வெள்ளி, 11 டிசம்பர், 2015

திரைகடல் தாண்டி...

அன்பின் சக்திக்கு,
கொதித்த உலையாய் மழையின் தாக்கம் ,உணர்ச்சிகளின் தெளிப்பால் கொஞ்சம் அடங்குதல் உணர்கிறேன்.
இணையம் அதன் மாமுல் வாழ்க்கைக்கு கொஞ்சமாய் திரும்புகிறது.
சமூகப்பாவலன்(?)சிம்பு அதற்கு கட்டியம் கூறியிருக்கிறான்.

விட்டுவிடலாம் சக்தி..
பிளீச்சிங் பவுடர் கொஞ்சம் அதிகமாய் தெளிக்கப்படவேண்டியவை அவர்கள் பகுதிகள்.
ஒரு நல்ல கடிதத்தை உனக்கு எழுத நினைத்தால் விடாது துரத்துகிறது கசப்பு..
"ஆமைகள் முட்டைகளை கரையில் புதைத்துவிட்டு " நினைவுச்சூட்டில் அடைகாப்பதாய் சொல்வார்கள்.
அறிவியலிலும்,நடைமுறையிலும் அது சாத்தியமா அல்லது உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்த அடைமழை காலங்களில்,
திரைகடலோடிய நம் சொந்தங்கள் பதைத்த பரிதவிப்பு ...
இணையத்தின் வழியே சிந்திய கண்ணீர்..
நீட்டிய உதவிக்கரங்கள்..
அடையாளம் அதிகமின்றிப்போனாலும்,வணங்கத்தக்கவை.
பல பெயர்களை என்னால் உனக்குச்சொல்ல முடியும்..
சிலரையேனும் உனக்கான கடிதங்களில் அறிமுகப்படுத்த விழைகிறேன்.
அன்பின் நண்பர் விசுவாசம்.
அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் கணக்காயராக பணியாற்றிவரும் தமிழர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை உன்னிடம் சொல்ல வரவில்லை.
ஆனால் ,
வாழ்க்கை என்னும் வலிய நதி எப்படியெல்லாம் புரட்டிப்போடும் எல்லாவற்றையும் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்.
எட்டுபிள்ளைகளில் இளைய பிள்ளையாய்..
நான்கு வயதில் தந்தையை இழந்து.
எட்டு பிள்ளை பெற்றதாய் ஊருக்கே தாயாகும் தருணங்கள்...
சகோதரிகளின் தாய்மையில் வளரும் பருவங்கள்...
இது திரைப்படத்தின் கதையல்ல சக்தி...
ஏழு பிள்ளை பெற்ற நல்ல தங்காள் எல்லாரோடும் கிணற்றில் விழ...
நல்ல தாய் பெற்ற பிள்ளைகள்...
நாடே போற்ற நடந்த கதை..
ஆழித்துரும்பென அலைந்த வாழ்க்கை..
ஒவ்வொரு கனுவிலும் போராட்டம்.
"இடுக்கண் வருங்கால் நகைத்தே"
எதிலும் கொஞ்சம் நகைச்சுவை.
வேலூர்,சென்னை,பெங்களூரு,மும்பை,
அரபுநாடுகள்,
ஓடி ஓடித்திரியும் நாட்கள் அமெரிக்காவில் நிலைக்கொள்கிறது.
"காவியத்தில் நாடகத்தில் காதலென்றால் களித்திடுவார்"
"அவள் அழகாய் இல்லாததால் எனக்கு தங்கையானாள்"
காதல் என்னும் உணர்வினை நாம் கொண்டாடும் அழகு இது.
ஈழத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஷெல் அடித்த பொழுதுகளில் பெற்றோர் இழந்த , ஈழத்து இளவரசியை மணக்கிறார்.
விசு வின் எல்லாச்சேட்டைகளுக்கும் அனுசரிக்கும் இரண்டாம் தாயாய்..
அடக்குவதுபோல் அவர் நடிப்பதும்,,அடங்குவதுபோல் இவர் அளப்பதிலும்
எழிலாய் இருக்கிறது ....காட்சிகள்.
அவர் சொல்வது போலவே
இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள்.
மருத்துவப்பணியில் மனைவி.
யேல் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வாங்கும் மகள்.
எல்லா விதங்களிலும், கருணையிலும் தந்தைக்குப் போட்டியாய் சின்னவள்,

”ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு”

பையும் நிறையும் வாழ்க்கை.
தம் வீடு,தம் மக்கள்..
அமெரிக்காவின் அட்டைவீடுகளில் முடங்கிப்போய் இருக்கலாம்...
முடியவில்லை சக்தி...
தமிழ், தமிழ் மீது கொண்ட நேசம் ..
20 வருடங்களுக்குப்பிறகு பேச வைக்கிறது,,எழுத வைக்கிறது..
முகநூலிலும்,வலைப்பூவிலும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்.
சுருண்டு போய் இருக்கும் அட்டைப்பூச்சியை எழுத்து கொண்டு இழுத்துப் போகிறார்.
எத்தனை ஆவேசம்..
எத்தனை கருணை..
இங்கிருந்து படித்துவிட்டு ஏன் அமெரிக்காவில் இருக்கிறார்?
எவன் கொடுப்பான் இங்கே பாதுகாப்பான வாழ்க்கை?
அங்கேயே தான் இருக்க வேண்டும்.
உலகின் எந்த மூலையில் இருக்கின்றாய் என்பதல்ல ...
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதே இன்றைய உலகம்..
விசு,
நன்றே செய்கிறார்.
அந்த ஆவேசமும்,வேதனையும்,எதைக்கொண்டேனும் இழுத்துப்போக வேண்டாமா தடம் புரண்ட தமிழகத்தேரை என்னும் துடிப்பும் சீர்தூக்க வேண்டியவை.
கருத்துப்போன தமிழக முகத்துக்கு "சகாயம்" செய்ய வருவாரா யாரேனும் என்ற குரல் கடல் பல தாண்டி கேட்க ஆரம்பித்து இருக்கிறது.
எழுத்துச்சூரியன்கள்,கருத்துப்பேழைகள்,வெறும் வாயால் விண்ணையும் சாடும் பேனாப்பித்தர்கள்
மழைக்காலங்களில் பேனாவை மூடிவிட்டு வெள்ளத்தை வேடிக்கை பார்க்கப்போனவர்கள்,
குளிருக்கு இதமாய் கலவிக்கவிதை எழுதியவர்கள் மத்தியில்,
தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் விசுவாசத்தின் பால் விசுவாசம் கொள்ளவேண்டும் சக்தி..
நாம் மனிதர்கள்.
அன்புடன்,
செல்வக்குமார்.

13 கருத்துகள்:

 1. நல்ல மனிதர்களை அனைவருக்கும் அடையாளம் காட்டவேண்டிய தருணம் இது. பதிவில் தெரிகிறது உங்கள் இருவரின் நட்பின் நெருக்கம்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. எனது இனிய நண்பருக்கு... மன்னிக்கவும்... நமது இனிய நண்பரின் அறிமுகத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. ஆகா! விசுவைப் பற்றி அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.. ஒவ்வொன்றும் உண்மை..நம்மூரில் நல்லது நடக்க வேண்டுமே என்று அவர் துடிப்பது அறிவேன் .. வாழ்த்துகள் அவருக்கு. பகிர்ந்த உங்களுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 4. ஒரு நல் உள்ளத்தை
  நல் மனிதரை
  போற்றுதலுக்கு உரியவரைப்
  போற்றியுள்ளீர்
  மகிழ்ந்தேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையாகச் சொல்லிச் செல்கின்றீர்கள். ஒரு ஆறு, தான் போகிற போக்கில் கரையில், கூர்ந்து நோக்கும் விதத்தில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கிவிட்டுச் செல்வது போல, தாங்கள் தங்கள் எண்ணக்கருத்துகளைப் போகிற போக்கில், கூர்ந்து நோக்கும் விதத்தில் எழுதும் நடையில், நம் நண்பர் விசு அவர்களைப் பற்றிச் சொல்லிச் சென்றது அருமை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அருமையானவர்கள். தாய் எட்டடி குட்டி 16 அடி என்றுதானே சொல்வோம்?! இவர்கள் கதையில் மட்டும் தாய் 16 அடி அல்ல 32 அடி அதற்கும் மேல் பாய்ந்து கொண்டிருக்கின்றார் இந்த வயதிலும் தனது தன்னலமற்ற சேவையால். தாயைப் போல் பிள்ளை என்பது மெய்யாகி இருப்பதில் வியப்பே இல்லை அல்லவா?! இப்படிப்பட்ட அருமையான குழந்தைகளைக் கொடுத்த அந்தப் பெற்றோருக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  நீங்களே பேசிவிட்டதால் நண்பரைப் பற்றி அதிகம் பேசவில்லை நாங்கள் இங்கு...

  அருமை செல்வா.

  பதிலளிநீக்கு
 6. மிகத் தூரம் இருந்தாலும் எழுத்தின் மூலம்
  என மனதிற்கு மிக நெருக்கமானவர்
  நான் விரும்பித் தொடரும் அருமையான பதிவரை
  அற்புதமாக அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. “உலகின் எந்த மூலையில் இருக்கின்றாய் என்பதல்ல ...
  என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பதே இன்றைய உலகம்”
  நண்பர் விசுவைப்பற்றிய அழகான அறிமுகம் அருமை!
  அவருக்கு வணக்கமும், உங்களுக்கு வாழ்த்தும். அவரது வலைப்பக்க இணைப்பையும் இணைத்துவிடுங்கள் செல்வா.

  பதிலளிநீக்கு
 8. அறியாதவரை அறிய வைத்த அறிமுகத்துக்கு நன்றி! நண்பரே.....

  பதிலளிநீக்கு
 9. நல்லதோர் அறிமுகம். அவருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் விசு அங்கிள்...நீங்க இன்னும் இங்கே வரலியா???

  பதிலளிநீக்கு
 11. வந்தேன் ..கண்டேன் ... உச்சந்தலை குளிர்ந்து ஒன்றும் புரியாமல் அமர்ந்து கொண்டு.
  என் தாயின் கொடைக்கு கொடை பிடிக்க கூட எனக்கு தகுதி இல்லை. நன்றி செல்வா..
  என்னை விடுங்கள் ... பல நல்ல உள்ளங்கள் அதுவும் தமிழகத்தை தாண்டி உள்ளவர்கள் நிறைய பேர் இருகின்றார்கள். அவர்களை அனைவரையும் வருங்காலத்தில் அறிமுக படுத்துங்கள்.
  நன்றி..

  பதிலளிநீக்கு