ஒரு இடர்காலங்களில் தான் இவையெல்லாம் நடக்கவேண்டுமா?

மழைமுடிந்த நாட்களில் எங்கே போனது சமூக அக்கறை...
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்க வேண்டாமா?

குறைந்த பட்சம் அடுத்த மழைக்கான முன்னேற்பாட்டிற்காகவேணும் போராடியிருக்க வேண்டாமா?

பார்க்கலாம் சக்தி...

வரட்டும் மழை...
எனக்குக்கவலையெல்லாம்...
ஸ்டிக்கர் தயாராய் இருக்குமா என்பதுதான்...

அன்புடன்.
செல்வக்குமார்..


5 கருத்துகள்:

 1. அந்த மழையில் பட்ட அவஸ்தைகளை அன்றே மறந்துவிட்டு...

  தேர்தல் பணம்...
  சினிமா நடிகர்கள்...
  கபாலி கவலைகள்...
  என மற்றவற்றின் பின்னால் ஓடி வந்து மீண்டும் மழையின் முன்னே நிற்கிறோம்...
  எதையும் தூர் வாரவில்லை.... நம்மையும் சேர்த்துத்தான்...
  இயற்கை மனசு வைத்தால் இந்த முறை படகு விடாமல் தப்பிக்கலாம் அவ்வளவே... ;)

  பதிலளிநீக்கு
 2. மறதி மனிதனுக்கு மிகவும் பிடித்த விஷயம். வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறது அரசும், மனிதர்களும்!

  நல்ல பகிர்வு செல்வா.

  பதிலளிநீக்கு
 3. ஸ்டிக்கர் எல்லாம்..இந்த வருடத்துக்கும் சேர்த்தே அடிச்சி வச்சிட்டாங்களாம்...மழை வெள்ளம் வரவேண்டியதும் நம்மை போல லூசுங்க...எல்லாம் சேகரிக்க வேண்டியது தான் பாக்கி...

  பதிலளிநீக்கு