வெள்ளி, 23 அக்டோபர், 2015

வேறொரு வருத்தமில்லை

ஒருமுறை
பார்த்திருக்கலாம்
தான்
அவன் முகத்தை
கடைசியாய்.


எப்போதும் ஒளிசிந்திக்கொண்டிருந்த
அந்த கண்களை...
காற்றின்வழி
கசியவிட்ட
நம்பிக்கை வார்த்தைகளின்
நாக்கை.
கடவுளுடனே பேசுவான்
என நம்பிக்கொண்டிருந்த
உதடுகளை.
ஞானத்தகப்பன்
நானென்று
நிமிர்ந்து நின்ற
மார்பை...
எல்லாம்
என் தலையில்
என்பானே
அவன் முகத்தை..
தூக்கிட்டு மரித்த
அவன் கடைசி வலியை...
அந்த பிணவறையில்
அடுக்கியிருந்த
சவங்களினூடே
தாடிமட்டும்
தெரிந்திருக்கும்
முகத்தை....
அறுத்து மூடிய மேனியில்
கட்டிப்பட்டு போயிருக்கும்
அவன் கனவுகளை..
திரவங்களின் வாடைக்கு
வாய்பொத்தி நின்ற நட்புகளின் இடையில்
நானும் நின்றிருக்கலாம்
ஒரு சொட்டு கண்ணீருடன்..
அவன் நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றிருந்தால்
அவன் சாம்பலாகும் வரை
நானும் எரிந்திருக்கலாம் தான்
ஊருக்கே
புத்தி சொன்னவன்.
புத்திரன் மறந்து
நித்திரையானவன்.
அவன் சொன்ன
எதை நம்ப...
அவன் எழுதிய
எதைப்படிக்க..
அவன்
மரணத்தில்
ஒரு வருத்தமுமில்லை.
அவன்
மரணிக்க
நினைத்த போதே
செத்துப்போனவன்.

8 கருத்துகள்:

 1. தங்களைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன் நண்பரே
  கிடைக்கமாட்டேன் என்கிறது
  ஒவ்வொரு வரியும்
  ஒவ்வொரு சொல்லும்
  உள்ளத்தைத் தொட்டது

  பதிலளிநீக்கு
 2. ஆம் செல்வா. சுயமாக செத்துப்போக முடிவெடுத்தவுடனே அவர்கள் செத்துவிட்டார்கள்..பிறகு இருப்பவர்களைச் சாகடிப்பார்கள்! இதுதான் தற்கொலைகளின் விளைவு. அருமையான பதிவு. ஒருவேண்டுகோள் எந்தப் பதிவையும் படமில்லாமல் போடாதீர்கள். கூகுளில் போய்த் தேடுங்கள்..எடுத்துப் போடுங்கள்..படமும் படைப்பும் படிப்பவர் மனசில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும்.. தொடருங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பரிசுபெற்ற கவிதையின் மேலாக, -சின்னவளுடன் சென்று-பரிசுபெற்ற படத்தை எடுத்துப் போடுங்கள் செல்வா..என்ன இப்படி விளம்பரம் பண்ணிக்கொள்ளத் தெரியாதவரா இருக்கீங்க..(அவனவன் இல்லாத பொல்லாததையெல்லாம் இருக்கறமாதிரி காட்டித் திரியிறாங்கெ..நீங்க இருக்கறத எடுத்துக் காட்டக்கூடாதாய்யா..?!!)

  பதிலளிநீக்கு
 4. அருமை! அருமை! எப்படி இப்படி எழுதி அசத்துகின்றீர்கள்!

  உங்கள் சின்னவள் சிரிக்கின்றாள் தான் எங்கள் மதிப்பெண் லிஸ்டில் டாப்பாகி நின்றது. அதை வாசித்ததும் அசந்து அந்த அழகியலில் சொக்கி நின்று பல முறை வாசித்திருப்போம்.

  பதிலளிநீக்கு