செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழைச்சூடு....

அன்பின் சக்திக்கு,
இத்தனை நாட்கள் நீ கல்விக்கூடங்களில் கல்லாத பல பாடங்களை வீதிகளில் படித்திருப்பாய் என்ற நம்பிக்கையில் நான்.

மதங்களாலும்,கட்சிகளாலும் நம்பிக்கைகொண்டிருந்த நம்மின் வேதனையும் களைந்தெறிந்திருக்கிறது காலம்.

ஆயிரம் சமூக நல்லிணக்க மாநாடுகள் செய்யமுடியாத வேலையை விண்ணும் மண்ணும் புகட்டியிருக்கிறது.

மசூதிகள் தீவிரவாதிகளின் கூடாரமல்ல,மனிதநேயத்தின் மற்றொரு வீடு என நிரூபித்திருக்கிறார்கள் சகோதரர்கள்.

சக்தி,

இஸ்லாமியர்கள் யாவரும் நபிகள் பிறந்தநாட்டிலிருந்து நமது ஊருக்குள் வந்தவர்களல்ல.
அரசனும், அரசும், ஆண்டைகளும் அடித்த அடிகளுக்கு வடிகால் தேடி தொப்பிவைத்துக்கொண்ட நம் ரத்த உறவுகளே.

தீவிரவாதிகள் என்பவர்கள் எல்லா மதங்களிலும் இருப்பார்கள்...
பிப்ரவரி14ல் பேசிக்கொண்டுந்தவர்களை எல்லாம் தாலிகட்டிக்கொள்ளச்செய்த,

மாட்டுக்கறி வைத்திருந்ததாய் கொன்றுபோட்ட,
மிருகங்களை என்ன சொல்லித்திட்டுவது?

பிஞ்சுகள் மனதிலும்,
தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டோரெல்லாம் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தைப் பதியவைத்த மனிதப்பதர்களை அவர்களின் கடவுளேனும் மன்னிப்பாரா?

நாம் ஒரு மதத்தில் பிறப்பது நம் கைகளில் இல்லை. ஆனால் எந்த மதத்தில் பிறந்தாலும் அதன் எல்லாக்கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.

நாம் மதங்களை நம்பவேண்டாம்..
மனிதர்களை நம்புவோம்.
உன் அம்மாவிடம்
கடவுளின் கதைகள் கேட்டு வளர்ந்தவள் தான் நீயும்.

காலம் உனக்கு சொல்லித்தரும்...
மனசாட்சி தவிர கடவுள் வேறொன்றுமில்லை.
"தன் நெஞ்சே தன்னைச்சுடும்" என்பதைத்தாண்டியா தண்டனை கொடுத்துவிட முடியும்...கூட்டல் கணக்கும் சரியாகத் தெரியாத நீதிமன்றங்களால்?

இறைவன் என்பவன் எப்படியிருக்கவேண்டும் சக்தி?

மனிதர்களை நேசிப்பவராய்..
எந்த சூழ்நிலையிலும் வன்முறை விரும்பாதவராய்,
அவமானங்களைத்தாண்டியும் அகிலம் காப்பவராய்,
தன்னுயிர் ஈந்தும் கொள்கை பிறழாதவராய்..

சொல் சக்தி..
மனித வதம் செய்யாத உன் கடவுள்கள் எத்தனை?

அற்புதமான ஆற்றல் நிறைந்த உன் கடவுள்கள்..
கேவலம் தான் படைத்த மனிதர்களின் குணங்களை மாற்றமுடியாமல்,
பிணமாக்கப் பிறக்கும் போது..

எப்படிச்சொல்வாய் அதனைக்கடவுள் என?

உன் இறை ஏற்பு...மறுப்பு என்பது உலகம் உனக்குக்கொடுத்த உரிமை...
ஆனாலும் அறிவியல் துணை கொள்.

இறைமறுப்பு பிரச்சாரம் என் நோக்கமல்ல..

நாம் மனிதம் காப்போம்,
மதங்களை கடவுள் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அன்புடன்,
செல்வக்குமார்.

6 கருத்துகள்:

 1. நாம் மதங்களை நம்பவேண்டாம்..
  மனிதர்களை நம்புவோம்.
  அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. மசூதிகள் தீவிரவாதிகளின் கூடாரமல்ல,மனிதநேயத்தின் மற்றொரு வீடு என நிரூபித்திருக்கிறார்கள் சகோதரர்கள்.
  உண்மைதான் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. மசூதிகள் தீவிரவாதிகளின் கூடாரமல்ல,மனிதநேயத்தின் மற்றொரு வீடு
  இஸ்லாமியர்கள் யாவரும் நபிகள் பிறந்தநாட்டிலிருந்து நமது ஊருக்குள் வந்தவர்களல்ல.
  அரசனும், அரசும், ஆண்டைகளும் அடித்த அடிகளுக்கு வடிகால் தேடி தொப்பிவைத்துக்கொண்ட நம் ரத்த உறவுகளே.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கடிதம். மத வெறியர்கள் இனிமேலாவது திருந்தினால் நல்லது.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு செய்தி சொல்லியிருக்கின்றீர்கள் செல்வா...இதோ உங்கள் கடிதத்திற்குத் துணை போகும் செய்திகள் இங்கே பாருங்கள்...http://engalblog.blogspot.com/2015/12/blog-post_8.html அருமையான செய்திகள்.

  பதிலளிநீக்கு