வியாழன், 15 செப்டம்பர், 2016

தேவை....தண்ணீரல்ல...

காவேரி பிரச்சனையில்
கவனம் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளைகளில் வேறு பல நடந்துகொண்டிருக்கலாம்..

கார்ப்பரேட் மூளைகளின் வக்கிரங்கள் இன்னும் என்னவெல்லாமோ செய்யும்...

தொடங்கியதிலிருந்து பெட்ரோலிய விலைகளிலேயே ஒரு நூற்றாண்டுக்கான வருமானங்கள் கிடைத்திருக்கும்..
தக்கவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

குஜராத் கோரமுகங்கள் வாசிக்கும் போது அத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.

கணினிகளின் துல்லியத்தில் மனித மனங்களை கணித்து உணர்வுகளைத்திருப்பி சாதித்தவர்கள்..
இந்துத்வா, மதவாதம்,மாட்டுக்கறி, படுகொலைகள், காவேரி உட்பட எல்லாம் கவனம் திருப்பும் சாகசங்கள்.

ஆட்சி,பதவி வெறிகளின் உச்சத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அடுத்து வரும் தேர்தலை கவனித்துப்பாருங்கள்..இது வரை இந்தியா சந்தித்திராத பணம்,அதிகாரம் எல்லாம் தூள்பறக்கும்.

காவேரி என்பதும் இன்றைய பிரச்சனை அல்ல..
காலம் காலமாய் இருப்பது தான்.இவ்வளவு மோசமாக தூண்டக்காரணம் வேறு ஏதேனும் இருக்கும்..

கர்நாடகாவில் ஒன்றும் காட்டுமிராண்டிகள் வாழவில்லை.
மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும்.

வாகனங்களை எரித்ததிலும் பின்புலம் இருக்கும்.
ஒரு மத்திய சட்டத்துறை அமைச்சராய் இருந்தவர்,
இன்னும் அமைச்சராய் இருப்பவர் மற்றொரு மாநிலத்தின் மீது மிகச்சாதாரணமாக குற்றம் சாட்டுவது இறையாண்மைக்கு ஏற்றதல்ல..

உள்ளபடி ஆயிரம் குறைகள் இங்கு உண்டென்றாலும் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..தமிழ்
மக்களின் மனங்கள் பண்பட்டிருப்பது தெரிகிறது..

எல்லா இடங்களிலும் உணர்வுகளில் விளையாடுபவர்களின் சோதனை முயற்சி கூட தமிழகத்தில் தோற்றுப்போக 90 வயதுக்குப்பிறகும் மூத்திரப்பையை சுமந்து சுயமரியாதை வளர்த்த கிழவனின் தொண்டு அது.

என் தமிழகமே அந்தப்பெரியாரை இறைமறுப்புக்காய் திட்டுவதெனில் திட்டிவிட்டுப்போங்கள்..
ஆனால் சுயமரியாதையையும்,
பெண்ணினத்திற்காகப் போராடியதையும் இழிவுசெய்யாதீர்கள்.

காந்தி பிறந்த மண்ணில் தான் எல்லாம் பிறக்கிறது..
பெரியார் நடந்த மண்ணில் இன்னும் சுயமரியாதை சாகவில்லை..
அது சரியான வித்து.

அன்புடை நண்பர்களே..
இதுவும் கடந்து போகும்.
ஆனால் வரலாற்றில் நாம் பாடம் கற்றே ஆகவேண்டும்.
அவர்கள் காந்தியை மறந்து போகட்டும்..
நாம் அகிம்சையை மறக்கவேண்டாம்.
நடைபெறும் கலவரங்களின் புகையில் நீங்கள் பகையை பார்க்கின்றீர்கள்..
நான் உள்ளூற்றிய எண்ணையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

அரசியல் கட்சிகள் யாவும் சமூக சேவைக்காய் அல்ல.
அவர்கள் சேவைக்காகவே.

நாம் என்று விளம்பரங்களில் சிக்காமல் விழிக்கின்றோமோ அன்றே விடியும் நம் நாள்.

ஆட்டுமந்தையென புலம்பலில் இன்பம் காணாமல் ஊடுருவிக்கிடக்கும் வன்மத்தைப் பாருங்கள்.

ஊடகங்களும்,
சமூகவலைத்தளங்களும் முற்றிலும் மக்களால் நடத்தப்படுபவை அல்ல..
எங்கெங்கும் அவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டிருக்கும்.
வேறு எந்த சிந்தனையும் உங்கள் கவனத்தை திசைதிருப்பி விடாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

விடிவென்பது சேவல் கூவியல்ல..
கண்கள் விழிப்பதில் தான்.

காசுக்கும்,மதுவுக்கும்,உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டு வாக்களித்தோமானால் இதுவும் நடக்கும்..இன்னமும் நடக்கும்..

வாக்கென்னும் அற்புதம் நம் கைகளில் தான் இருக்கிறது.

ஒற்றை நிமிட யோசனை புரட்டிப்போடக்கூடும் யாவையும்..
அந்த ஒற்றை நிமிடத்தையும் களவாடப்பார்ப்பார்கள்.

கம்யூனிச தோழர்களின் களப்பணி நேரமிது..
கண்டனங்கள் கூட கனத்துச் சொல்லாமல் இருப்பது கவலைக்குரியது.

சுயசிந்தனையும் சுயகட்டுப்பாடும் மட்டுமே..
தற்போது தலையாய தேவை..

ஒரு மழை கனத்துப் பெய்தால் காவேரியை அவர்களே திறப்பார்கள்..

பிழைகள் நம் பக்கம் தான்..
இனியேனும் அதை செய்யாதிருப்போம்.


9 கருத்துகள்:

 1. ஆட்டுமந்தையென புலம்பலில் இன்பம் காணாமல் ஊடுருவிக்கிடக்கும் வன்மத்தைப் பாருங்கள்.// காவிரி என்பது இப்போது வன்மம் தலைவிரி யாகிவிட்டதே என்ற ஆதங்கம் வருகிறது. அரசியல் ஓங்கி நிற்கிறது. மக்கள் அரசியலை வெல்லும் காலம் வந்தால் தான் நல்லது நடக்கும்...நல்ல கருத்துகள் நண்பர் செல்வா

  பதிலளிநீக்கு
 2. ///சுயசிந்தனையும் சுயகட்டுப்பாடும் மட்டுமே..
  தற்போது தலையாய தேவை..///

  ஆனால் இதை இரண்டும்தான் மக்களிடையே இல்லாமல் போய்விட்டதோ என நினைக்க தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 3. நண்பரே...

  நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவன்... தங்களின் இந்த பதிவை கண்டு கண் கலங்கினேன் ! எதையெதையோ அச்சடித்து அசந்து நிற்பவனின் முதுகில் கூட ஒட்டும் சமூகத்தில் இந்த பதிவினை வீட்டுக்கு வீடு விநியோகிக்க வேண்டும்.

  சமூக அக்கறை காப்பதாய் சுயமுரசு கொட்டும் முன்னணி பத்திரிக்கைகளின் தலையங்கமாய் வந்திருக்கவேண்டிய வரிகள் !

  நீங்கள் குறிப்பிட்ட " திசைதிருப்பல்கள் " உலக நாடுகள் அனைத்தின் அரசியல் அரங்குகளிலும் நித்தமும் அரங்கேறுகின்றன... அரசியல் நிச்சயமாய் லாபம் கிட்டும் தொழிலாகிவிட்டது !

  ...." எல்லா இடங்களிலும் உணர்வுகளில் விளையாடுபவர்களின் சோதனை முயற்சி கூட தமிழகத்தில் தோற்றுப்போக 90 வயதுக்குப்பிறகும் மூத்திரப்பையை சுமந்து சுயமரியாதை வளர்த்த கிழவனின் தொண்டு அது.

  என் தமிழகமே அந்தப்பெரியாரை இறைமறுப்புக்காய் திட்டுவதெனில் திட்டிவிட்டுப்போங்கள்..
  ஆனால் சுயமரியாதையையும்,
  பெண்ணினத்திற்காகப் போராடியதையும் இழிவுசெய்யாதீர்கள். " ....

  அவன்வழி வந்தவர்களாய் கூறிக்கொண்டு அவனது கொள்கைகளை ஒரு தலைமுறை தாண்டிய காலத்துக்கு வன்புணர்ச்சி செய்தவர்களை தாண்டியும் இன்னும் தமிழகம் முற்றிலும் சரியாமல் இருப்பதை உணர்ந்தால் அக்கிழவனின் தொண்டின் வீரியம் புரியும்.

  உங்களை வணங்குகிறேன்

  நன்றியுடன்
  சாமானியன்

  எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html


  பதிலளிநீக்கு
 4. ”உள்ளூற்றிய எண்ணெய்”! ஓராயிரம் அர்த்தமுள்ள சொற்சேர்க்கை! கவிதையும் கண்ணீரும் வழியும் உரைநடை!
  நன்றி செல்வா!

  பதிலளிநீக்கு
 5. //ஒற்றை நிமிட யோசனை புரட்டிப்போடக்கூடும் யாவையும்..
  அந்த ஒற்றை நிமிடத்தையும் களவாடப்பார்ப்பார்கள்.//

  அருமையான கட்டுரை அண்ணா...

  அந்த ஒற்றை நிமிடத்தை சில நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும்... பிரியாணிக்கும் பீருக்கும் அடகு வைத்து விட்டு உக்கார்ந்திருக்கிறோம்... வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஒரு நிமிட சிந்தை நம் மனதில் தோன்றினாலே போதும்... எல்லாம் மாறும்...

  மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்...
  நாம் மாறினால்தான் மாற்றம் உண்டாகும்....

  செய்வோமா... அல்லது

  உங்களுக்காக நானில் வீழ்ந்து கிடப்போமா என்பதை பார்க்கும் நாள் விரைவில்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் !

  வார்த்தைகளின் உணர்ச்சிப் பெருக்கில் வாய்மூடி நிற்கிறேன்
  பதில்கள் தேடி ! இது சமூகத்திற்கான விழிப்பு நிலை விழிப்பதும் அழிப்பதும் இளையோர் கையில்

  நன்றி தொடர வாழ்த்துகள்
  தம+1

  பதிலளிநீக்கு
 7. Ahaa! Arumai ayya. Athanai arthamulla varthai ovvondrum. Azhagaai eduthu nerthiyaay thodutha ungal varigal samoogathin valiku nivaaranam. Anaal, idhu engaluku tharkaliga Vali dhane?? En Thamizh samoogam ellavatraiyum marandhu vidum.

  Vibachaara oodagangal naalaiye veru pakkam engalai kondu sellum. Nangalum suyamariyadhai konjamum indri, suyamariyadhai pesiya Periyavaraiyum izhivupaduthi oodaga pakkam povom. Ellam arasiyal endru odhungi Vida mudiyadhu idhil. En makkalin ariyamai endra Periya vegumadhiyum undu. Communist thozhargal poraadi kondu irukatum, nangal nadiganin pudhu padathirku ticket vaangavum, cut out Ku paal ootri kondum dhan irupom. Vilaka mudiyaa vedhanaiyudan vasithom Ayya.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான சிந்தனையூட்டும் பதிவு.

  `சுயசிந்தனையும் சுயகட்டுப்பாடும் மட்டுமே..
  தற்போது தலையாய தேவை`. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தான் இங்கு கேள்விக்குறி!

  பதிலளிநீக்கு