வெள்ளி, 27 நவம்பர், 2015

ஓடாக் குதிரைகள்...

சென்னையின் என் நாட்கள் மிகவும் சோம்பேறிப்பட்ட நிலையில் ஊர்சுற்ற கிளம்பிவிட்டேன்.

எத்தனை மனிதர்கள்..எத்தனை வேலைகள்...வண்டிகளில் பறக்கிறார்கள்..உரசிக்கொள்ளும் இரு வண்டிக்காரர்கள் உடனடியாக அடிக்கத்தொடங்கும் வேகம்.பாவம் அவர்களைப்பெற்ற அம்மாக்கள்..அத்தனை கேவலப்படுகிறார்கள்..

மின்சார ரயிலில் எப்போதும் கும்பல் நகர்ந்து கொண்டே இருக்கும் நகரம்.

உணவக பணியாளர்களுக்கு தான் பல மொழிகள் பேசும் வாய்ப்பிருக்கும்...இங்கே பேருந்தின் நடத்துனர்கள் பேசுகிறார்கள்.

காதுகளில் ஒட்டிப்பிறந்து இருக்கிறது காதொலிப்பான்கள். கார்கள்,வண்டிகள்,ஆண்கள்,பெண்கள்...

இந்த சென்னையின் மறுபக்கமாய் இருக்கிறது குதிரைப்பந்தய மைதானம்.

பந்தயம் நடக்கும் நாட்களில் கூடிவிடுகிறது கூட்டம்.
எங்கிருந்து எப்படி வருகிறார்கள் என தெரியாது...ஆனால் வந்து விடுகிறார்கள்.
50 தை தாண்டியவர்கள் அதிகமாய்.எல்லா வயதினரும் கலந்துதான் இருக்கிறார்கள்.

வாசலிலேயே கடைகள் முளைத்துவிடுகின்றன.
சாணித்தாளில் ஒரு A4 அளவு பேப்பர் 5 ரூபாய் விற்கிறது. கட்டாயம் வாங்கிவிடுகிறார்கள்..அதில் ஓசி கொடுப்பதெல்லாம் கிடையாது.ஆளுக்கொரு பேனா...

ஆரம்பித்து விடுகிறார்கள் கணக்கை...இன்னும் சிலர் புத்தகம் போல் இருக்கும் ஒன்றை வாங்கி வாசிக்கிறார்கள்.

வாழ்வில் படிக்கும் போது இவர்கள் இப்படி கவனமாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டார்கள்.
எண்கள்..எண்கள்...எண்கள் வேறொன்றுமில்லை..

கூட்டி,கழித்து,பல பக்கங்கள் புரட்டி கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

குதிரையின் பெயர்கள் ,அதை ஓட்டுபவன் சாகசம்,அந்த குதிரையின் முதலாளி,
இதில் முக்கியமான சங்கதி ஒன்றுண்டு...இந்த பெயர்கள் வாயில் நுழையுமளவிற்கு எளிதாய் இருப்பதில்லை...ஆனால் படபடக்கிறார்கள்..

எங்கோ மும்பையிலும்,மைசூரிலும் நடக்கும் குதிரைப்பந்தயத்திற்கு இவர்கள் முடிவெழுதுகிறார்கள்.

ஓய்வுபெற்ற அதிகாரிகளாய் இருப்பவர்கள்,,ஆங்கில இந்து வாசிப்பவர்கள்,மூக்குக்கீழ் எந்தநேரமும் கண்ணாடி அவிழத்தயாராய் இருக்கும் மோன நிலைக்காரர்கள்,,
பேப்பரை கண்ணோடு ஒட்டிக்கொண்டு படிப்பவர்கள்,,குதிரையாகவே மாறிப்போய், தலைநரைத்தவர்கள்,
மைதானம் முழுவதும் தரைகளிலும்,சிறு கற்களிலும் அமர்ந்துகொண்டு நேற்றைய முடிவுகளை அலசிக்கொண்டு...

இன்றைய முடிவுகளை அவர்களே தீர்மானிப்பது..
யாருக்கும் தெரியாமல் மறைத்து எழுதிக்கொண்டு ஓடி சீட்டை வாங்கி கால்ச்சட்டைக்குள் பதுக்கிவைப்பது..குடை,ஹெல்மெட்,மஞ்சள் பை,தண்ணீர்பாட்டில் என ஒரு யாத்திரைக்கு கிளம்பிவருவதுபோல் வரும் கூட்டம்..

சாமிகளுக்கே பணக்காரபேதங்கள் இருக்கும் போது குதிரைகளுக்கு இருக்காதா என்ன?
அவர்களுக்கென்று ஒரு வாசலும் இருக்கிறது..அவர்கள் உள்ளே போய்விடுகிறார்கள்..அங்கே அவர்களுக்கு தேவையான எல்லாம் இருக்கிறது...
முக்கியமாய் வாசலில் ATM இருக்கிறது.

பந்தயங்கள் கட்டுகிறார்கள்..பரிதவிப்போடு காத்திருக்கிறார்கள்..முடிவு தெரிந்தவுடன் சிலர் சிரிக்கிறார்கள்..பலர் குதிரையின் அம்மாவையும் திட்டுகிறார்கள்..பீடி குடிக்கிறார்கள்.
எளிதில் களைவதில்லை இவர்கள்..மறுநாளைக்கான போட்டிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஓடிக்கொண்டிருக்கும் சென்னையில் ,
இவர்கள் குதிரைகள் ஓட ....சும்மா இருக்கிறார்கள்.

எத்தனை மனித உழைப்புநாட்கள் .
இங்கே நேரம் தின்றுகொண்டிருக்கிறார்கள்..
சென்னையின் மிகப்பிரதான இடத்தில் விலங்கினைப்படுத்தி நடக்கும் இந்த விலங்குச் சூதாட்டத்தில் எத்தனை விரயங்கள்...

எல்லாப்பாதுகாப்பும் செய்தாலும் விலங்கு வதை என ஜல்லிக்கட்டுக்கு தடைபோடும் அங்கீகாரங்களின் கண்களுக்கு இது தெரியவே தெரியாதா?

குதிரைகளின் மீதேறி ஓடி சூதாடும் இந்த பிழைப்பில் யாருக்கு லாபம்...நிச்சயமாய் சிலருக்குத்தான்..
எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது இந்த சூதாட்டம் குதிரைகளின் திறமையினால் இல்லை.
சில மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பது...இருந்தும் கட்டுகிறார்கள்...

ஒருவேளை குதிரைப்பந்தயமைதானம் இருப்பது தான் ஒருநகருக்கு பெருமையெனில் அது சகித்துக்கொள்ளக்கூடியது இல்லை...

பணக்கார நாடுகளுக்கு சரி...ஒரு மழையும் தாங்கமுடியாமல் தவிக்கும் நமக்கு இது தேவைப்படாது



13 கருத்துகள்:

  1. எதை பற்றியுமு கவலைப்படாதவர்களுக்கும் கவலை இருக்கிறது யார் யாரை வெல்லப்போகிறோம் என்று நினைக்கும் பொழுதுகளில்!
    பசியின்மையின்போதும் நேரங்களை தின்று செரிக்கிறார்கள் பணமிக்க மனிதருகள்

    பதிலளிநீக்கு
  2. என்னவென்று சொல்வது...? முட்டாள்தனமான மோகம்...

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் முட்டாள்தனமான மோகம்தான்

    பதிலளிநீக்கு
  4. மிகமிக சரியான கட்டுரை நண்பரே மனிதனை கெட்டசெய்கள் மட்டும் உடனே சென்றடைந்து விடுகின்றன...

    பதிலளிநீக்கு
  5. குதிரை பந்தயம் நகரத்துக்கு சரி.. நரகத்துக்கு ஏன்?

    பதிலளிநீக்கு
  6. தில்லி நகரிலும் இப்படி குதிரைப்பந்தயம் உண்டு. அந்த வழியாக பல முறை சென்றிருந்தாலும் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை! தேவையுமில்லை!

    சூதின் மீதான மோகம்.... என்று தணியுமோ!

    பதிலளிநீக்கு
  7. குதிரைகள் பாவம்! அவர்கள் ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும் குதிரைகளுக்கு அது அவசியம்தான் ஆனால் நாம் அவற்றின் மீது பணம் கட்டி சூதாடுவது ..ம்ம்ம் என்னத்த சொல்ல...அவற்றைப் பராமரிப்பதற்கு எவ்வளவு மெனக்கெடுவார்கள் தெரியுமா மெனக்கெட்டால் பரவாயில்லை சில சமயம் அவற்றைத் துன்புறுத்தவும் செய்வார்கள் பழக்குகின்றேன் என்று...கேடு கெட்ட மனிதர்கள்...

    பதிலளிநீக்கு