செவ்வாய், 22 டிசம்பர், 2015

நல்லா வருவீங்க....

ஆங்காங்கே
தேங்கி நிற்கிறது
வாகனங்கள்.

நீர்க்கோடிட்ட
சுவர்களின்
உயரம்
அளக்கிறார்கள்.

எடுத்துவைத்த
காணொளி
காட்டுகிறார்கள்.

நீர்
வந்த இரவின்
பலமுகம்
படர்கிறது.

தலைக்கவச
பயமின்றி
தடதடக்கிறார்கள்.

பால்
இருநூறுக்கு
விற்றவனிடம்
இப்போதும்
பால்
வாங்குகிறார்கள்.

பணம் ..
வங்கியிலா
நேரிலா...
விசாரிக்கிறார்கள்.

நீ
சின்னபிள்ளையா
இருந்தப்போ...
கதைகளுக்கான
கரு
கிடைத்திருக்கிறது.

மீண்டும் கூவம்
காணக்கிடைக்கிறது

ஆற்றிடை
குடில்களின்
அடுப்பு
புகைகிறது.

வணிக
வளாகங்களில்
நட்சத்திரங்கள்
மின்னத்
தொடங்கிவிட்டன.

படகுகள்
கடலுக்கு
திரும்பிவிட்டன.

சென்னைக்கு
மிக அருகில்...
சீக்கிரம்
கேட்கலாம்.

திருவையாறும்
சென்னை
வந்திருக்கிறது..

குப்பையெறிந்து
போகிறது
ஒரு
கும்பல்.

இனி
வெயில் காலத்தில்
தண்ணீருக்குப்
குடங்கள்
வரிசையாய் வைத்து
போராடினால்
போதும்...

நாம்
மானாட மயிலாட
பார்க்கலாம்.

5 கருத்துகள்:

 1. இந்த வெள்ளத்தால் நாம்
  யாதேனும் பாடம் கற்றுக் கொண்டிருப்போமோ
  பாடத்தை உணர்ந்து திருந்த, இருப்பதை திருத்த
  முயல்வோமா,
  இனி அடுத்த நூறு வருடங்களுக்குக் கவலையில்லை
  நூறு வருடம் கழித்து நாமோ இருக்கப் போவதில்லை
  இனி வரப்போகிறவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்
  நாம் பழகியதையே இனியும் தொடர்வோம்
  என்று தொடரத்தான் போகிறோமா
  தெரியவில்லையே

  பதிலளிநீக்கு
 2. நாம்
  மானாட மயிலாட
  பார்க்கலாம்

  இதுதான் நமது லட்சணம் நண்பரே அருமையான சவுக்கடி கொடுத்தீர்கள்

  பதிலளிநீக்கு
 3. வெள்ளம் வந்த தடம் மாறிவிடும் மிக வேகமாய்
  மண்ணில் இருந்தும் மனத்தில் இருந்தும் ஏனெனில் நாம்
  மனிதர்கள்

  பதிலளிநீக்கு