ஞாயிறு, 15 நவம்பர், 2015

இலையில் சோறு போட்டு...

அன்பின் சக்திக்கு,

சின்ன வயதில் கேட்டதும்,பார்த்ததுமான சம்பவங்களுடன் தொடங்குகிறேன்.
செட்டிநாட்டுப்பக்க திருமணங்களில் தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக திருமண விருந்துகளில் இலையின் ஓரத்தில் தங்கபஸ்பம் வைத்து ஒரு வாழைப்பழமும் வைப்பார்களாம்..வரும் விருந்தினர்கள் பழத்தினை உரித்து கொஞ்சமாய் பஸ்பத்தை சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிடுவார்களாம்...அந்த எச்சில் இலைகளை அள்ள போட்டி நடக்குமாம்.இப்போது அப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை.
ஆனால் என் அம்மாச்சி எங்களுக்கு வாழைப்பழம் வாங்கித்தரும் நாங்கள் பழத்தை தின்றபிறகு அதன் தோல்களை முன்னம்பல்லில் வைத்து "சர் "என்று ஒரு இழுப்பில் உள்தோலை உரித்து சாப்பிடும்..எங்களுக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கும்.
எவ்வளவு முரண் பார்த்தாயா?

நாம் சேர்ந்து உண்ணும் சிலவேளைகளில் கவனிக்கிறேன்,எனக்கான இலையில் எதையும் மிச்சம் வைக்காத போது நீங்கள் என்னை இளக்காரமாகப் பார்ப்பதை.

உங்கள் இலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் நீ விரும்பாத காய்,கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டென.

தெரிந்துகொள் சக்தி!
இயற்கை எந்த பொருளையும் காரணமில்லாமல் படைத்துவிடுவதில்லை.

மனிதன் தான் ஆறாம் அறிவால்(?)அதனை மறந்து தவிக்கிறான்.
உண்ணும் உணவே மருந்தெனும் மாயம் அறியாமல்,தவிர்க்ககூடாததை தவிர்த்து,தவிர்க்கக்கூடியதை புசித்து நோய் கொள்கிறான்.

நான் சொல்லவந்ததை விட்டு திசை மாறுகிறேன்.

பிடித்தது பிடிக்காதது போகட்டும் அது அவரவர் பாடு.
ஆனால் வைத்ததை தின்பதிலும்,மிச்சம் வைத்து கொட்டுவதிலும் எத்தனை பரிதாபங்கள் இறைந்து கிடக்கிறது தெரியுமா?

விளையும் பொருட்களில் வீணாகும் அளவு தெரியுமா பயனுக்கு வாராமல்.

அமெரிக்காவில் 25℅பொருட்கள் வருடந்தோறும் குப்பைக்குப் போகிறதாம்.
ஐரோப்பாவிலே ஒரு மனிதன் வருடத்திற்கு 300கிலோ உணவை வீணடிக்கிறானாம்.
உலகம் முழுவதும் வருடத்தில் 130கோடி டன்கள் உணவுப்பொருட்கள் எறியப்படுகின்றனவாம்.

அடடா உனக்கு நான் உலக அறிவை ஊட்டத்தொடங்கியதாய் ஓடத்தொடங்காதே...
வா ..நமது நாட்டுக்குள் வந்து விடுவோம்.

இந்தியாவில் ஒரு மனிதன் வருடத்தில் 170கிலோ உணவை வயிற்றில் கொட்டுவதில்லையாம்.
இங்கே வீணாகும் உணவின் சதவீதம் 40....
அதன் மதிப்பாய் 750கோடி டாலரில் சொல்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வருவோமா?
பெங்களூருவில் வருடந்தோரும் 943 டன்கள் வீணாகிறதாம் உண்ணவேண்டிய பொருட்கள்.அது மட்டும் 340கோடி இருக்குமாம்.

என்ன சக்தி மலைப்பாய் இருக்கிறதா?

உணவை வீணாக்கும் போதெல்லாம் இதையும் நினைவில் வை.
பட்டினியால் வாடும் மூன்று உலகக்குழந்தைகளில் ஒன்று இந்தியக்குழந்தை.

உன்னால் முடியவில்லை என்றால் வாங்காதே....
குப்பைக்கல்ல உணவுப்பொருள்.

இனி நான் இலையை காலிசெய்யும் போது சிரிக்காதே...
உன்னைச்சுற்றிலும் இதைச் சொல்.

செய்வாயா சக்தி?

அன்புடன்,
செல்வக்குமார்.

21 கருத்துகள்:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் இவை...

    தொடர வாழ்த்துகள்...

    காய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு - இவைகளை முதலில் சாப்பிட நாம் தான் முதலில் கற்றுக் கொடுக்கவும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. பர்கர், பீஸா என்று இன்று உலகம் மாறி விட்டது
    காய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு
    நாமேனும் சொல்லிக் கொடுப்போம்
    நன்றி நண்பரே
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  3. வெங்காயமும் பூண்டும் அசைவ உணவோடு சேர்ப்பது என்றும் அசைவர்கள் மட்டுமே அதனைச் சாப்பிட வேண்டும். என்றும் என் அம்மாவின் வழியாக எனக்குச் சொல்லப்பட்டது. அதனால் அவர்கள் வெங்காயம் பூண்டு உண்பதில்லை. கறிவேப்பிலை, தவிர்ப்பது முறையில்லை....(காய்கறிகளே உணவு எனும் போது பல காய்கறிகளை தவிர்ப்பதும் தவறு...) (ஆனால் வீணாக்குவதில்லை, வாங்குவதேயில்லை...)

    பதிலளிநீக்கு
  4. கட்டுரையில் சேர்த்த படம் கண் கலங்க வைக்கிறது...மனம் பதறுகிறது..உணவின் மேன்மை சொன்ன விதமும், வீணாக்கக் கூடாது என்று சொன்ன விதமும் அருமை...நன்று

    பதிலளிநீக்கு
  5. நல்ல கடிதங்கள்...தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  6. கலங்க வைக்கும் உண்மைகள். அதற்கேற்ற படம்.

    பதிலளிநீக்கு
  7. ஆனால் வைத்ததை தின்பதிலும்,மிச்சம் வைத்து கொட்டுவதிலும் எத்தனை பரிதாபங்கள் இறைந்து கிடக்கிறது தெரியுமா?//
    உண்மை செல்வா.. மகளுக்கு எழுதும் கடிதம் போல உலகிற்கு நல்ல செய்து சொல்லும் செல்வா சகோவிற்குப் பாராட்டுகள். அருமை!!!

    இப்போதுள்ள கல்யாணங்களில் எத்தனை இலைகள் உணவோடு வீணாக்கப்படுகின்றன. மனம் கொதிக்கும். அதுவும் நாம் உட்காரும் முன்னரேயே அதில் பரிமாறப்பட்டு.....பலரும் தனக்கு வேண்டாததையும் போடச் சொல்லி இலையில் வீணாக்குவது, உணவைப் பிடிக்கவில்லை என்று ஒதுக்குவது இப்படிப் பல...கடிதம் அருமை...

    கீதா: நாட்டின் தலைநகர் முதல் எல்லா பெருநகரங்களும் சென்னை உட்பட "பணக்கார" நகரங்கள் தெரியுமா உங்களுக்கு?! நாகரீக மனிதர்கள்!!!! ஹைஃபை....ஃபேஷன் தான் முக்கியம்...இதோ இந்தப் படத்தில் உள்ளது போல நிகழ்வுகளை நாங்கள் காண்கின்றோமே....மனம் அப்படியே வெம்பி நிற்கும்.

    நேரு இந்திராவிற்கு எழுதியது போல என்று கொள்ளலாமோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா...அந்த அளவுக்கெல்லாம் இல்லை...எழுததூண்டும் சில விசயங்களை எழுதுகிறேன் அவ்வளவே...உங்கள் எழுத்தி பக்கம் ஹெலிகாப்டர் வைத்தாலும் வரமுடியாது என்னால்....

      நீக்கு
  8. நல்ல விடயங்கள் ஆனால் வேதனையுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் தேவகோட்டையாரே...பிள்ளைகள் ஒடுக்கும் காய்கள் கண்ணீரை வர வைக்கிறது

      நீக்கு
  9. வீணாக்குதல், வீணாகுதல் பற்றிய உறுத்தல் மனிதர்களுக்கில்லை குப்பைகளில் வீசியெறியப்பட்ட பருக்கைகளைத்தவிர ...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்

    யாவரும் அறிய வேண்டிய விடயத்தை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்... வேதனையான விடயந்தான்... நேரம் இருக்கும் போது தொடருங்கள் நண்பரே என் பக்கமும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...இங்கு மழை பெய்யும் ரகசியம் இப்போது தெரிகிறது...மலேசியக்காற்று அடித்திருக்கிறது... வருக கவிஞரே..வருக

      நீக்கு
  11. எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அருமையான தொகுப்பாக கொடுத்திருக்கீங்க. நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூ பக்கமும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் அம்மா....அருமையான குறிப்புகள் கொட்டிக்கிடக்கிறது....

      நீக்கு
  12. உண்மை வீணாக்கும் உணவுப்பொருள் கிடைக்காமல் தவிப்பவர் எண்ணிலடங்கா..

    பதிலளிநீக்கு
  13. நல்ல படிப்பினைகள்
    பயனடையட்டும்.

    பதிலளிநீக்கு