புதன், 7 செப்டம்பர், 2016

கசக்கும் பணம்..


இருபது ரூபாய்க்குள் இப்போது என்ன வாங்கிவிட முடியும்?
வடையுடன் ஒரு டீ? 50 எம்.பி க்கான இணைய டேட்டா? அம்மா குடிநீரல்லாத ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்?

என் வீட்டின் அருகிலொரு குழந்தைமை விலகாத சிறுவனொருவன் காலையில் 100 ரூபாய் நோட்டொன்றுடன் ரொட்டிவாங்க கடைக்குக் கிளம்புகிறான்..
அந்த ரூபாயை அவன் கையாண்டிருந்த விதம் என்னை எழுதவைத்துவிட்டது..

பத்தாம் வகுப்புவரை அரைக்கால் சட்டையுடன் திரிந்த எனக்கு கைலி கட்டவேண்டுமென்ற ஆசை வலுத்துவிட்டது..

ஒருவாரம் போராடி 20 ரூபாயுடன் கீழராஜவீதிக்கு வந்துவிட்டேன்..
முதல் முறையாக எனக்கான ஆடையை நானே எடுப்பதில் மனசு பறக்கிறது.

அண்ணா சிலை அருகில் கட்டிலில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ஒரு வயதானவர்..
கைலி பச்சைக்கட்டம் போட்டது 10 ரூபாய்.. ஜட்டி 3 ரூபாய்..அரைக்கை வைத்த பனியன் 6 ரூபாய் மிச்சம் ஒரு ரூபாய் கைலியை மூட்டுவதற்கு...

அந்தக்கைலி என் நெஞ்சில் வைத்துக்கட்டினாலும் தரையைக்கூட்டும்.
இத்தனை நாள் இல்லாம ஜட்டி போட்டதுல ஒரு குறுகுறுப்பு.. புதுக்கைலி மொடமொடன்னு இருக்கு மடிச்சுக்கட்னா..  ஒரு படத்துல வடிவேல் கூடைய மாட்டிட்டு நடக்குற மாதிரியே இருக்கும்..
கட்டிட்டு ஊரையே ஒரு வட்டம் போட்டுட்டு வந்து கழட்டி வச்சுட்டேன்.

அப்பத்தாவுக்கு நான் பெரியாளாயிட்டேனு என் தாடையப்பிடிச்சு கொஞ்சல்..

அப்பறமா திருப்பூரே போய் சாயம் கலக்கிய காலத்தில் பனியன்கள் சகஜமாயிருச்சு.
அந்த முதல் கைலியும் பனியனையும் மறந்தே போய்ட்டேன்.

அப்பா திடீர்னு போன் பண்ணி அப்பத்தா செத்துப்போச்சுன்னு சொல்லும் போதே அழுகையா வருது..கிளம்பி வந்துட்டேன்..
வீதிக்குள்ள நுழையும் போதே அத்தையெல்லாம் என்னைப் பார்த்தவுடன் சத்தமா அழ ஆரம்பிச்சுட்டாங்க.
என்னமோ எனக்கு அழுகையே வரல்ல..
நேரா அப்பாகிட்ட போய் பணத்தை கொடுத்துட்டு பக்கத்துவீட்ல போய் தூங்கிட்டேன்..
தூக்கப்போகும் போது பேரனெல்லாம் சந்தனக்குச்சி பிடிக்க வாங்கடான்னு சொன்னப்ப போனேன்.

வாழ்நாள் முழுதும் பருத்திப்பால் விற்று எங்கள் உயிர் வளர்த்த அப்பத்தா பஞ்சடைச்சு கிடக்கு.
பிறந்தவீட்டுக்கோடி,புகுந்தவீட்டுக்கோடி,சம்பந்தக்காரர் கோடின்னு அப்பத்தா மேல புதுப்புது சேலைகள் மூடிக்கிடந்தது..
குளிப்பாட்டனும்னு ஒவ்வொரு துணியா எடுக்குறாங்க..

எல்லாம் எடுத்தபின் பார்க்கிறேன்..
நான் முதன்முதலில் எடுத்த பனியனை அப்பத்தா போட்டிருக்கிறது..
உடல்நிலை சரியில்லாமல் போனதை உணர்ந்த அப்பத்தா அந்த பனியனை தேடி எடுக்கச்சொல்லி போட்டுக்கொண்டதாம்.
அழுகை முட்ட ஆரம்பிக்கிறது..
தூக்கிவிட்டா படுத்திருந்த கட்டிலில் மடித்துப்போடப்பட்டிருக்கிறது பச்சைக்கட்டம் போட்ட அந்த கைலி...
வெடித்து அழுகிறேன்..கூட்டம் திகைக்கிறது.

இந்த பணம் தான் எத்தனை பாடுபடுத்தியிருக்கிறது.
கூடப்படிக்கும் ஒரு முஸ்லீம் நண்பனிடமே ரம்ஜான் நாளில் பள்ளி வாசலில் கையேந்தி நாலணா வாங்கவைத்திருக்கிறது..
எட்டு ரூபாய் சம்பளத்திற்காக பேருந்து நிலைய கழிப்பறை வாசலில் காசுவாங்கிப்போட வைத்திருக்கிறது..
அந்நிய தேசங்களில் மூட்டை தூக்க வைத்திருக்கிறது..
உறவுகளை விலக வைத்திருக்கிறது..
இலங்கை வேந்தனாய் ஓடி ஒளிய வைத்திருக்கிறது.

பணத்தை கடவுளின் உருவமென நண்பர்கள் தொட்டு வணங்கும் போதும்,பணத்துடன் பேசவேண்டும்,தொட்டுத்தடவி விட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்னும்போது எனக்கு பணத்தின் மீது கோபம்தான் வருகிறது.
மிக அலட்சியமாக அதை நான் வைத்திருப்பதாய் நண்பர்கள் குட்டும்போதெல்லாம் எனக்கு வலிக்கத்தான் செய்கிறது.

பின் எப்படித்தான் என் கோபத்தைச்சொல்லுவது?7 கருத்துகள்:

 1. தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

  பதிலளிநீக்கு
 2. பணம்.... பணம்.. பணம்....

  என்னத்த சொல்வேன்?

  பதிலளிநீக்கு
 3. மலரும் நினைவுகள் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தாம் படித்ததும் மனம் கனத்தது... சொல்லி சென்றவிதம் அருமை

  பதிலளிநீக்கு
 4. என்ன சொல்ல அப்பத்தாவை மறக்க முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 5. மனம் கனக்க வைத்த பகிர்வு.

  பணம் தான் இங்கே பிரதானம்..... பல விஷயங்களை நிர்ணயிப்பதே பணம் தானே...

  பதிலளிநீக்கு
 6. Arpudham Ayya. Arumaiyana varthaigalil eduthu solliya nearthi miga miga arumai. Appathaa ippathan en manadhil vandhu ottikondal. Adhanalo ennavo manasu innum kanathu kannil eeram. Indha "kasakkum panam" Appathavuku samarpanam. Arumai Ayya.

  பதிலளிநீக்கு