செவ்வாய், 13 அக்டோபர், 2015

நானும் மீனும்

மீன்களுடனான என் உறவு என்பது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலங்களிலேயே மலர்ந்துவிட்டது.
அசைவம் சாப்பிடுவதென்பது தீபாவளியோடு இணைந்துவரும் ஒரு நிகழ்ச்சி என்னும் அளவுக்கு 


வளமையான குடும்பம்.
பருத்திப்பால் சுமந்து எங்களை வளர்த்த அப்பத்தா எப்போதேனும் குளத்து மீன்களை பண்டமாற்றுமுறையில் வாங்கிவரும்.
உள்ளங்கைகளைவிட சிறிதாய் இருக்கும் ஜிலேபிகெண்டைகள் உரசி செதில் எடுத்த பின் அயிரை மீனுக்கு கொஞ்சம் பெரிதாய் இருக்கும்.
உப்பு,புளி,மிளகாய் காரமென அப்பத்தாவே காதுகள் ஆட அரைத்து குழம்புவைக்கும் வரை புடவையைபிடித்துக்கொண்டே ஒரு கும்பல் மோப்பம்பிடித்து அலைவோம்.
ரேசன் அரிசியின் இளமஞ்சள் சோற்றோடு தண்ணீராய் ஓடும் செங்குழம்பு...கூட்டணி அமையாது ஓடும்.
ஓடும்போது தடுத்தாலும் சுடும்.
குழம்பு அடுப்பில் இருக்கும்போதே பாதிமீன்கள் சொந்த உடலோடு சொர்க்கத்தில் கலந்திருக்கும்.
ஆளுக்குக் கிடைக்கும் இரண்டொரு மீன்கள் பிணப்பரிசோதனைக்கு வந்த சவமாய் தட்டுகளில் கிடக்கும்.முட்களை எடுக்கத்தெரியாமல் அப்பத்தாவின் வருகைக்காய் வரிசையாய் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அவசரத்தில் சிலவேளைகளில் முள் தொண்டையில் சிக்க...அய்யோ மருத்துவமனைக்கு பதறி தூக்கிப்போவார்களென நினைக்காதீர்கள்.
அப்பத்தா அப்படியே சோற்றை உருட்டி வாயில் திணித்து முழுங்கச்செய்து நெஞ்சை நீவிவிடும்..அது தான் பண்டுவம்.
சாப்பிட்டானதும் கைகளை முகர்ந்துகொண்டு திரிவோம்.
அப்பாவிற்கு இந்த மீன்கள் பிடிக்காது.எந்த மீனை எப்படி சாப்பிடவேண்டும் எனச்சொல்லத்தெரியும்.
தூண்டில் மீன்கள் சுத்தமாகப்பிடிக்காது.
"அயிரைமீனை வாங்கிட்டு வந்து நல்லா தேங்காய்ப்பாலில் ஊறவைத்து"
ஏம்ப்பா...?
அப்பதாண்டா அயிரைமீனு
மண்ணெல்லாம் கக்கிட்டு சுத்தமாயிருக்கும்."
மண்சட்டி எடுத்து அளவா காரம் ,புளி சேர்த்து குழம்பு வைக்கணும்டா...
ஒரேவேளையில காலி பண்ணிற கூடாது..பாதிய எடுத்து வச்சுறனும்,  அடுத்தநாள் காலையில இட்லி சுட்டு பழைய குழம்ப சூடுபண்ணி சாப்பிட்டாத்தாண்டா ருசி"என்பார்.
என் வாழ்வில் அப்பாவோ நாங்களோ அப்படி ஒருமுறை கூட சாப்பிட்டதில்லை.
ஏழாம்வகுப்பு படிக்கும்போது பக்கத்து ஊர்க்குளத்தில் தூண்டில் போட நண்பர்கள்கூடச்சென்றேன்.
எண்ணி 23 மீன்கள் பிடித்துமுடிக்கும்போது விரல்கள் வெள்ளையாகிப்போனது.
24 வதாய் சிறு தவளை ஒன்று தூண்டில் கடித்தபோது ஓடத்தொடங்கியவன் வீடுவந்து நின்றேன்.அப்பா வீட்டிலிருக்க வீட்டிலிருந்து ஓடத்தொடங்கியவன் எங்கே நின்றேன்,மீன்கள் என்னவானது என்பதை மறந்து போனேன். எனக்கு ஒரு டைம்மெஷின் கிடைத்தால் தீர்க்கப்படவேண்டிய சந்தேகப்பட்டியலில் இதுவும் நீண்டகாலமாய் இருக்கிறது.
காலம்..
நான் மீன் பிடித்த குளம் கருவேலங்காடாகிவிட்டது.
அப்பத்தாவும்,அப்பாவும் மண்மேடாகிப்போனார்கள்.
வீட்டுக்கு வந்த மகராசி,
மதுரையில் யார் சாமின்னாக்கூட சொல்லமாட்டாள்.
அதில் மீன் வருவதால்...
அவ்வளவு சுத்தம்...
ஆனாலும் எனக்கு மீனுடனான தொடர்பு விட்டுப்போகாமல் தொடர்கிறது.
தொடங்கிய அலுவலகம் ஏனோ தடங்கல்களில் நொண்டியபடியிருந்தது. முகப்பில் கண்ணாடி வைக்கச்சொன்னார்கள். வருபவர்கள் தலைசீவத்தொடங்கியதைத்தவிர வேறு மாற்றமில்லை.
மற்றொரு நாள் வந்த நண்பர் மீன்தொட்டி வைக்கச்சொன்னார்.
எட்டு மீன்களுடன் ஒரு தொட்டி வந்தது.
சின்னவள் பெயர்சூட்டும் வைபவம் எல்லாம் நடத்திவிட்டாள்.
விரல்களை கண்ணாடிமேல் வைத்து கடி என்பாள்.
சில நாட்கள் அலுவலகம் திறக்கும் போது மீனொன்று செத்திருக்கும்..
அவ்வளவு சோகமாய் இருக்கும்.
கடைசியில் நான்கு மீன்கள் பிழைத்துவிட்டேன்.
இடையில் பத்துமுறை தொட்டி கழுவிவிட்டாயிற்று.
சின்னவயதில் சின்னவளை குளிக்கவைத்ததற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல அந்த நிகழ்வு.
புதுத்தண்ணீர் ஊற்றி மீன்களை விடும்போது அதன் வேகமே அதிகரித்ததாய் தோன்றும்.
சனி ஞாயிறுகளிலும் அப்படி என்னதான் ஆபீசோ..என வீட்டம்மா திட்டினாலும் கேட்காமல் ஒருவேளை உணவேனும் போட்டாகவேணும் எனக்கு.
மீன்கள் வளர்ந்துவிட்டன..
தொட்டியை மாற்றுங்கள் அல்லது மீனைமாற்றுங்கள் என்கிறார்கள்...ஒரு மீன் 50 ரூபாய்க்கு எடுத்துக்கொள்வார்களாம்..
மனசே இல்லை..
ஒருநாள் பட்டினி போட்டாலும் மனசு இயங்க மறுக்கிறது.
மாறும் சூழ்நிலைகளில் மீன்களைப்பார்க்கும் போதெல்லாம் பரவசம் மீறி பதற்றம்தான் வருகிறது.
என்ன செய்யப்போகிறேன்....
ஒரு கவலையுமில்லாமல்
வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன...
வண்ணமீன்கள் தொட்டியில்.

9 கருத்துகள்:

  1. அ்யயா...எங்கய்யா இருந்திங்க இவ்வளவு நாளா?
    என்ன ஒரு லாவக நடை! அழகும், அன்பும் கலந்த அரிய படைப்பு.
    தொடர்ந்து எழுதுங்கள் சிவா. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா கிடந்தேன்...எல்லாம் உங்களால் வந்த வினை..ஹா..ஹா..நன்றி ஐயா....

      நீக்கு
    2. மின்னலென துள்ளும் மூன்களின் பரவசம் உங்களது வரிகளில் அருமை

      நீக்கு
  2. நான் முதலில் கருத்து இடவதற்கு முன் முத்துநிலவன் திண்டுக்கல் தனபாலன் போல முந்திக் கொண்டார். அதுமட்டுமல்ல நான் சொல்லவந்தையும் முத்துநிலவன் சொல்லி சென்றுவிட்டார். எழுத்து நடையும் சொல்லையவிதமும் மிக அருமை... தொடருங்கள் இது போலவே........பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா வளமான சொற்களுடன் அருமையான உவமைகளுடன் எங்களை காலச்சக்கரத்தில் வைத்து இழுத்துச்சென்று விட்டீர்கள்...தொடருங்கள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. எங்கே வெளியூர் சென்றாலும் மனம் முழுவதும் மீன்களைப் போலவே சுற்றி வருகிறது என்பது உண்மை...

    பதிலளிநீக்கு
  5. அட! அருமையான நடை இதை ஒளித்துவைத்தது ஏனோ? காதலில் பலர் சொக்கிவிடுவார்கள் என்றோ!

    வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு