வெள்ளி, 25 டிசம்பர், 2015

எமனின் அவுட் சோர்ஸிங்...

அன்பின் சக்திக்கு,
               கடந்த வாரம் முழுவதும் உங்களுடன் இருந்ததால் நல விசாரிப்பை தள்ளிவைத்துவிடலாம்.

கருணையில்லா மழை ,கருணை இல்லத்தை புரட்டிப்போட்டதையும்,
பெருமழை தந்த வாழ்க்கைப் பாடத்துக்கான கேள்வியை "சாய்ஸ்-ல்" விட்டுவிட்ட மாநகர மக்களையும் பார்த்துவிட்டு வந்த என்னை நீதான் நலம் விசாரிக்க வேண்டும்.

உன்னை ஒத்தோரெல்லாம் முகநூலிலும் ,பிற சமூக தளங்களிலும் மூழ்கிக்கிடந்து முத்தெடுப்பதாய் நினைத்து மூச்சடக்கி கிடப்பத்தை காண்கையில் என்னைப்போன்றோர்க்கு கொஞ்சம் வருத்தம் தான்.

தேடல் என்னும் ஆவலில் புல்மேய வரும் எங்களுக்கு முட்களின் கூட்டம் தான் அதிகம் தெரிகிறது.

முகநூல் என்பது தகவல் பரிமாற்றத்திற்காகவும்,எண்ணங்களின் இடம் பெயரலுக்கும் வியாபாரி கண்டுபிடித்த அறிவியல்.

ஆனால் முகநூலில் பகிரப்படும் செய்திகளின் கூட்டத்தைப்பார்க்கும் போது பதற்றம் வந்துவிடுகிறது.

அற்புதமான தளம் அபத்தங்களால் நிரம்பிக்கிடக்கிறது.

காப்பி&பேஸ்ட் வசதி மட்டும் இல்லையெனில் முகநூல் பாரம் அதிகம் குறையும்.

காலை எழுந்ததும் குட்மார்னிங்...தின்ற இட்லிகளின் எண்ணிக்கை...அந்த பதிவுக்கான விருப்பங்களின் எண்ணிக்கை..
தன்னுடைய பதிவை விரும்பச்சொல்லியும்,பகிரச்சொல்லியும் அத்தனை கெஞ்சல்கள்.
தெரிந்தவர் என்ன செய்திருந்தாலும் Like..
பிடித்தவர் செய்திருந்தால் பகிரல்...

நடிகர்களுக்கு கச்சைகட்டி போடும் சண்டைகள்..
நாளுக்குநாள் புகைப்பட மாற்றங்கள்.
அடுத்தவன் எழுதியதை தன் பெயருக்கு மாற்றிக்கொள்தல்...

மனிதனின் மனசுக்குள் எத்தனை கோணங்கள் உண்டோ ...அத்தனையும் காணக்கிடைக்கிறது..

ஒரு சமூகத்தின் கூரிய பார்வையை திசைதிருப்ப ஒரு பதிவு மட்டுமே போதுமென்றாகிப்போகிறது.

பெருமழை சூழ்ந்த நாட்களில் இந்த முகநூல் தந்த பங்களிப்பு அபாரமானதுதான்.
கொட்டிய தகவல்கள்,ஒருங்கிணைத்த கைகள்..உதவி கேட்போர் பட்டியல்,மீட்போர் படங்கள்,மீண்டோர் கதறல்கள்..

முகநூல் ஒரு தேவ தூதனாய் தெரிந்தது.

ஆனாலும் சக்தி..
அளவுக்கு அதிகமாய் இந்த ஊடகம் மக்களை பதட்டப்படுத்தியதாகவே தோன்றியது.

உண்மையின் பக்கத்தை உரச சோம்பேறிப்பட்டு கேள்விப்பட்டதை காது,மூக்கு வைத்து உலவவிட்டதாய் நான் உணர்கிறேன்.

தெரியவேண்டிய பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கிறது..

யோசி சக்தி...
வந்த படகுகளும்,நடிகர்களும்,தலைவர்களும் படங்களாகவும் செய்திகளாகவும் பதிவாகி இருக்கிறார்கள்.

செத்தவர்களின் கணக்கை யாராலும் எழுத முடிகிறதா துல்லியமாய்.?

அவர் வரவேண்டும்..இவர் ஆளவேண்டும்...
எல்லாம் சரி ...நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்...

புத்தாடை அணிவதையும்,புதுக்காதல் கொண்டதையும்,அம்மாவுக்கு ஒரு கவிதையும்,ஆங்காங்கே எடுத்த செல்பியும் பதிவுசெய்யத்தான் முகநூலெனில் ..
ஒருபோதும் உங்கள் கடவுள் அதற்கு லைக் போடமாட்டார்.

ஒரு கற்பனை கேளேன்..

எமனின் அலுவலகத்தில் கோப்புகள் நிறைந்து கிடந்தன..சித்திரகுப்தன் பார்த்துதீரவில்லை பாவ புண்ணிய கணக்குகளை.

எமன் அமெரிக்கா உட்பட அனைவரிடமும் கலந்துபேசி முடிவுக்கு வந்தான்..

அவுட் சோர்ஸிங் முறையில் வேலையை முகநூலுக்கு கொடுக்கிறான்..

இப்போது அங்கே கோப்புகள் கிடையாது..
சித்திரகுப்தன் கணினியோடு இருக்கிறான்.
அவரவர் வரும்போது...அவர்களின் முகநூல் பக்கங்களை திறந்துபார்த்து சிரிக்கிறான்.

அவர்களின் கணக்கை அவர்களே கைப்பட பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்...

புரிகிறதா சக்தி..
எண்ணங்களை பதிவுசெய்யும் தளத்திற்கு மனநூல் என்றுதானே பெயர்வைத்திருக்கவேண்டும்...எதற்காக முகநூல் என பெயர் வைத்தார்கள் என்று..

ஹா..ஹா..

அன்புடன்,
செல்வக்குமார்

9 கருத்துகள்:

 1. மனநூல் இல்லை என்பது புரிந்து விட்டது போலும் முகம் தெரியாத மனிதர்களிடம் சாட்சிங் செய்து தங்களைப்பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். தாங்கள் ய்யார் என்று உணராதவர்கள்...( அதெல்லாம் சரி எப்போ வருவீங்க? மொத்தமாய்???)

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே
  எண்ணங்களை
  உள்ளபடி பதிவு செய்தால் அல்லவா
  மனநூல் என்றுஅழைக்கலாம்
  முக நூலில் நாம் காணும் முகங்களிலேயே
  போலி முகங்கள் அதிகமாக இருக்கின்றனவே
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 3. அப்புறம் ஏன் தான் எல்லோரும் முகநூலில் ஒட்டிக் கொண்டே இருக்கீங்களோ..என் பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போயி சாப்பிடுவாங்களோ இல்லையோ..அதோடு ஐக்கியமாய்டுவாங்கலாம்...ஹா...ஹா...நாம என்னத்தைச் சொல்லி என்னத்தை..டாடி..

  பதிலளிநீக்கு
 4. முகநூல் குற்த்த அலசல் அருமை நண்பரே... நான் ஒதுங்கி பல ஆண்டுகளாகி விட்டது எனது வலைப்பூ விடயங்கள் மட்டுமே அதில் வெளியாகும்

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் நண்பரே – ஃபேஸ்புக் என்பது ஒரு வரப்பிரசாதம். மேலை நாட்டவர் இதை ஒரு சமூக நலனுக்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்நாட்டில் தவறான அணுகுமுறையிலேயே நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகவே பலருடைய கணக்குகள் இயங்குகின்றன; இதனாலேயே நான் இன்னும் ஃபேஸ்புக்கில் முழுமையாக இணைத்துக் கொள்ளவில்லை.

  பதிலளிநீக்கு
 6. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால் அதை முக நூல் என்று அழைக்கிறார்களோ என்னவோ

  பதிலளிநீக்கு
 7. அகத்தின் அழகு..அட நம்ம மதுரைத் தமிழனும் அதைத்தான் சொல்லிருக்காரு...லைக் போட்டுட்டோம் அவருக்கும் உங்களுக்கும் சேர்த்து!! இது எப்படி??!!

  முகநூல் பற்றி நல்ல பதிவு. நல்ல தளமே. சரியாகக் கையாளப்பட்டால்...

  பதிலளிநீக்கு
 8. முகம்பாராமல் பேச முடிவதால் அது பேஸ்புக் ஆனதோ என்னமோ எனக்கு தெரியாது அது அகம்பேசும் நூலும் ஆகுமா செல்வா சார்? நான் ஆம் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? எதுவும் நான் பயன் படுத்தும் விதத்தில் தானே?

  பதிலளிநீக்கு