வியாழன், 1 செப்டம்பர், 2016

ஏரோட்டும் உழவரெலாம்...தார் ரோட்டில்...

அன்பின் சக்திக்கு,

செய்திகளின் அழுத்தங்கள் மீண்டும் மீண்டும் உனக்கு எழுதத்தூண்டுகிறது.

உன்னையன்றி யாரிடம் சொல்ல?

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டி
போரடித்த
அழகான தென்மதுரை..

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை..

சுழலும் ஏர் பின்னது உலகம்..

தமிழகம் தான் எத்தனை செல்வங்களை உடையது?

காந்தியிலிருந்து கலாம் வரைக்கும் வியந்து போற்றிய தமிழகம்..

நேற்று முன்தினம் விவசாயிகளின் போராட்டம்..

இந்த தேசத்தில் தான் போராட்டங்களுக்கு அளவும் அழகும் கிடையாதே?

சுட்டெறிக்கும் வெயிலில் முதிர்ந்த விவசாயிகள் போராட்ட அனுமதிக்காக சாலையில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துவணங்கும் படம் ஒன்று பார்க்க நேர்ந்தது...

பதறிப்போனது இதயம்..
பிறர்  உண்டு கொழுக்க
உழுது களைத்தவன் அழவும் போராடும் அவலம்.

அரைநிர்வாணமாய் தொடரும் பட்டினிப்போராட்டம்..

சாலைகளுக்காய் நிலங்கள் பிடுங்கினோம்..
மீத்தேன் வருமென்று
கண்ணீர் தோண்டினோம்..
ஆற்றின் அடிமடிவரை லாரிகள் வைத்து கற்பழித்தோம்.

தண்ணீர் வேண்டி அவர்களை வீதிக்கு வரவைத்துவிட்டோம்..

யார் வேண்டுமானாலும் போராடலாம் சக்தி..

இந்தியாவில் விவசாயிகளை மட்டும் போராடவிடக்கூடாது..

அவன் அழுதால் நாம் நாசமாய்ப் போவோம்..

ஆயிரம் செயற்கைக்கோள், அணுகுண்டு சோதனைகள்..
எல்லாம் சரிதான்..

நதிகளின் நீரை சரிசெய்ய முடியவில்லை இவர்களால்..

வரலாறு முழுவதும் கடிதங்கள் எழுதுவதும்,
பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் செலவழித்தால் பின்னொருநாளில் சிரிக்கும் சரித்திரம் நம்மைப்பார்த்து.

கடந்த வருடங்களில் விவசாயிகளின் தற்கொலைப்புள்ளிவிவரங்கள் நாட்டின் அவமானம்.

நாங்களும் ஆதரித்தோம் என்பதாய் கொடிகளைத்தூக்கிவந்து அவரவர் தொலைகாட்சிகளில் பொங்கிவிட்டுப்போய், மாலையில் விடுதலையாகிப்போவதால் முடிந்துவிடாது வேதனை..

வட்டிக்கும்,தாலிவிற்றும் நட்ட பயிர்கள் குடங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் விவசாயி அழுதானெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு சோறும் பாவத்தின் அப்பம்.

ஆயிரக்கணக்காய் நெல்வகை தொலைத்தோம்.
பாரம்பரியத்தின் பலவற்றை இழந்தோம்,
சிறுதானியம்,
விவசாயச் சொல்மணிகள், சரியாகச்சொன்னால் ..கிராமங்களையே இழந்தோம்..

இன்னுமிருப்பது மிச்சசொச்சம் விவசாயிகளையும் இழந்தால்..

கே.எப்.சி யில் சிக்கன் கடித்து,கொக்ககோலா குடித்துச்சாவோம்.

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு,
அவள் படுத்தது யாரோடு?
அவனா இவனா?
படத்துக்கு பாலூற்ற,
நள்ளிரவிலும் கூடிய திரையரங்கக்கூட்டம்,
பேச்சு அரசியல், வெளிநடப்பு, 110ல் 1008
எல்லாம் செய்யலாம் நாம்..

அதற்கு அவர்கள் உ(ப)யிரோடு இருக்கவேண்டும்..

ஊடக வெளிச்சம் பச்சமுத்து தாண்டி பச்சைப்பயிர்களின் மீதும் படவேண்டும்.

முகநூலும்,வலைத்தளமும் இவர்களையும் பேசவேண்டும்.

அன்புடன்.
செல்வக்குமார்.7 கருத்துகள்:

 1. நன்றே செய்க அதை இன்றேசெய்க. ஊடகங்கள் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்தன. சமூக வலைத்தலங்கள் தான் ஊடகங்களின் பணியை செவ்வனே செய்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலான பின்னரே ஊடகங்கள் முழித்து பின் விழித்து செய்தி வெளியிடுகின்றன. இதை மக்கள் போராட்டமாக மாற்றவேண்டும் எந்த அரசியல் கட்சிகளின் துணையில்லாமல். அப்போது தான் விடிவு. நம் மக்கள் ஒன்று சேர்வது எப்போது?
  விஜயன்.

  பதிலளிநீக்கு
 2. இவற்றையெல்லாம் கேட்கும்போது வேதைனையான இருக்கிறது. அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். என்று பிறக்கும் விடிவு காலம்!

  பதிலளிநீக்கு
 3. உழவுச் சிறப்பு.....
  இழவாகிப் போச்சு...
  அழத்தானேவேண்டும் பட்டினியால் ஒரு நேரம்.
  நன்றுசகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 4. உழவுச் சிறப்பு.....
  இழவாகிப் போச்சு...
  அழத்தானேவேண்டும் பட்டினியால் ஒரு நேரம்.
  நன்றுசகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 5. உண்மை அண்ணா...
  விவசாயிகளைப் பற்றி கவலை இல்லாத தேசம்...
  சினிமா டிக்கெட்டுக்காக அடித்துக் கொள்ளும் நாம் பயிர்கள் வாடுவதைப் பற்றி கவலை கொள்வதில்லை...

  பதிலளிநீக்கு